தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணையத்தில் படிக்க.

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 22

அத்தியாயம் இருபத்திரண்டு
"நிஜமாக நீதானா?"


மரத்தடியில் வந்து நின்ற குந்தவிதேவி சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள். விக்கிரமன் திரும்பிப் பார்க்கும் வழியாக இல்லை. காவேரியின் நீர்ப் பிரவாகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை. ஒரு சிறு கல்லை எடுத்து விக்கிரமனுக்கு அருகில் ஜலத்தில் போட்டாள். 'கொடக்' என்ற சத்தத்துடன் கல் அப்பிரவாகத்தில் விழுந்து முழுகிற்று. சிறு நீர்த் துளிகள் கிளம்பி விக்கிரமன் மேல் தெறித்தன. குந்தவியின் யுக்தி பலித்தது. விக்கிரமன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் அகல விரிந்தன. கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான். அவனுடைய உதடுகள் சற்றுத் திறந்தன. ஏதோ பேச யத்தனிப்பது போல். ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் காவேரியின் பிரவாகத்தை நோக்கினான். குந்தவி இன்னும் சற்று நேரம் நின்றாள். பிறகு மரத்தடியிலிருந்து வந்து நதிக்கரையில் விக்கிரமனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த பிறகு விக்கிரமனும் இரண்டு மூன்று தடவை அவள் பக்கம் திரும்பினான். ஒவ்வொரு தடவையும் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். 
சிறிது நேரத்துக்குப் பிறகு குந்தவி, "நான் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தாள். விக்கிரமன் மிகவும் அதிசயமடைந்தவனைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்து, "நீ பேசினாயா?" என்று கேட்டான். "ஆமாம். நான் ஊமையில்லை! என்றாள் குந்தவி. குன்றாத அதிசயத்துடன் விக்கிரமன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். குந்தவி மறுபடியும் போகத் தொடங்கினாள். "ஏன் போகிறாய்?" என்றான் விக்கிரமன் தழுதழுத்த குரலில். "நீர் பேசுகிற வழியைக் காணோம். அதனால்தான் கிளம்பினேன்" என்று சொல்லிக் கொண்டே குந்தவி மறுபடியும் விக்கிரமனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். "எனக்குப் பயமாயிருந்தது!" என்றான் விக்கிரமன். "என்ன பயம்? ஒரு அபலைப் பெண்ணைக் கண்டு பயப்படுகிற நீர் தனி வழியே கிளம்பலாமா?" "உன்னைக் கண்டு பயப்படவில்லை." "பின்னே?" "நான் காண்பது கனவா அல்லது ஜுர வேகத்தில் தோன்றும் சித்தப்பிரமையோ என்று நினைத்தேன். பேசினால் ஒரு வேளை பிரமை கலைந்துவிடுமோ என்று பயந்தேன்." குந்தவி புன்னகையுடன், "இப்பொழுது என்ன தோன்றுகிறது? கனவா, பிரமையா?" என்றாள். "இன்னமும் சந்தேகமாய்த்தானிருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால்....?" "இருந்தால் என்ன?" "நிஜமாக நீதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வேன்." 
இவ்விதம் சொல்லி விக்கிரமன் தன்னுடைய கையைக் குந்தவியின் கன்னத்தின் அருகே கொண்டு போனான். ஜுரக் கனவுகளில் நிகழ்ந்தது போல் அந்த முகம் உடனே மறைந்து போகவில்லை. குந்தவி தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. விக்கிரமனுடைய உள்ளங்கை, மலரின் இதழ் போல் மென்மையான குந்தவியின் கன்னத்தைத் தொட்டது. பிறகு, பிரிய விருப்பமில்லாதது போல் அங்கேயே இருந்தது. குந்தவி அந்தக் கையைப் பிடித்து அகற்றி, பழையபடி அவனுடைய மடிமீது வைத்தாள். புன்னகையுடன், "உம்முடைய சந்தேகம் தீர்ந்ததா? நிச்சயம் ஏற்பட்டதா?" என்றாள். "சந்தேகம் தீர்ந்தது! பல விஷயங்கள் நிச்சயமாயின" என்றான் விக்கிரமன். "என்னென்ன?" "நிஜமாக நீதான் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பிரமையோ கனவோ அல்ல என்பது ஒன்று." "அப்புறம்?" "நீ கையினால் தொட முடியாத தெய்வ கன்னிகையல்ல; உயிரும் உணர்ச்சியுமில்லாத தங்க விக்கிரகமும் அல்ல; சாதாரண மானிடப் பெண்தான் என்பது ஒன்று." "இன்னும் என்ன?" "இனிமேல் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம் என்பது ஒன்று." 
குந்தவி வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு விக்கிரமனைப் பார்த்து, "என்னை உமக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். "ஞாபகமா? நல்ல கேள்வி கேட்டாய்! உன்னைத் தவிர வேறு எந்த ஞாபகமாவது உண்டா என்று கேட்டிருந்தால் அதிகப் பொருத்தமாயிருக்கும். பகலிலும், இரவிலும், பிரயாணத்திலும், போர்முனையிலும், கஷ்டத்திலும், சுகத்திலும் உன் முகம் என் மனத்தை விட்டு அகன்றதில்லை. மூன்று வருஷ காலமாக நான் எங்கே போனாலும், எது செய்தாலும், என் இருதய அந்தரங்கத்தில் உன் உருவம் இருந்து கொண்டுதானிருந்தது." "என்ன சொல்கிறீர்? நான் உம்மை மாமல்லபுரத்து வீதியில் சந்தித்துப் பத்து நாள்தானே ஆயிற்று? மூன்று வருஷமா?...." என்றாள் குந்தவி கள்ளச் சிரிப்புடனும் அவ நம்பிக்கையுடனும். விக்கிரமன் சற்று நேரம் திகைத்துப் போய் மௌனமாயிருந்தான். பிறகு, "ஓஹோ! பத்து நாள்தான் ஆயிற்று?" என்றான். "பின்னே, மூன்று வருஷம் ஜுரம் அடித்துக் கிடந்தீரா?" "சரிதான்; ஜுரத்தினால்தான் அத்தகைய பிரமை எனக்கு உண்டாகியிருக்கிறது. உனக்கும் எனக்கும் வருஷக்கணக்கான சிநேகிதம் என்று தோன்றுகிறது!" 
 
