தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணையத்தில் படிக்க.

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

திங்கள், 9 ஜூன், 2014

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 5

அத்தியாயம் ஐந்து
ஒற்றர் தலைவன்

நல்ல சமயத்தில் வந்து தன்னைக் காப்பாற்றிய குதிரை வீரனிடம் விக்கிரமனுக்கு நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. அவ்வீரனுடைய கேள்விக்கு மறு மொழியாக, "ஐயா! நான் வியாபாரி. உறையூருக்குப் போவதற்காக இந்தக் குறுக்கு வழியில் வந்தேன். வந்த இடத்தில் இந்த ஆபத்து நேர்ந்தது. நல்ல சமயத்தில் நீங்கள் வந்து உதவி செய்தீர்கள்" என்றான். "வியாபாரியா நீர்? துலாக்கோல் பிடிக்கும் கையா இவ்வளவு லாவகமாய்க் கத்தி சுழற்றுகிறது? நம்ப முடியவில்லை, ஐயா! என்ன வியாபாரம் செய்கிறீரோ?" "இரத்தின வியாபாரி நான்; கத்தியை உபயோகிக்கவும் பழகியிருக்கிறேன்..." "அழகுதான்! இரத்தின வியாபாரியா இம்மாதிரி காட்டு வழியில் தனியாகக் கிளம்பினீர்? அதுவும் இரா வேளையில்...." "நரசிம்ம சக்கரவர்த்தியின் புகழைக் கேட்டு ஏமாந்து போனேன். அவருடைய ஆட்சியில் திருட்டுப் புரட்டே கிடையாது என்று கடல்களுக்கு அப்பால் உள்ள தேசங்களில் எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்...." "ஓகோ! வெளிநாட்டிலிருந்து வந்தீரா! நினைத்தேன் அப்போதே. எந்த நாட்டிலிருந்து வருகிறீர், ஐயா?" "எனக்குச் செண்பகத் தீவு." "செண்பகத் தீவா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாட்டில் இரத்தினங்கள் அதிகம் உண்டு என்று. நல்லது; இரத்தின வியாபாரம் செய்ய வந்த நீர் முதலில் காஞ்சிக்கல்லவா போக வேண்டும்? இவ்வளவு அவசரமாக உறையூர்க்குக் கிளம்பியது ஏனோ?" "சொல்லுகிறேன், ஐயா! ஆனால் தாங்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தவில்லையே!" "நான் யாராயிருந்தால் என்ன?" "என் உயிரைக் காப்பாற்றியவர் யார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?" "உம்முடைய உயிரை நான் காப்பாற்றவில்லை; நீரே தான் காப்பாற்றிக் கொண்டீர். மூன்று பேரை வேலை தீர்த்த உமக்கு இன்னும் ஒருவனைத் தீர்ப்பது பிரமாதம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நான் யாரென்று சொல்லுகிறேன். காஞ்சி சக்கரவர்த்தியைப் பற்றி நீர் கேள்விப்பட்டது பொய்யாகப் போயிற்று என்றீரே? அந்தச் சக்கரவர்த்தியின் ஊழியர்களில் ஒருவன் நான்; ஒற்றர் படைத்தலைவன். நீர் தனியாக இந்தக் காட்டு வழியே போகிறீர் என்று எனக்குத் தகவல் வந்தது. ஏதாவது அபாயம் நேரலாம் என்று எதிர்பார்த்து உடனே புறப்பட்டு வந்தேன்..." "அப்படியா? என்ன விந்தை? சக்கரவர்த்தியின் ஒற்றர் படை அவ்வளவு திறமையாகவா வேலை செய்கிறது? அப்படியானால், நான் எண்ணியது தவறு..." "செண்பகத் தீவில் நடக்கும் ஆட்சியைப் போல் அவ்வளவு திறமையாக இங்கே