"ஒரு வேளை மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்ததற்கு முன்னாலேயே எப்போதாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதோ?" என்று குந்தவி கேட்டாள். விக்கிரமன் சற்று யோசித்து, "எனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி வரவில்லை. மனம் குழம்பியிருக்கிறது, அதிலும்...." என்று தயங்கினான். "அதிலும் என்ன?" என்று கேட்டாள் குந்தவி. "அதிலும் உன்னுடைய நீண்ட கரிய விழிகளைப் பார்த்தேனானால் நினைவு அடியோடு அழிந்து போகிறது. என்னையும், நான் வந்த காரியத்தையும், இவ்வுலகத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்! வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?" "உமக்கு இன்னும் ஜுரம் குணமாகவில்லை. அதனால்தான் இப்படிப் பிதற்றுகிறீர். நீர் இங்கே தனியாக வந்திருக்கக் கூடாது?" "இல்லை; எனக்கு ஜுரமே இப்போது இல்லை. நீ வேணுமானால் என் கையைத் தொட்டுப்பார்!" என்று விக்கிரமன் கையை நீட்டினான். குந்தவி கையை லேசாகத் தொட்டுவிட்டு, "அப்பா, கொதிக்கிறதே!" என்றாள். "இருக்கலாம்; ஆனால் அது ஜுரத்தினால் அல்ல...." "இருக்கட்டும்; கொஞ்சம் என் கண்களைப் பாராமல் வேறு பக்கம் பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லும். நீர் யார், எங்கிருந்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா? எல்லாமே மறந்து போய்விட்டதா?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம்; இங்கே வந்து நதிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டேன். 
செண்பகத் தீவிலிருந்து கப்பலில் வந்தேன். இரத்தின வியாபாரம் செய்வதற்காக....." "மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்த விஷயமும் ஞாபகம் இருக்கிறதல்லவா?" "இருக்கிறது." "அரண்மனைக்கு வாரும்; சக்கரவர்த்தியின் மகள் இரத்தினம் வாங்குவாள், என்று சொன்னேனே, அது நினைவிருக்கிறதா?" "இப்போது நினைவு வருகிறது." "நீர் ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர்?" விக்கிரமன் சற்று நிதானித்து "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். "இரத்தின வியாபாரிகள் எப்போதாவது உண்மையைச் சொல்லும் வழக்கம் உண்டு என்றால் நீரும் உண்மையைச் சொல்லும்." "சத்தியமாய்ச் சொல்லுகிறேன் உன்னை இன்னொரு தடவை பார்த்தேனானால், மறுபடியும் உன்னைப் பிரிந்து வருதற்கு மனம் இடங்கொடாது என்ற காரணத்தினால்தான். அது ரொம்பவும் உண்மையான பயம் என்று இப்போது தெரிகிறது...." "செண்பகத் தீவில் இப்படியெல்லாம் புருஷர்கள் பெண்களிடம் பேசி ஏமாற்றுவது வழக்கமா? இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?" என்று குந்தவி ஏளனமாகக் கேட்டாள். "நீ ஒன்றை மறந்து விடுகிறாய். நான் செண்பகத் தீவிலிருந்து வந்தேனென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தச் சோழ நாட்டில்தான். இந்தப் புண்ணியக் காவேரி நதியின் கரையில்தான் நான் ஓடியாடி விளையாடினேன். இந்த நதியின் பிரவாகத்தில்தான் நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்த அழகிய சோழநாட்டின் குளிர்ந்த மாந்தோப்புகளிலும் தொன்னந்தோப்புகளிலும் ஆனந்தமாக எத்தனையோ நாட்கள் உலாவினேன்! ஆகா! நான் செண்பகத் தீவிலிருந்த நாட்களில் எத்தனை நாள் இந்த நாட்டை நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன்! இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன்! மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன்!... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது! உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்று விக்கிரமன் ஆர்வத்துடன் கூறினான். "எனக்கு நீர் நன்றி செலுத்துவதில் என்ன பிரயோஜனம்? உண்மையில் நீர் நன்றி செலுத்த வேண்டியது கோமகள் குந்தவிக்கு..." "யார்?" "சக்கரவர்த்தியின் மகள் குந்தவி தேவியைச் சொல்லுகிறேன். உம்மை இங்கே அழைத்து வருவதற்கு அவர்தானே அனுமதி தந்தார்? அவருக்குத்தான் நீர் கடமைப்பட்டிருக்கிறீர்." "அப்படியா? எனக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. என் மனம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. இந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன்; காவேரி நதிக்கரையில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுகிறேன். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. நான் எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தேன் என்பதை விவரமாய்ச் சொல்ல வேண்டும். முதலில், நீ யார் உன் பெயர் என்னவென்று தெரிவித்தால் நல்லது." "மாமல்லபுரத்தில் சொன்னேனே, ஞாபகம் இல்லையா?" "உன்னைப் பார்த்த ஞாபகம் மட்டுந்தான் இருக்கிறது; வேறொன்றும் நினைவில் இல்லை." "என் பெயர் ரோகிணி சக்கரவர்த்தித் திருமகள் குந்தவி தேவியின் தோழி நான்." உண்மையில், அந்தச் சந்திப்பின் போது குந்தவி தன் பெயர் மாதவி என்று சொன்னாள். அவசரத்தில் சொன்ன கற்பனைப் பெயர் ஆனதால் அவளுக்கே அது ஞாபகமில்லை. இப்போது தன் பெயர் 'ரோகிணி' என்றாள். அதைக் கேட்ட விக்கிரமன் சொன்னான்: "ரோகிணி! - என்ன அழகான பெயர்? - எத்தனையோ நாள் அந்தச் செண்பகத் தீவில் நான் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. பிறைச் சந்திரனுக்கு அருகில் ரோகிணி நட்சத்திரம் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், உன்னுடைய கண்களின் ஜொலிப்பிற்கு அந்த ரோகிணி நட்சத்திரங்களின் ஜொலிப்பு கொஞ்சமும் இணையாகாது." "உம்முடைய வேஷத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்...."என்றாள் குந்தவி. விக்கிரமன் சிறிது திடுக்கிட்டு, "வேஷமா?....' என்றான். "ஆமாம்; உண்மையில் நீர் இரத்தின வியாபாரி அல்ல, நீர் ஒரு கவி. ஊர் சுற்றும் பாணன், உம்முடைய மூட்டையில் இருந்தது இரத்தினம் என்றே நான் நம்பவில்லை!" விக்கிரமன் சற்றுப் பொறுத்துச் சொன்னான்! - "இப்போது உன்னை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. ஆனால் அந்த மூட்டையில் இருந்தவை இரத்தினங்கள்தான் என்று ஒரு நாள் உனக்கு நிரூபித்துக் காட்டுவேன். நான் கவியுமல்ல, என்னிடம் அப்படி ஏதாவது திடீரென்று கவிதா சக்தி தோன்றியிருக்குமானால், அதற்கு நீதான் காரணம். உன்னுடைய முகமாகிய சந்திரனிலிருந்து பொங்கும் அமுத கிரணங்களினால்...."
 "போதும், நிறுத்தும் உம்முடைய பரிகாசத்தை இனிமேல் சகிக்க முடியாது" என்றாள் குந்தவி. "பரிகாசமா?" என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பிறகு, "உனக்குப் பிடிக்காவிட்டால் நான் பேசவில்லை. நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைச் சொன்னால் ரொம்பவும் நன்றி செலுத்துவேன்" என்றான். "காஞ்சியிலிருந்து உறையூர் வரும் பாதையில் மகேந்திர மண்டபம் ஒன்றில் ஜுர வேகத்தினால் பிரக்ஞை இழந்து நீர் கிடந்தீர். அங்கு எப்படி வந்து சேர்ந்தீர்? அதற்கு முன்னால் என்னென்ன நேர்ந்தது என்று நீர் சொன்னால், பிறகு நடந்ததை நான் சொல்லுகிறேன்." விக்கிரமன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் ஒருவாறு சுருக்கமாகச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குந்தவி தேவி கூறினாள்: "சக்கரவர்த்தியின் மூத்த குமாரர் மகேந்திரரும், குந்தவி தேவியும் காஞ்சியிலிருந்து உறையூருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். தேவியுடன் நானும் வந்தேன், அந்தக் காட்டாற்றைத் தாண்டி வந்தபோது, மகேந்திர மண்டபத்துக் குள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று அலறும் குரல் கேட்டது. நான் அம்மண்டபத்துக்குள் வந்து பார்த்தேன். மாமல்லபுரத்தில் பார்த்த இரத்தின வியாபாரி நீர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு குந்தவி தேவியிடம் உம்மையும் அழைத்து வர அனுமதி கேட்டேன். அவர் கருணை செய்து சம்மதித்தார். உமக்கு உடம்பு பூரணமாகக் குணமாகும் வரையில் இங்கேயே உம்மை வைத்திருக்கவும் அனுமதித்திருக்கிறார்." "ஜுரக் கனவுகளில் நான் அடிக்கடி உன்னுடைய முகத்தைக் கண்டேன். அதெல்லாம் கனவல்ல; உண்மையிலேயே உன்னைத் தான் பார்த்தேன் என்று இப்போது தெரிகிறது." "இருக்கலாம்; நீர் ஜுரமடித்துக் கிடக்கையில் அடிக்கடி உம்மை நான் வந்து பார்த்தது உண்மைதான். இவ்வளவுக்கும் குந்தவி தேவியின் கருணைதான் காரணம்." விக்கிரமன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். குந்தவி கேட்டாள்: "சக்கரவர்த்தியின் மகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன். ஒரு வார்த்தையாவது நீர் நன்றி தெரிவிக்கவில்லையே? அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு?" "பல்லவ குலத்தைச் சேர்ந்த யாருக்கும் நான் நன்றி செலுத்த முடியாது!" "குந்தவி தேவியை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர். பிறகு என்னைக்கூட உடனே மறந்து விடுவீர்." "சத்தியமாய் மாட்டேன். ஆயிரம் குந்தவி தேவிகள் உனக்கு இணையாக மாட்டார்கள்! இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா?" "யார் இருவரும்?" "அண்ணனும் தங்கையும்." "யுவராஜா மகேந்திரர் இங்கே இல்லை. அவர் திரும்பவும் காஞ்சிக்குப் போய்விட்டார். சீன தேசத்திலிருந்து யாரோ ஒரு யாத்திரிகர் வந்திருக்கிறாராம். அவர் இந்தப் பாரதநாடு முழுவதும் யாத்திரை செய்து விட்டுக் காஞ்சிக்கு வருகிறாராம். 'யுவான் சுவாங்' என்ற விசித்திரமான பெயரையுடையவராம். சக்கரவர்த்திக்கு இச்சமயம் முக்கிய வேலை வந்திருப்பதால், அந்த யுவான் சுவாங்கை உபசரித்து வரவேற்பதற்காக யுவராஜா உடனே வரவேண்டுமென்று செய்தி வந்தது. இங்கு வந்த இரண்டாம் நாளே மகேந்திரர் புறப்பட்டுப் போய்விட்டார். பார்த்தீரா, எங்கள் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் கடல்களுக்கப்பால் வெகு தூரத்திலுள்ள தேசங்களில் எல்லாம் கூடப் பரவியிருப்பதை? நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி?" என்று கேட்டாள் குந்தவி.