அரசாங்கம் நடக்காமலிருக்கலாம், ஐயா! ஆனாலும், எங்களால் முடிந்தவரையில் கொலை, களவு நடக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறோம். பார்க்கப் போனால், இரவில் தனிவழியே வந்து நாலு உயிர்களின் மரணத்துக்குக் காரணமாயிருந்ததின் பொருட்டு உம்மை நான் பிடித்துக் கொண்டு போய்ச் சக்கரவர்த்தியின் முன்னால் நிறுத்த வேண்டும்." விக்கிரமனுடைய கை அப்போது அவனுடைய வாளை இறுக்கிப் பிடித்ததை நட்சத்திரங்களின் மங்கிய ஒளியில் அவ்வீரன் கவனித்தான். "வேண்டாம் ஐயா, வேண்டாம். அவ்விதம் செய்கிற உத்தேசம் எனக்கு இல்லை. அயல் தேசத்திலிருந்து வந்தவரானதால், இந்த வழியின் அபாயம் தெரியாமல் வந்துவிட்டீர். உம்மைப்போல் வேண்டுமென்று விபத்தில் அகப்பட்டுக் கொள்கிறவர்கள் இல்லாமற்போனால், அப்புறம் எங்களுக்குத்தான் என்ன வேலை இருக்கும்? ஒற்றர் படைத் தலைவன்தான் எதற்காக? நல்லது; நான் வந்த வேலை ஆகிவிட்டது. பார்க்கப் போனால் நான் வந்திருக்க வேண்டியதில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் உம்மை நீரே காப்பாற்றிக் கொள்ளக் கூடியவராயிருக்கிறீர். நான் போய் வருகிறேன்" என்றான் அவ்வீரன். விக்கிரமனுடைய உள்ளம் குழம்பிற்று. அவ்வீரனுக்குத் தான் தகுந்தபடி நன்றி செலுத்தவில்லையென்று அவன் கருதினான். அன்றியும், அவ்வீரனுடன் இன்னும் கொஞ்சம் சிநேகம் செய்துகொண்டு உறையூர் போவதற்கு அவனுடைய குதிரையை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசையும் உண்டாயிற்று. இரவை எங்கே, எப்படிக் கழிப்பது என்ற கவலையும் தோன்றியது. "அப்படியன்று. அந்தச் சமயத்தில் தாங்கள் வந்திராவிட்டால், ஒருவேளை நான் உயிரிழந்திருப்பேன். எனக்கு உயிர் அளித்தவர் தாங்கள்தான். அதோடு இன்னொரு உதவியும் தாங்கள் எனக்குச் செய்ய வேண்டும்" என்றான் விக்கிரமன். "என்னிடம் யாராவது உதவி கேட்டால், அதை மறுக்கும் வழக்கம் கிடையாது. உதவி கேட்காதவர்களுக்குக் கொடுப்பதும் இல்லை. "உறையூருக்கு நான் அவசரமாய்ப் போக வேண்டியிருக்கிறது. அதற்கு நீங்கள் தாம் உதவி செய்ய வேண்டும். உங்கள்...." "நீர் கேட்கப்போவது தெரிகிறது, என் குதிரையைக் கேட்கிறீர். ஆனால், இந்த இராத்திரியில் இனிமேல் இக்காட்டு வழியில் போனால், உம்முடன் குதிரையும் துஷ்ட மிருகங்களுக்கு இரையாக வேண்டியதுதான், உம்மைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் குதிரையைப் புலிக்கு ஆகாரமாக்க எனக்கு இஷ்டமில்லை." "வேறு என்ன யோசனை சொல்கிறீர்கள்?" "இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு சிற்பியின் வீடு இருக்கிறது. என்னுடன் வந்தால், அங்கே படுத்திருந்துவிட்டு அதிகாலையில் எழுந்து போகலாம்." விக்கிரமன் சற்று யோசித்து, "அப்படியே செய்யலாம்" என்றான். கீழே கிடந்த மூட்டைகளை எடுத்துக் குதிரைமேல் வைத்துக் கட்டினார்கள். பிறகு, வீரன் குதிரையைப் பிடித்துக் கொண்டு காட்டுக்குள் புகுந்து செல்ல, விக்கிரமனும் அவன் பின்னால் சென்றான்.