"ஆம்; அங்கேயெல்லாம் கூடப் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் பரவித்தான் இருக்கிறது." "அப்படிப்பட்ட சக்கரவர்த்தியின் ஆளுகையில் இருப்பது இந்தச் சோழ நாட்டுக்குப் பெருமையில்லையா? இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே? அது நியாயமா? உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று குந்தவி கேட்டு விக்கிரமனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கினாள். விக்கிரமன் அவளை நிமிர்ந்து நோக்கி, "என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தச் சோழநாட்டில் அடிமையாயிருப்பதைக் காட்டிலும், செண்பகத் தீவில் சுதந்திரப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்" என்றான். "நிச்சயமாகவா? என் நிமித்தமாகக்கூட நீர் இங்கே இருக்கமாட்டீரா?" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, "அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்!" என்றான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அறிந்து கொள்ளாதது போல் நடித்தார்கள். இந்த நாடகம் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும்!

வியாழன், 19 ஜூன், 2014

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 21

அத்தியாயம் இருபத்தொன்று 
வஸந்தத் தீவில்

ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான். நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "குழந்தாய்! உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா?" என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். "இறங்குவேன் அப்பா!" என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. "ஐயோ! இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது? ஏன் உயிர் போகமாட்டேனென்கிறது? ஏன் உடம்பு அப்படியே இருக்கிறது?" என்று எண்ணி விக்கிரமன் துடிதுடிக்கிறான். திடீரென்று ஒரு குளிர்ந்த கை அவனுடைய எரியும் கரத்தைப் பற்றுகிறது; இன்னொரு குளிர்ந்த கை அவனுடைய கொதிக்கும் மார்பைத் தொடுகிறது. எரிகிற அந்தத் தீயின் நடுவில் செந்தாமரையை யொத்த குளிர்ந்த முகம் ஒன்று தோன்றி அவனைக் கருணையுடன் நோக்குகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் அத்தீயிலிருந்து வெளியே வருகிறான். தன்னை அவ்விதம் கையைப் பிடித்து அழைத்து வந்த தெய்வப் பெண்ணுக்கு நன்றி செலுத்த அவன் விரும்புகிறான். ஆனால், அத்தெய்வப் பெண்ணைக் காணவில்லை.

விக்கிரமன் புலிக்கொடி பறக்கும் பெரிய போர்க்கப்பலில் பிரயாணம் செய்கிறான். கப்பலில் நூற்றுக்கணக்கான சோழ நாட்டு வீரர்கள் அங்குமிங்கும் உலாவுகிறார்கள். கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பிய போது பார்த்திப மகாராஜாவும் அருள்மொழி ராணியும் விக்கிரமனை ஆசீர்வதித்து, "வெற்றி வீரனாய்த் திரும்பி வா!" என்று வாழ்த்தி அனுப்பிய காட்சி அவன் மனக் கண் முன்னால் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று பெரும் புயலும் மழையும் அடிக்கின்றன; கப்பல் கவிழ்கின்றது. விக்கிரமன் கடல் அலைகளுடன் தன்னந்தனியாகப் போராடுகிறான். உடம்பு ஜில்லிட்டுப் போய் விட்டது; கைகால்கள் மரத்து விட்டன. "இனித் தண்ணீரில் மூழ்கிச் சாகவேண்டியதுதான்" என்று தோன்றிய சமயத்தில் இந்திர ஜாலத்தைப் போல் ஒரு படகு எதிரே காணப்படுகிறது. படகில் பூரண சந்திரனையொத்த முகமுடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். எங்கேயோ, எப்போதோ, எந்த ஜன்மத்திலோ பார்த்த முகந்தான் அது. அந்தப் பெண் அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் விடுகிறாள். அவள் முகமெல்லாம் நனைந்திருக்கிறது. அலைத்துளிகள் தெறித்ததனாலா, கண்ணீர் பெருகியதனாலா என்று தெரியவில்லை. அவளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று விக்கிரமன் ஆசைப்படுகிறான். பேச முயற்சி செய்கிறான், ஆனால் பேச்சு வரவில்லை. தொண்டையை அடைத்துக் கொள்கிறது.

விக்கிரமன் ஒரு கொடிய பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கிறான். வெயிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. கால் ஒட்டிக் கொள்கிறது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நா வரண்டுவிட்டது, சொல்ல முடியாத தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் மரம், செடி, நிழல் என்கிற நாமதேயமே கிடையாது. எங்கேயோ வெகு தூரத்தில் தண்ணீர் நிறைந்த ஏரி மாதிரி தெரிகிறது. அதை நோக்கி விரைந்து செல்கிறான். எவ்வளவு விரைவாகச் சென்றாலும் ஏரி இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. "ஐயோ! கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா?" என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் 'இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்!' என்ற எண்ணம் உண்டாகிறது. கீழே கொதிக்கும் மணலில் விழுந்தவனை யாரோ மிருதுவான கரங்களினால் தொட்டுத் தூக்கும் உணர்ச்சி ஏற்படுகிறது. யார் என்று பார்ப்பதற்காகக் கண்ணைத் திறக்க முயற்சி செய்கிறான்.

கண்கள் திறந்துதானிருக்கின்றன - ஆனால் பார்வை மட்டும் இல்லை. "ஐயோ! இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ?" என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. "ஆகா! காவேரி நதியின் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது!" என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. 'ஆகா! எதிரில் தன் முகத்தருகில் தெரியும் அந்த முகம், மாதுளை மொட்டைப் போன்ற செவ்விதழ்களில் புன்னகை தவழ, விரிந்த கருங் கண்களினால் தன்னைக் கனிந்து பார்க்கும் அந்த முகம். தான் ஏற்கெனவே பார்த்திருக்கும் அந்த முகம்தான். எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து தன்னைத் தப்புவித்த தெய்வப் பெண்ணின் முகந்தான். அந்த இனிய முகத்தைத் தொடவேண்டுமென்ற ஆசையுடன் விக்கிரமன் தன் கையைத் தூக்க முயன்றான்; முடியவில்லை. கை இரும்பைப் போல் கனக்கிறது. மறுபடியும் கண்கள் மூடுகின்றன, நினைவு தவறுகிறது.

இப்படியெல்லாம் சுவர்க்க இன்பத்தையும், நரகத் துன்பத்தையும் மாறி மாறி அநுபவித்த பிறகு கடைசியில் ஒருநாள் விக்கிரமனுக்குப் பூரணமான அறிவுத் தெளிவு ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. காட்டாற்றங்கரையில் மகேந்திர மண்டபத்தில் அன்றிரவைத் தானும் பொன்னனும் கழித்தது வரையில் நினைவுபடுத்திக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான், ஏதோ ஏற்கனவே தெரிந்த இடம்போல் தோன்றியது. நன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்துக்கு எல்லையில்லாமற் போயிற்று. ஆமாம்; உறையூரில் காவேரித் தீவிலுள்ள வஸந்த மாளிகையில் ஒரு பகுதிதான் அவன் படுத்திருந்த இடம். "இங்கே எப்படி வந்தோம்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள்?" பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே? தாபஜ்வரத்தின் வேகத்தில் தான் கண்ட பயங்கர இன்பக் கனவுகளெல்லாம் இலேசாக ஞாபகம் வந்தன. அந்த அதிசய மாயக்கனவுகளில் அடிக்கடி தோன்றிய பெண்ணின் முகம் மட்டும் கனவன்று - உண்மை என்று அவனுக்கு உறுதி ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பாதச் சிலம்பின் ஒலி கேட்டபோது, அவள் தானா என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை; யாரோ பணிப்பெண்கள், முன்பின் பார்த்தறியாதவர்கள்.

இன்னும் வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். பணியாட்களும் பணிப்பெண்களும் அடிக்கடி வந்து வேண்டிய சிசுருஷை செய்தார்கள். ஆனால், பொன்னன் வரவில்லை; அந்தப் பெண்ணையும் காணவில்லை. பணியாட்களிடமும், பணிப்பெண்களிடமும் விவரம் எதுவும் கேட்பதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவர்களோ ஊமைகளைப் போல் வந்து அவரவர் களுடைய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவ்விதம் ஒரு பகல் சென்றது. இரவு தூக்கத்தில் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து விக்கிரமனுக்கு அங்கே படுத்திருக்க மனம் கொள்ளவில்லை. உடம்பில் நல்ல பலம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்; எழுந்து நடமாடினான். ஒருவிதக் களைப்பும் உண்டாகவில்லை, திடமாகத்தான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து தோட்டத்தில் பிரவேசித்தான். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனைத் தடுக்கவில்லை. விக்கிரமன் மேலும் நடந்தான். நதிக்கரையை நோக்கி மெதுவாக நடந்து சென்றான் பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குளிர்ந்த காவேரித் தீவைப் பார்க்கப் பார்க்க, அவன் மனம் பரவசமடைந்தது. அந்த மாமரங்களின் நிழலில் நடப்பது அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. மெள்ள மெள்ள நடந்து போய்க் காவேரிக் கரையை அடைந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனுடைய மனதில் சாந்தியும் இன்ப உணர்ச்சியும் மேலிட்டிருந்தன.

காவேரி நதியின் இனிய நீர்ப்பிரவாகத்தை விக்கிரமன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் ஒரு முகம் பிரதிபலித்தது! அது அந்தப் பழைய தெய்வப் பெண்ணின் முகந்தான். காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் தன்னைக் கருணையுடன் நோக்கிய முகந்தான். தாபஜ்வரக் கனவுகளில் தோன்றிச் சாந்தியும் குளிர்ச்சியும் அளித்த முகமும் அதுதான். அந்தப் பெண்ணை மறுபடியும் காணப் போகிறோமா என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில், அவனுக்குப் பின்புறமாக வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு குந்தவி தேவி நின்றாள்.

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 20

அத்தியாயம் இருபது
பொன்னனும் சிவனடியாரும்

சிவனடியாரைப் பார்த்த பொன்னன் ஏன் அவ்வளவு ஆச்சரியமடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. குதிரையிலிருந்து இறங்கி அந்தச் சிற்ப வீட்டுக்குள் நுழைந்தவர் ஒருவராயும், வெளியில் வந்தவர் இன்னொருவராயும் இருந்ததுதான் காரணம். இரண்டு பேரும் ஒருவர்தானா, வெவ்வேறு மனிதர்களா? இந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் பொன்னன் முகத்தில் வெளிப்படுத்திய போதிலும் வார்த்தைகளினால் வெளியிடவில்லை. வெளியிடுவதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவனைப் பார்த்தவுடனேயே, சிவனடியார், "பொன்னா! எவ்வளவு சரியான சமயத்தில் வந்தாய்? இப்போதுதான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன். உறையூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் சற்று நேரம் கழித்து வந்திருந்தாயானால் என்னைப் பார்த்திருக்க மாட்டாய்..." என்று பரபரப்புடன் பேசிக் கொண்டே போனார். திண்ணையில் அவர்கள் உட்கார்ந்து கொண்டதும், "பொன்னா! சீக்கிரம் உன் சமாசாரத்தைச் சொல்லு! ரொம்ப முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். மகாராணியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" என்று கேட்டார்.

பொன்னன், "தெரிந்தது, சுவாமி!" என்றான். பிறகு, தான் கொல்லிமலை அடிவாரத்துக்குப் போனது. அருவியைப் பிடித்துக்கொண்டு மேலேறியது, அங்கே ஒற்றைக் கை மனிதனும் குள்ளனும் வந்ததைக் கண்டு மறைந்திருந்தது. அவர்கள் திரும்பி வருவார்களென்று எதிர்பார்த்து மூன்று நாள் காத்திருந்துவிட்டுத் திரும்பியது ஆகிய விவரங்களைச் சொன்னான். காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனைக் காப்பாற்றியது முதலியவற்றைச் சொல்லவில்லை. சிவனடியாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமென்று இருந்தான். ஒற்றைக் கை மனிதனுடைய தோற்றத்தைப் பற்றி விவரமாகச் சொல்லும்படி சிவனடியார் கேட்க, பொன்னன் அவ்விதமே அவனுடைய பயங்கரத் தோற்றத்தை வர்ணித்து விட்டு, "சுவாமி! அந்த மனிதன் யார்? உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். "பொன்னா! பார்த்திப மகாராஜாவின் பத்தினி அந்தக் கொல்லி மலையிலேதான் எங்கேயோ இருக்கிறாள் சந்தேகமில்லை. இதுவரையில் எனக்கு அர்த்தமாகாத விஷயங்கள் பல இப்போது அர்த்தமாகின்றன. அந்த மனிதன் யார் என்றா கேட்கிறாய்? - மகா புருஷர்களும் பக்த சிரோமணிகளும் தோன்றிய இந்தப் புண்ணிய நாட்டில் நரபலி என்னும் பயங்கர வழக்கத்தைப் பரப்பி வரும் மகா கபால பைரவன்தான் அவன். நானும் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறேன். அவனை நேருக்கு நேர் காண வேண்டுமென்று. இன்று வரையில் முடியவில்லை. அவனைப் பற்றி இன்னொரு சந்தேகம் எனக்கிருக்கிறது. பொன்னா! ஏன் என் கண்ணில் அகப்படாமல் அவன் தப்பித் திரிகிறான் என்பதை ஒருவாறு ஊகிக்கிறேன்; எல்லா உண்மையையும் சீக்கிரத்தில் நாம் இரண்டு பேருமாகக் கண்டுபிடிக்கப் போகிறோம்.

"பொன்னா! அதற்கு முன்னால் நமக்கு இன்னும் முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. உனக்கு இப்போது ரொம்பவும் ஆச்சரியமளிக்கும் விஷயம் ஒன்றைத் சொல்லப் போகிறேன். சோழநாட்டு இளவரசர் திரும்ப வந்திருக்கிறார்" என்று சொல்லிச் சிவனடியார் பொன்னனுடைய முகத்தை உற்றுப் பார்த்தார். அவனுடைய முகத்தில் சிறிது வியப்புக் குறி காணப்பட்டதே தவிர, குதூகலமும் மகிழ்ச்சியும் தோன்றாதது கண்டு, சிவனடியார், "என்ன பொன்னா உனக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். பொன்னன் இன்னும் சிறிது ஜாக்கிரதையுடன், "தங்களுடைய வார்த்தையில் எனக்கு அவநம்பிக்கை ஏற்படுமா, சுவாமி? ஆனால், இவ்வளவு அபாயத்துக்குத் துணிந்து இளவரசர் ஏன் வந்தார் என்றுதான் கவலையாயிருக்கிறது" என்றான். "உண்மைதான் பொன்னா! இளவரசருக்கு ஏதோ அபாயம் நேர்ந்துவிட்டது. உறையூருக்குப் போகும் பாதையிலேதான் ஏதோ நேர்ந்திருக்கிறது. நாம் உடனே கிளம்பிப் போய்ப் பார்க்க வேண்டும். அருள்மொழித் தேவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இளவரசரைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார். பொன்னன் இப்போது உண்மையாகவே பேராச்சரியம் அடைந்தவனாய், "சுவாமி! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?

இளவரசரை நீங்கள் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? அவருக்கு வழியில் ஆபத்து என்று என்ன முகாந்திரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்?" என்று கேட்டான். "பொன்னா! இதென்ன உன்னிடம் இந்த மாறுதல்? நான் சொல்வதில் சந்தேகப்பட்டு முகாந்திரம் கேட்கக் கூட ஆரம்பித்து விட்டாயே? - நல்லது, சொல்கிறேன் கேள்! இளவரசரை நானே பார்த்தேன்; பேசினேன். நான்தான் உறையூருக்கும் அனுப்பினேன்...." "எதற்காக சுவாமி?" "எதற்காகவா? ஜன்ம தேசத்தைப் பார்த்துவிட்டு வரட்டும் என்றுதான். பொன்னா! ஒருவனுக்குத் தன்னுடைய பிறந்த நாட்டில் அன்பு எப்போது பூரணமாகும் என்று உனக்குத் தெரியுமா? கொஞ்ச காலமாவது அயல் தேசத்திலிருந்து விட்டுத் திரும்பிவரும் போதுதான். இரண்டு மூன்று வருஷம் அயல்நாட்டிலிருந்து விட்டு ஒருவன் திரும்பித் தன் தாய்நாட்டுக்கு வரும்போது, பாலைவனப் பிரதேசமாயிருந்தாலும், அது சொர்க்க பூமியாகத் தோன்றும். வளங்கொழிக்கும் சோழ நாட்டைப் பற்றிக் கேட்க வேண்டுமா? உங்கள் இளவரசருக்கு திரும்பவும் இந்நாட்டை விட்டுப் போகவே மனம் வராதபடி செய்ய வேணுமென்று விரும்பினேன்; பார்த்திப மகாராஜாவுக்குப் போர்க்களத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு. ஆனால் வழியில் இப்படி விபத்து ஏற்படக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. ஐயோ பகவானே! நாளை அருள்மொழி ராணி கேட்டால் நான் என்ன செய்வேன்!"