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 4

அத்தியாயம் நான்கு
வழிப்பறி

சக்கரவர்த்தி கம்பீரமான பட்டத்து யானைமீது ஆரோகணித்து வந்தார். அவர் நெடுங்காலத்துக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு வந்தபடியாலும், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத விதமாக வந்தபடியாலும், நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள். இந்த ஆரவாரம் காதில் விழுந்ததும், மாரப்பபூபதி குதிரையைச் செலுத்திக் கொண்டு அவசரமாக அங்கிருந்து நழுவிச் சென்றான். தேவசேனன் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றான். அவன் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சக்கரவர்த்தியைத் தான் பார்க்கக் கூடாதென்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு வேறு திசையை நோக்கி நின்றான். ஆனால் பட்டத்து யானை அவன் நின்ற இடத்துக்கு நேராக வீதியில் சென்றபோது அவனுடைய உறுதி கலைந்தது. சோழ வம்சத்தின் பரம வைரியானாலும், உலகெல்லாம் புகழ் பரப்பிய வீராதி வீரரல்லவா நரசிம்ம சக்கரவர்த்தி? அவனை அறியாமலே அவனுடைய பார்வை அவர்மீது சென்றது. அச்சமயத்தில் சக்கரவர்த்தியும் அவன் நின்ற பக்கமாகத் தம்முடைய கண்ணோட்டத்தைச் செலுத்தினார். அந்தக் கண்ணோட்டத்தின் போது இரத்தின வியாபாரியின் முகமும் ஒரு விநாடி நேரம் அவருடைய பார்வைக்கு இலக்காயிற்று. ஆனால், அப்படிப் பார்க்கும்போது அவருடைய கண்களில் தினையளவேனும் மாறுதல் காணப்படவில்லை. கண்ணிமைகள் சிறிது மேலே போகக் கூட இல்லை. அவனுடைய முகத்தைத் தாண்டிக்கொண்டு அவருடைய பார்வை அப்பால் சென்றுவிட்டது. பட்டத்து யானையும் மேலே சென்றது. இரத்தின வியாபாரி பெரும் ஆபத்திலிருந்து தப்பியவன்போல் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். ஜனக்கூட்டம் எல்லாம் போகும் வரைக்கும் சற்று நேரம் அங்கேயே நின்று அவன் யோசனை செய்து கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் பெருங் குழப்பம் உண்டாயிற்று. முக்கியமாய் மாரப்ப பூபதியை அங்கே சந்தித்ததை எண்ணியபோது நெஞ்சம் துணுக்கமுற்றது. சித்தப்பாதான் இப்போது சோழநாட்டுச் சேனாதிபதியாமே! அவருடைய துரோகத்துக்குக் கூலி கிடைத்து விட்டதாக்கும்! தன்னிடம் ஏன் அவ்விதம் பேசினார்? ஒருவேளை அடையாளங் கண்டு கொண்டிருப்பாரோ? அந்தப் பெண் உண்மையில் சக்கரவர்த்தியின் குமாரிதானா? அப்படியானால் தன்னிடம் எதற்காகப் பெயரை மாற்றிக் கூறினாள்! அரண்மனைக்கு வரும்படி ஏன் வற்புறுத்திச் சொன்னாள்? நாலு புறத்திலும் தன்னை அபாயங்கள் சூழ்ந்திருப்பதாகத் தேவசேனனுக்குத் தோன்றியது. இனிமேல் மாமல்லபுரத்தில் இருந்தால் விபரீதங்கள் நேரலாம் என்று நினைத்தான். மேலும், அருள்மொழித் தேவியைப் பற்றி மாரப்ப பூபதி மர்மமாகச் சொன்னதை நினைத்தபோது அவனுடைய நெஞ்சு துடித்தது. முதலில் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்க்க வேண்டும். மற்றக் காரியங்கள் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். மாமல்லபுரத்தில் ஒரு குதிரையை வாங்கிக் கொண்டு உறையூருக்கும் போகலாம் என்ற