"சுவாமி! இளவரசருக்கு என்ன ஆபத்து நேரிட்டது? அது எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று பொன்னன் கேட்டான். "இன்றைக்கு ரொம்பக் கேள்விகள் கேட்கிறாயே, பொன்னா! என்ன ஆபத்து நேர்ந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ நேர்ந்து மட்டும் இருக்கிறது. அதோ அந்தக் குதிரைக்கு, பகவான் பேசும் சக்தியை மட்டும் அளித்திருந்தால், அது சொல்லும்.... ஆமாம், இந்தக் குதிரைமேல் ஏறிக்கொண்டுதான் உங்கள் இளவரசர் கிளம்பினார். இதே இடத்திலிருந்துதான் புறப்பட்டார். ஆனால், இரண்டு நாளைக்குப் பிறகு குதிரை மட்டும் தனியாகத் திரும்பி வந்திருக்கிறது. இளவரசருக்கு எங்கே, என்ன நேர்ந்தது என்பதை நாம் இப்பொழுது உடனே போய்க் கண்டுபிடிக்க வேண்டும். நீயும் என்னோடு வருகிறாயல்லவா, பொன்னா! உனக்குக் குதிரை ஏறத் தெரியுமா?" என்று சிவனடியார் கேட்டார். "தெரியும் சுவாமி! ஆனால், நான் தங்களுடன் வருவதற்கு முன்னால் தங்களிடம் இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றான் பொன்னன். "என்ன?" என்று சிவனடியார் தம் காதுகளையே நம்பாதவர் போல் கேட்டார். "ஆமாம் இன்னும் சில விவரங்கள் தெரியவேண்டும். முக்கியமாகத் தாங்கள் யார் என்று சொல்ல வேண்டும்" என்றான். சிவனடியாரின் முகத்தில் புன்னகை அரும்பியது. "ஓஹோ! அப்படியா?" என்றார்.

"சற்று முன்னால் சாலையிலிருந்து தாங்கள் குதிரைமீது வந்ததை நான் பார்த்தேன். அப்போது வேறு உருவம் கொண்டிருந்தீர்கள்; இந்த வீட்டுக்குள்ளேயே போய் வெளியே வரும்போது வேறு ரூபத்தில் வந்தீர்கள். ஆனால், இந்த இரண்டு உருவங்களும் தங்களுடைய சொந்த உருவம் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் சந்தேகம் சுவாமி, எனக்கு வெகுநாளாகவே உண்டு. ஆனால், இப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. உண்மையில் தாங்கள் யார் என்று சொன்னால்...." "சொன்னால் என்ன?" "சுவாமி, மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... தாங்கள் அறிந்து கொள்ள விரும்பக்கூடிய விஷயம் எனக்குத் தெரியும், அதைச் சொல்லுவேன், இல்லாவிட்டால் என் வழியே நான் போவேன்...." சிவனடியார் சற்று யோசித்தார். பொன்னனுடைய முகத்தில் உள்ள உறுதிக் குறியைக் கவனித்தார். "பொன்னா! அவசியம் நீ தெரிந்து கொண்டுதான் தீர வேண்டுமா?" "ஆமாம், சுவாமி." "அப்படியானால், சொல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் சொல்லக் கூடாது. பரம இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்" என்றார். "அப்படியே செய்கிறேன், சுவாமி." "போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்வாயா?" "பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்கிறேன், சுவாமி!"

"அப்படியானால், இதோ பார்!" என்று சிவனடியார் அன்று போர்க்களத்தில் பார்த்திபன் முன்னால் செய்தது போல தம்முடைய ஜடா மகுடத்தையும் மீசை தாடிகளையும் நீக்கினார். பொன்னன், "பிரபோ! தாங்கள் தானா?" என்று சொல்லி, அவர் முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். "இதற்கு முன்னால் வள்ளி உனக்குச் சொல்லவில்லையா? பொன்னா!" என்று சிவனடியார் (மீண்டும் ஜடாமகுடம் முதலியவற்றைத் தரித்துக் கொண்டு) கேட்க, "வள்ளி பெரிய கள்ளியாயிற்றே? நிஜத்துக்கு மாறான விஷயத்தைச் சொன்னாள். தங்களைத்தான் அவள் சொல்கிறாளா என்று நான் சந்தேகித்துக் கேட்டேன். இல்லை தாங்கள் பார்த்திப மகாராஜா என்று ஒரு பெரிய பொய் புளுகினாள். அவளை இலேசில் விடுகிறேனா, பாருங்கள்! எனக்கும் இப்போது ஒரு பெரிய இரகசியம் தெரியும். அதை அவளுக்குச் சொல்வேனா?" என்றான். பிறகு, பொன்னன் காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கி இளவரசரைக் காப்பாற்றியது முதல் அவரைக் குந்தவிதேவி தன் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றது வரையில் எல்லா விவரங்களையும் சவிஸ்தாரமாய்ச் சொன்னான். இதற்கு முன்னாலெல்லாம் எதற்கும் ஆச்சரியம் அடையாதவராயிருந்த சிவனடியார் இப்போது அளவிட முடியாத வியப்புடன் பொன்னன் கூறிய விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "பொன்னா! உங்கள் இளவரசரைப் பற்றிய கவலை தீர்ந்தது விக்கிரமன் பத்திரமாயிருப்பான். நாம் அருள்மொழி ராணியைத்தான் தேடி விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 19

அத்தியாயம் பத்தொன்பது 
பொன்னனின் சிந்தனைகள்

பொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத பக்தியும் மரியாதையும் அவளிடம் அவனுக்கு உண்டாயிற்று. தெய்வீக சௌந்தரியம் பொருந்திய இந்தத் தேவியின் உள்ளமும் தெய்வத் தன்மை கொண்டதாக வல்லவா இருக்கிறது? வழியில் அநாதையாய்க் கிடந்தவனைக் தூக்கித் தன்னுடைய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கருணை, தயாளம், பெருந்தன்மை வேண்டும்?

அன்றிரவு பொன்னன் அவ்வூர்க் கோயில் பிராகாரத்தில் படுத்துக் கொண்டே மேலே செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தனை செய்தான். இளவரசரோ சரியான சம்ரக்ஷணையில் இருக்கிறார். குந்தவி தேவியைக் காட்டிலும் திறமையாக அவரைத் தன்னால் கவனிக்க முடியாது. இளவரசர் எங்கே போக விரும்பினாரோ அவ்விடத்துக்கே குந்தவிதேவி அவரை அழைத்துப் போகிறார். ஏதோ சோழ வம்சத்தின் குலதெய்வமே இவ்விதம் ஏற்பாடு செய்ததென்று சொல்லும்படி எல்லாம் நடந்திருக்கிறது. எப்படியும் இளவரசருக்கு உடம்பு நன்றாய்க் குணமாகச் சில தினங்கள் ஆகும். அதுவரைக்கும் அவரைத் தான் பார்க்கவோ, பேசவோ சௌகரியப்படாது. பின்னர், அவருக்கு உடம்பு குணமாகும் வரையில் தான் என்ன செய்வது? பின்னோடு தொடர்ந்து போவதினாலோ, உறையூருக்குப் போய் உட்கார்ந்திருப்பதினாலோ என்ன பிரயோஜனம்? அதைக் காட்டிலும் ராணி அருள்மொழித் தேவியை விடுதலை செய்ய வேண்டிய காரியத்தைப் பார்ப்பது நலமல்லவா? இதற்குச் சிவனடியாரைப் போய்ப் பார்த்து அவருடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அருள்மொழித் தேவியைப் பற்றி ஏதாவது துப்புத் தெரிந்தவுடன் தம்மிடம் வந்து தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறார். தம்மைச் சந்திக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். மாமல்லபுரத்துக்குச் சமீபத்தில் அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கும் சிற்பியின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறார். அங்கே போய் அவரைச் சந்தித்து எல்லா விஷயங்களையும் சொல்லி, அவருடைய யோசனைப்படி நடப்பதுதான் உசிதம் என்று தீர்மானித்தான்.

மறுநாள் காலையில் இராஜ பரிவாரங்கள் பராந்தகபுரத்தை விட்டுக் கிளம்பி உறையூர்ச் சாலையில் போவதைத் தூர இருந்து பொன்னன் பார்த்து, "பகவானே! எங்கள் இளவரசரைக் காப்பாற்று; நான் மாமல்லபுரத்திலிருந்து திரும்பி வருவதற்குள் அவர் உடம்பு பூரணமாய்க் குணமாகி விடவேண்டும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான். பரிவாரங்கள் மறைந்ததும், எதிர்த் திசையை நோக்கி நடக்கலானான். அவனுடைய கால்கள் மாமல்லபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதிலும் உள்ளம் மட்டும் இளவரசர் படுத்திருந்த பல்லக்குடன் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. குந்தவி தேவியின் பராமரிப்பில் இளவரசர் இருப்பதினால் ஏற்படக்கூடிய அபாயம் அவனுக்கு அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. பல்லக்கில் படுத்திருக்கும் நோயாளி உண்மையில் சோழநாட்டு இளவரசர் என்பதைக் குந்தவி அறிந்தால் என்ன ஆகும்? ஜுர வேகத்தில் இளவரசர் பிதற்றும்போது அந்த உண்மை வெளியாகி விடலாமல்லவா? அல்லது வஸந்த மாளிகையில் அவர் நல்லுணர்வு பெற்றதும், திடீரென்று பழைய இடங்களைப் பார்க்கும் வியப்பினால் தாம் இன்னார் என்பதை வெளியிட்டு விடலாமல்லவா? - அதனால் ஒருவேளை ஏதேனும் விபரீதம் விளைந்துவிடுமோ? குந்தவிதேவிக்கு உண்மை தெரிந்தால் அவளுடைய தமையனுக்கும் தெரிந்துதான் தீரும். பிறகு, சக்கரவர்த்திக்கும் தெரியாமலிராது. சக்கரவர்த்தியினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் அல்லவா இளவரசர்? அதை மீறிப் பொய் வேஷத்தில் வந்ததற்குச் சிட்சை மரணமேயல்லவா?

ஆனால், கடவுள் அருளால் அப்படியெல்லாம் ஒன்றும் நேராது என்று பொன்னன் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டான். குந்தவி தேவிக்கு ஒருவேளை உண்மை தெரிந்தால், அவர் இளவரசரைக் காப்பாற்றவே முயல்வார். முன்னம், தேசப் பிரஷ்ட தண்டனை விதிக்கப்பட்ட போதே அவருக்காக மன்னிப்புக் கோரி மன்றாடியதாகக் கேள்விப்பட்டிருக் கிறோமே? அதைப் பற்றிச் சிவனடியார் அருள்மொழி ராணியிடம் எவ்வளவெல்லாம் சொன்னார்?.... சிவனடியாரையும் குந்தவி தேவியையும் பற்றிச் சேர்ந்தாற் போல் நினைத்ததும், பொன்னனுக்கு நேற்றிரவு மகேந்திர மண்டபத்தின் வாசலில் நடந்த சம்பாஷணை நினைவு வந்தது. மனதில் இன்னதென்று சொல்ல முடியாத கவலையும் திகிலும் உண்டாயின. சிவனடியாரைப் பிடித்துக் கொண்டு வரும்படி குந்தவி தேவி மாரப்ப பூபதிக்குக் கட்டளையிட்டிருக் கிறாராமே? இது எதற்காக?

அந்தச் சிவனடியார்தான் யார்? அவர் உண்மையில் உத்தம புருஷர்தானா? அல்லது கபட சந்நியாசியா? சோழ குலத்துக்கு அவர் உண்மையில் சிநேகிதரா? அல்லது சிநேகிதர் போல் நடிக்கும் பகைவரா? இளவரசர் திரும்பி வந்திருப்பது பற்றியும், இப்போது குந்தவி தேவியின் பராமரிப்பில் வஸந்த மாளிகைக்குப் போயிருப்பது பற்றியும் அவரிடம் சொல்லலாமா, கூடாதா! - ஐயோ அதையெல்லாம் பற்றி இளவரசரிடம் கலந்து பேசாமற் போனோமே என்று பொன்னன் துக்கித்தான். இன்னொரு விஷயம் பொன்னனுக்கு வியப்பை அளித்தது. இளவரசரை ஒற்றர் தலைவன் ஆபத்திலிருந்து விடுவித்த பிறகு அன்றிரவு காட்டில் ஒரு சிற்பியின் வீட்டில் தங்கியதாக அல்லவா சொன்னார்! தன்னைச் சிவனடியார் வந்து காணச் சொல்லியிருப்பதும் காட்டின் நடுவில் உள்ள சிற்பியின் வீட்டில்தானே? அடையாளங்களைப் பார்த்தால் இரண்டும் ஒரே இடமாகவல்லவா தோன்றுகிறது? ஒற்றர் தலைவனுக்கும் சிவனடியாருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

சிவனடியார் ஒரு மகான் என்ற எண்ணம் பொன்னனுக்குப் பூரணமாக இருந்தது. அவர் தன்னை ஒரு சமயம் மாரப்பனிடம் அகப்படாமல் காப்பாற்றியதை அவன் எந்த நாளும் மறக்க முடியாது. இன்னும் அருள்மொழி ராணி அவரிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனாலும், அவர் உண்மையான சிவனடியார் அல்ல - அவ்விதம் வேடம் பூண்டவர் என்று சந்தேகிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தன. வள்ளி இவ்விதம் சந்தேகத்துடன் அவர் யார் என்பதைப் பற்றியும் ஒரு ஊகம் கூறினாள். அதாவது அவர் உண்மையில் பார்த்திப மகாராஜாதான் - மகாராஜா போர்க்களத்தில் சாகவில்லை - தன்னந்தனியே தாம் உயிர் தப்பி வந்ததை அவர் யாருக்கும் தெரிவிக்க விரும்பாமல் சிவனடியார் வேஷம் பூண்டிருக்கிறார் என்று வள்ளி சொன்னாள். அவளுடைய மதியூகத்தில் பொன்னனுக்கு எவ்வளவோ நம்பிக்கை உண்டு என்றாலும் இதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அவனுடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான இன்னொரு சம்பவம் நேரிட்டிருந்தது. அருள்மொழி ராணி தீர்த்த யாத்திரை கிளம்பிச் சென்ற பிறகு பொன்னன் பெரிதும் மனச்சோர்வு அடைந்திருந்தான். தோணித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் காட்டிலிருந்த ஐயனார் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்யலாமென்று அவன் போனான். அங்கே சந்நிதியில் வைத்திருந்த மண் யானைகளில் ஒன்று உடைந்து விழுந்திருப்பதைக் கண்டான். அதனருகில் அவன் சென்று பார்த்தபோது, மண் குதிரையின் வயிற்றுக்குள் ஒரு துணி மூட்டை இருந்தது. அதிசயத்துடன் அவன் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதற்குள் புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகள் இருக்கக் கண்டான். அப்போது அவனுக்கு உண்டான வியப்புக்கு அளவேயில்லை. யோசிக்க, யோசிக்க இது சிவனடியாருடைய வேஷப் பொருள்கள்தான் என்பது நிச்சயமாயிற்று. அந்த வேஷதாரி யார்? அவர் நல்லவரா, பொல்லாத சூழ்ச்சிக்காரா? அவரை நம்பலாமா, கூடாதா? அந்தப் பயங்கர மகா கபால பைரவர் மாரப்பன் காதோடு, சிவனடியாரைப் பற்றி ஏதோ சொன்னாரே அது என்ன? கருணையும், தயாளமும் உருக்கொண்ட குந்தவி தேவி எதற்காக அச்சிவனடியார் மேல் வெறுப்புக் கொண்டிருக்கிறாள்?

இதெல்லாம் பொன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், அவன் ஒன்று நிச்சயம் செய்து கொண்டான். இந்தத் தடவை சிவனடியாரைச் சந்தித்ததும் அவரைத் தெளிவாக "சுவாமி! தாங்கள் யார்?" என்று கேட்டுவிட வேண்டியதுதான். திருப்தியான விடை சொன்னால் இளவரசர் திரும்பி வந்ததைப் பற்றியும், அருள்மொழி ராணி இருக்குமிடத்தைப் பற்றியும் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். தகுந்த மறுமொழி கூறித் தன் சந்தேகத்தைத் தீர்க்காவிட்டால் ஒன்றும் சொல்லாமல் திரும்பி வந்துவிட வேண்டும். இளவரசருக்கு உடம்பு குணமான பிறகு அவரை எப்படியாவது சந்தித்துக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மேற்காரியங்களைச் செய்ய வேண்டும். இவ்விதம் பலவிதமாக யோசனைகளும், தீர்மானங்களும் செய்துகொண்டு பொன்னன் வழி நடந்து சென்றான். ஆங்காங்கே போக்கு வண்டிகள் கிடைக்கும் போதெல்லாம் ஏறிக்கொண்டு போனான். கடைசியில், மாமல்லபுரம் போகும் குறுக்குப் பாதையிலும் இறங்கிச் சென்றான். காட்டின் மத்தியிலுள்ள சிற்பியின் வீட்டுக்குச் சிவனடியார் மிகத் தெளிவாக அடையாளங்கள் சொல்லியிருந்தார். அந்த அடையாளங்கள் புலப்படுகின்றனவா என்று வெகு கவனமாய்ப் பார்த்துக் கொண்டு அவன் போய்க் கொண்டிருக்கையில் அவனுக்கு எதிரே சற்றுத் தூரத்தில் ஒரு குதிரை வருவதையும், அது சட்டென்று குறுக்கே காட்டில் புகுந்து போவதையும் பார்த்தான். குதிரை மேலிருந்த வீரன் தன்னைக் கவனித்தானா இல்லையா என்பது பொன்னனுக்குத் தெரியவில்லை. ஆனால் இளவரசர் சொன்ன அடையாளத்திலிருந்து அவன் ஒற்றர் தலைவனாயிருக்கலாமென்று தோன்றியது.