உத்தேசம் விக்கிரமனுக்கு இருந்தது. அந்த உத்தேசத்தை இப்போது கைவிட்டான். குதிரை வாங்குவதற்குப் பிரயத்தனம் செய்தால் அதனால் என்ன விளையுமோ, என்னமோ? மாரப்பன் மறுபடியும் தன்னைப் பார்த்துவிட்டால், அவனிடமிருந்து தப்புவது கஷ்டமாகலாம். நல்ல வேளையாக அந்தச் சமயத்திலேயே சக்கரவர்த்தி வீதியிலே வந்தார்! அருள்மொழியைப் பற்றி மாரப்பன் ஏதோ சொன்னதும் தான் பதறிவிட்டது விக்கிரமனுக்கு ஞாபகம் வந்தது. ஒருவேளை தன்மேல் சந்தேகம் கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் அப்படி வஞ்சகமாகப் பேசினாரோ? இன்னும் ஒரு வினாடிப் பொழுது சக்கரவர்த்தி வராதிருந்தால் சித்தப்பா தன்னைக் கண்டுபிடித்திருப்பார்! கண்டுபிடித்து என்ன செய்திருப்பாரோ?- என்பது மறுபடியும் விக்கிரமனுக்கு நினைவு வந்தபோது அவனை என்னவோ செய்தது, மாமல்லபுரத்துக்கு அவர் எதற்காக வந்திருக்கிறார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? எதுவாயிருந்தாலும் அவர் இப்போது இங்கே இருப்பது ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அவர் அங்கு இருக்கும்போதே, தான் உறையூருக்குப் போய் அன்னையைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடவேண்டும்.இன்றைக்கே இவ்விடமிருந்து கிளம்பி விட வேண்டும். வழியிலே எங்கேயாவது குதிரை கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம். இவ்விதம் தீர்மானம் செய்துகொண்டு விக்கிரமன் அவனுடைய உண்மைப் பெயராலேயே இனி நாம் அழைக்கலாம். தான் தங்கியிருந்த சத்திரத்தை நோக்கி விரைந்து சென்றான். போகும்போது முன்னும் பின்னும் அடிக்கடி பார்த்துக் கொண்டான். குதிரைச் சத்தம் கேட்டால் உடனே கூட்டத்தில் மறைந்து கொண்டான். இவ்விதம் சென்று சத்திரத்தை அடைந்ததும், அங்கு வழிப் பிரயாணத்திற்காகத் தான் சேகரித்து வைத்திருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு குள்ளனையும் மூட்டைகளைச் சுமந்து வருவதற்காக அழைத்துக் கொண்டு கிளம்பினான். தான் சத்திரத்துக்குள்ளே சென்றிருந்தபோது, குள்ளன் வெளியில் காத்திருந்த ஒரு மனிதனுடன் சமிக்ஞை மூலம் ஏதோ பேசியதை அவன் கவனிக்கக்கூட இல்லை. விக்கிரமன் குள்ளனுடன் மாமல்லபுரத்தை விட்டுக் கிளம்பிய போது அஸ்தமிக்க ஜாமப் பொழுது இருக்கும். நகர வாசலைக் கடந்து அவன் வெளியே ராஜபாட்டையில் நடக்க ஆரம்பித்த சமயம் மாலைக் கதிரவனின் கிரணங்கள் பசும்பொன் நிறத்தை அடைந்திருந்தன. அந்தக் காலத்தில் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி நகருக்கும், காஞ்சியிலிருந்து உறையூருக்கும் ராஜபாட்டைகள் சென்றன. மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி செல்லும் பாதையானது எப்போதும் ஜனங்களின் போக்குவரவினால் ஜே ஜே என்று இருக்கும். குதிரைகள் மீதும் யானைகள் மீதும் பல்லக்குகளிலும் ஜனங்கள் போய்க் கொண்டே இருப்பார்கள். அந்த ராஜ பாதை நெடுகிலும் ஒன்றுக்கொன்று வெகு சமீபத்தில் ஊர்கள் உண்டு. கோவில்களும், மடாலயங்களும், சத்திரங்களும், தண்ணீர்ப் பந்தல்களும், பலவிதக் கடைகளும், பாடசாலைகளும் நெடுகிலும் காணப்படும். இதனாலெல்லாம் வெளிநாடுகளிலிருந்து