திரும்ப வேண்டிய இடத்தைப் பற்றிச் சிவனடியார் கூறிய அடையாளங்கள் அதே இடத்தில் காணப்படவே பொன்னன் அங்கேயே தானும் திரும்பினான். படர்ந்து தழைத்திருந்த செடிகொடிகளை உராய்ந்து கொண்டு குதிரை போகும் சத்தம் நன்றாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வழியைத் தொடர்ந்து பொன்னனும் போனான். ஒரு நாழிகை நேரம் இவ்விதம் போன பிறகு கொஞ்சம் திறந்தவெளி காணப்பட்டது. அதில் ஒரு அழகான சிற்ப வீடு தோன்றியது. அவன் சாலையில் பார்த்த குதிரை அவ்வீட்டின் பக்கத்தில் நிற்பதைக் கண்டான். அதே சமயத்தில் அவ்வீட்டிற்குள்ளிருந்து சிவனடியார் வெளியே வந்து புன்னகையுடன் அவனை வரவேற்றார். பொன்னனோ, அளவில்லாத வியப்புடனும் திகைப்புடனும் அவரை உற்று நோக்கினான்.

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 18

அத்தியாயம் பதினெட்டு 
பராந்தக புரத்தில்

சூனியமான அந்த மகேந்திர மண்டபத்தைப் பொன்னன் உள்ளும் புறமும் பலமுறை சுற்றிச் சுற்றித் தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப் போயிருப்பார் என்று சிந்தனை செய்தான். நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்தது முதல் நடந்தனவெல்லாம் ஒருவேளை கனவோ, என்றுகூட அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் வைத்தியனும் வண்டிக்காரனும் அவனைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள். தன்னிடம் ஆபத்துக் காலத்தில் செலவுக்காக வைத்திருந்த பொற்காசுகளில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான். இளவரசருக்கு ஜுரம் முற்றி ஜன்னியின் வேகத்தினால் எழுந்து ஓடிப் போயிருப்பாரோ என்று பொன்னன் மனத்தில் தோன்றிய போது, பகீர் என்றது. அவனும் பித்தம் கொண்டவனைப் போல் அங்குமிங்கும் அலையத் தொடங்கினான். குடுகுடுவென்று நதிக்கரைக்கு ஓடுவான். மறுபடியும் மகேந்திர மண்டபத்துக்கு வந்து ஆசையுடன், நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொள்ள, உள்ளே எட்டிப் பார்ப்பான். மனம் கலங்கியிருந்த படியால் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் விக்கிரமன் படுத்திருந்த வைக்கோலை எடுத்து உதறுவான். பிறகு வெளியிலே வந்து, உறையூர் சாலையோடு கொஞ்ச தூரம் போவான், மறுபடியும் திரும்பி வருவான்.

இப்படி ஒரு தடவை அவன் திரும்பி மண்டபத்தை நோக்கி வந்தபோது, மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பெரிய இலுப்ப மரத்துக்குப் பின்னால் ஒரு உருவம் மறைவதைக் கண்டான். அது ஒரு சித்திரக்குள்ளனின் வடிவமாகத் தெரிந்தது. கொல்லி மலையில் அருவிப் பாதையில் தான் அன்று பார்த்த பயங்கர உருவங்கள் பொன்னனுக்கு ஞாபகம் வந்தன. நேற்றிரவு இருளில் நடந்த சம்பாஷனையும் நினைவு வந்தது. "ஓஹோ! மகாராஜா நரபலிக்காரர்களின் கையிலேதான் அகப்பட்டுக் கொண்டார்" என்று எண்ணியபோது, பொன்னனுக்கு வந்த ஆத்திரத்துக்கும் துயரத்திற்கும் அளவேயில்லை. இந்த ஆத்திரத்தையெல்லாம் அந்தக் குள்ளன் மேல் காட்டி விடுவது என்ற நோக்கத்துடன் பொன்னன் இலுப்ப மரத்தை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து சென்றான். தன்னைப் பிடிக்க வருகிறான் என்று தெரியாமல் மறைந்து நின்ற குள்ளன் மேல் திடீரெனப் பாய்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு குலுக்குக் குலுக்கினான்.

முதலில் சற்றுத் திகைத்த குள்ளன் விரைவில் சமாளித்துக் கொண்டு, "என்ன அப்பா! என்ன சமாசாரம்? எதற்காக இவ்வளவு ஆத்திரம்?" என்று கேட்டான். "அடே குள்ளா! மகாராஜா எங்கே?" என்று பொன்னன் அலறினான். "மகாராஜாவா? அது யாரப்பா, மகாராஜா?" உடனே பொன்னனுக்குத் தன்னுடைய தவறு ஞாபகம் வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு, "அந்த மண்டபத்தில் படுத்திருந்தவர் எங்கே?" என்று கேட்டான். குள்ளன் தன்னுடைய இடுப்புத் துணியின் மடியை அவிழ்த்து உதறினான். பொன்னனைக் கேலியாகப் பார்த்து, "ஐயையோ! என் மடியிலே வைத்திருந்தேன், காணோமே!" என்றான். பொன்னனுக்கு இந்தக் கேலி ரசிக்காமல் குள்ளனை அடிப்பதற்காகக் கையை ஓங்கினான். துடுப்புப் பிடித்த வைரமேறிய அந்தக் கையின் அடி குள்ளன் மேல் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ, தெரியாது. ஆனால், அதற்குள்ளே குள்ளன் உடம்பை ஒரு நெளி நெளித்துப் பொன்னனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மறுகணம் மாயமாய் மறைந்தான். பொன்னன் அளவிட முடியாத கோபத்துடன் அங்குமிங்கும் ஓடினான். இதற்குள் இருட்டிவிட்டபடியால் பத்தடி தூரத்துக்கு மேல் கண் தெரியவில்லை. மேலும் இந்த இடத்தில் நாலாபுறமும் புதர்களாயிருந்தன. எனவே குள்ளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக்க மனச்சோர்வுடன் பொன்னன் திரும்ப யத்தனித்த போது, திடீரென்று அந்த இலுப்ப மரத்தின் மேலேயிருந்து "ஊ" என்று ஆந்தை கத்துவதுபோல் ஒரு குரல் கேட்டது. பொன்னன் திகிலுடன் மேலே அண்ணாந்து பார்த்தான். அடர்ந்த மரக்கிளையில் இருண்ட குள்ளவடிவம் காணப்பட்டது. இன்னொரு தடவை "ஊ" என்று அழகு காட்டுவது போல் அவ்வுருவம் கூவிற்று.

பொன்னனுக்கு அப்போது வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அந்த மரத்தை வேரோடு பிடுங்கிச் சாய்த்து விடலாம் என்று எண்ணினான். அப்போது குள்ளன், "அடே புத்தியற்றவனே! மகா பத்திரகாளியின் பக்தனை உன்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான். பொன்னனுடைய மனதில் இப்போது ஒரு யுக்தி தோன்றியது. அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குள்ளன்,"அடே முரடா! நீயும் மகாகாளியின் பக்தன் ஆகின்றாயா? உன் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்" என்றான். "என்னையா காளி பக்தனாகச் சொல்லுகிறாய்" என்று பொன்னன் சிரித்தான். "ஏண்டா சிரிக்கிறாய்? ஜாக்கிரத்தை! காளியின் கோபத்துக்கு ஆளாவாய்!" அப்போது பொன்னன், "நான் சேர்ந்துவிட்டேன், அப்பா, சேர்ந்துவிட்டேன். ஆனால் என்ன பிரயோசனம்? கபால பைரவர் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டேனே! ஐயோ, அவருக்கு என்ன சொல்வேன்?" என்றான். அப்போது குள்ளன் வியப்புடன், "அப்படியா! என்ன கட்டளையிட்டிருந்தார்?" என்று கேட்டான். "இந்த மண்டபத்தில் படுத்திருந்தவனைப் பத்திரமாய்க் கொல்லி மலைக்குக் கொண்டு வரச் சொன்னார். நேற்று ராத்திரி இந்த இடத்தில்தான் கட்டளை இட்டார். ஐயோ! தவறிவிட்டேனே?" என்று பொன்னன் அழுகிற குரலில் கூறினான். "அடடா! முன்னமே சொல்லியிருக்கக்கூடாதா? நீ வருவதற்குச் சற்று முன்னால், காஞ்சிக் சக்கரவர்த்தியின் மகனும் மகளும் இந்த வழியே போனார்கள். அவர்கள் அந்த மண்டபத்தின் அருகில் நின்றார்கள். மண்டபத்திலிருந்து ஒருவனை எடுத்துக் கொண்டு வந்து பல்லக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை, உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

இந்தக் கேள்வி பொன்னன் காதில் விழவில்லை. ஏனெனில் அவன் வைத்தியனையும் கட்டை வண்டியையும் அழைத்து வந்தபோது எதிரில் குதிரை, பல்லக்கு முதலிய ராஜ பரிவாரங்கள் வருவதைக் கண்டு ஒதுங்கி நின்றான். குதிரைமேல் குந்தவி தேவியைக் கண்டதும் அவளுடைய கண்ணில் பட்டு விடாமல் வண்டியின் பின்னால் நன்றாய் மறைந்து கொண்டான். பல்லக்கை அவன் கவனிக்கவில்லை. இப்போது அதெல்லாம் பளிச்சென்று ஞாபகம் வந்தது. குள்ளன் சொல்வது உண்மையாயிருக்கலாமென்று தோன்றிற்று. "ஏனப்பா மௌனமாயிருக்கிறாய்! என்ன யோசிக்கிறாய்?" என்று குள்ளன் மரத்தின் மேலிருந்து கேட்டான். பொன்னன் அவனைப் பார்த்து, "என்ன யோசிக்கிறேனா! உன்னை எப்படிக் காளிக்குப் பலி கொடுப்பது என்றுதான் யோசிக்கிறேன்" என்று கூறி, கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன்மேல் வீசி எறிந்தான்.

குள்ளன் அப்போது முன்னம் விக்கிரமன் கத்தியை ஓங்கியவுடன் செய்ததைப் போல் வாயைக் குவித்துக் கொண்டு, தீர்க்கமான ஒரு கூச்சலைக் கிளப்பினான். அந்தப் பயங்கரமான ஒலியைக் கேட்டதும் பொன்னனுக்கு உடம்பெல்லாம் மயிர்க் கூச்சலெடுத்தது. அங்கிருந்து அவன் ஒரே ஓட்டமாக உறையூர்ச் சாலையை நோக்கி ஓடத் தொடங்கினான். அந்தக் காட்டாற்றங்கரையிலிருந்து சுமார் காத தூரத்திலிருந்த பராந்தகபுரம் என்னும் ஊரைப் பொன்னன் அடைந்தபோது, இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். ஆனால் அங்கே தீவர்த்தி வெளிச்சமும் வாத்திய முழக்கமுமாய் ஏக தடபுடலாயிருந்தது. பொன்னன் என்னவென்று விசாரித்த போது, சக்கரவர்த்தியின் திருக்குமாரரும், திருக்குமாரியும் விஜயம் செய்திருப்பதாகவும், அவர்களுக்கு வரவேற்பு உபசாரங்கள் அவ்வூர்க் கோயிலில் நடந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக ஊருக்கு வெளியே கூடாரங்கள் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிந்து கொண்டான்.

அவர்கள் ஆலயத்தில் இருக்கும் சமயத்தில் தன்னுடைய சோதனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பொன்னன் விரைந்து சென்றான். ஊரைச் சேர்ந்தாற்போல் ஒரு மைதானத்தில் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்தன. யுவராஜா மகேந்திரனும் குந்தவி தேவியும் கோயிலுக்குப் போயிருந்தபடியால் இங்கே அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. சில காவற்காரர்கள் மட்டும் அங்குமிங்கும் நின்றார்கள். பணிப்பெண்களும் ஏவலாளர்களும் கூடாரங்களுக்குள் படுக்கை விரித்தல் முதலிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மைதானத்தின் ஒரு புறத்தில் கிளுவைச் செடிகளால் ஆன உயரமான வேலி அமைந்திருந்தது. அந்த வேலி ஓரமாகப் பொன்னன் சென்றான். ஓரிடத்தில் இரண்டு பணிப்பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.

"ஏண்டி, மரகதம்! திருவெண்ணெய் நல்லூரில் போய் இரவு தங்குவதற்காக அல்லவா ஏற்பாடு இருந்தது? இங்கே எதற்காகத் தங்கியிருக்கிறோம்?" என்று ஒருத்தி கேட்டாள். "உனக்குத் தெரியாதா என்ன? வைத்தியர் சொன்னாராம். நோயாளிக்கு அமைதி வேண்டும் என்று. பல்லக்கிலே நெடுந்தூரம் தூக்கிக் கொண்டு போனால் அவரது உடம்பு நெகிழ்ந்து கொள்ளலாம் என்றாராம். அதற்காகத் தான்...." "ஆமாண்டி, அது யாரடி அப்பேர்ப்பட்ட நோயாளி? அவனுக்காக இவ்வளவு தடபுடல் படுகிறதே?" "அவன் செண்பகத் தீவிலிருந்து வந்த இரத்தின வியாபாரியாம், தேவசேனன் என்று பெயராம். மாமல்லபுரத்து வீதியில் நமது தேவியைப் பார்த்தானாம். உறையூரில் இருக்கும் தன் தாயாரைப் பார்க்கப் போவதாகச் சொன்னானாம். அவன் அந்த ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாய்க்கிடக்கவே, தேவி அவனை நம்மோடு உறையூருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று பல்லக்கில் ஏற்றிக் கொண்டாள்." "அடி மரகதம்! இதில் ஏதோ மர்மம் இருக்கிறதடி!" "என்ன மர்மம்!" "கட்டாயம் இருக்கிறது; இல்லாவிட்டால் வழியில் அநாதையாய்க் கிடந்தவனுக்கு இப்படி இராஜ வைத்தியமும் இராஜோபசாரமும் நடக்காதடி மரகதம்!" "சீச்சீ..."

"அவனை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வைத்தியம் பார்த்து அனுப்பி வைக்கச் சொல்லலாமல்லவா? நம்மோடு எதற்காகப் பல்லக்கில் ஏற்றி அழைத்துப் போக வேண்டும்?" "ஆமாண்டி, தங்கம்! அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால், உனக்குச் சொல்லமாட்டேன்." "சொல்லாமற் போனால், நான் உன்னோடு பேசப் போவதில்லை." "இல்லையடி, கோபித்துக் கொள்ளாதே, இங்கே கிட்ட வா, சொல்லுகிறேன். யார் காதிலாவது விழப்போகிறது!" "சொல்லு பின்னே..." "உறையூர் இராஜகுமாரன் செண்பகத் தீவில்தான் இருக்கிறானாம். அவனை நம் தேவி காஞ்சிநகர் வீதியிலே பார்த்ததும், அவனை மன்னிக்கும்படி சக்கரவர்த்தியிடம் வேண்டிக் கொண்டதும் தெரியுமோ, இல்லையோ? அந்த இராஜகுமாரனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமென்றுதான் பின்னோடு இந்த இரத்தின வியாபாரியை அழைத்து வருகிறார்." "ஓகோ! அப்படியானால் உறையூருக்குப் போன பிறகும் இவன் தம்முடன் வஸந்த மாளிகையிலேதான் இருப்பானாக்கும்?" "ஆமாம்." "ஏண்டி மரகதம், அந்த இரத்தின வியாபாரியை நீ பார்த்தாயாடி?" "பார்க்காமலென்ன? நான்தானே அவனுக்கு மருந்து கொடுக்கிறேன்!" "அவன் இளம் வயதாமேடி?" "ஆமாம்; அதனாலென்ன?" "ரொம்ப அழகாயிருக்கிறானாமே? முகத்தில் களை சொட்டுகிறதாமே?" "அதற்காக...." "எனக்கென்னமோ மரகதம், கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவனை நமது தேவி தன் பக்கத்தில்...." "அடி, பாவி! தேவியைப் பற்றி ஏதாவது சொன்னாயோ, உன் நாக்கைச் சுட்டு விடுவேன்!" "சண்டாளி! தேவியைப் பற்றி நான் என்னடி சொன்னேன்?" "ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே!"

"சீ! தேவியைப் பற்றிச் சொல்வேனாடி? அப்படிப்பட்ட இளம் ரூபவானுக்குப் பக்கத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு, மருந்தும் கொடுக்கச் சொன்னால் நீ இலேசுப்பட்டவளாடி? பெரிய மாயக்காரியாச்சே! வேறு ஏதாவது மருந்து கொடுத்து விட்டாயானால்... ஐயையோ! கிள்ளாதேடி!...." இப்படிப் பேசிக் கொண்டே பணிபெண்கள் இருவரும் வேலி ஓரத்திலிருந்து அப்பால் போய் விட்டார்கள். பொன்னன் மேற்கண்ட சம்பாஷணையில் ஒரு வார்த்தை விடாமல் மிகவும் கவனமாய்க் கேட்டான். அவன் மனதில் வெகுகாலமாக அறிந்திராத மகிழ்ச்சி உண்டாயிற்று. இன்னும் கொஞ்ச தூரம் வேலி ஓரமாகப் போனான். ஒரு கூடாரத்தில் கொஞ்சம் கலகலப்பாயிருந்தது. அங்கே வேலியைச் சற்று விலக்கிக் கொண்டு உற்று நோக்கினான். தீவர்த்தி வெளிச்சத்தில், கட்டிலில் விக்கிரமன் படுத்திருப்பதும், பக்கத்தில் வைத்தியர் உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டுப் பொன்னன் அங்கிருந்து திரும்பினான்.