புதிதாக வருகிறவர்களுக்கு மாமல்லபுரத்திலிருந்து காஞ்சி வரையில் ஒரு பெரிய நகரந்தானோ என்று தோன்றும். இத்தகைய ராஜபாட்டையிலிருந்து இடையிடையே பிரிந்து சென்ற குறுக்குப் பாதைகளும் ஆங்காங்கு இருந்தன. இந்தக் குறுக்குப் பாதையில் ஒன்று மாமல்லபுரத்துக்குக் கொஞ்ச தூரத்துக்கப்பால் பிரிந்து அடர்ந்த காடுகளின் வழியாகச் சென்றது. மாமல்லபுரத்திலிருந்து நேரே உறையூருக்குப் போக விரும்புவோர் இந்தக் குறுக்குப் பாதை வழியாகப் போனால் காஞ்சிக்குக் கொஞ்ச தூரம் தெற்கே உறையூர் ராஜபாட்டையை அடையலாம். குறுக்கு வழியில் செல்வதால் மூன்று காததூரம் அவர்களுக்கு நடை மீதமாகும். ஆனாலும், அந்தக் காட்டுப்பாதை வழியாக ஜனங்கள் அதிகமாகப் போவதில்லை. முக்கியமாக, இரவில் யாருமே போகமாட்டார்கள். அந்தப் பாதையில் சில இடங்களில் துஷ்ட மிருகங்களின் தொல்லை அதிகமாயிருந்தது. இதுமட்டுமல்லாமல், பிரசித்தமான பத்திரகாளி கோயில் ஒன்றும் அந்த வழியில் இருந்தது. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு மாறாக இந்தப் பத்திரகாளி கோயிலில் 'சாக்தர்' 'கபாலிகர்' முதலியோர் சில சமயம் நரபலி கொடுப்பது வழக்கம் என்ற வதந்தி இருந்தபடியால், இரவு நேரத்தில் அந்தப் பாதை வழியாகப் போக எப்பேர்ப்பட்ட வீரர்களும் தயங்குவார்கள். இதையெல்லாம் அறிந்திராத விக்கிரமன் குள்ளனால் வழி காட்டப்பட்டவனாய், சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் அந்தக் குறுக்குக் காட்டுப்பாதை பிரியும் இடத்துக்கு வந்து சேர்ந்தான். குள்ளன் அந்தப் பாதை வழியாகப் போகலாமென்று சமிக்ஞையால் சொன்னபோது, விக்கிரமன் முதலில் கொஞ்சம் தயங்கினான். பிறகு, 'பயம் என்ன?' என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்தக் குறுக்குப் பாதையில் இறங்கினான். உறையூருக்குச் சீக்கிரத்தில் போய் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமானது அவனுடைய மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள உதவியாயிருந்தது. அதோடு இன்னொரு காரணமும் சேர்ந்தது. அந்த முச்சந்திக்குச் சற்று தூரத்தில் குறுக்குப் பாதையில் நாலுபேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை விக்கிரமன் பார்த்தான். அவன் குறுக்குப் பாதையில் இறங்கியவுடனே மேற்சொன்ன நால்வரும் எழுந்திருந்து விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார்கள். தான் கொஞ்சம் சீக்கிரமாக நடந்தால் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்றும், வழித் துணையாயிருக்குமென்றும் விக்கிரமன் எண்ணியவனாய் அந்தப் பாதையில் வேகமாக நடக்கலானான். ஆனால் குள்ளன் வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் மெதுவாகவே நடந்தபடியால், விக்கிரமனுடைய எண்ணம் நிறைவேறுவதாயில்லை. அந்தப் பாதையில் போகப்போக இருபுறங்களிலும் காடு அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. முன்னிருட்டுக் காலமாதலால், நாலா புறத்திலிருந்தும் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாய் இருட்டி விட்டது. ஆனால் வானம் துல்லியமாயிருந்தபடியால், வழி கண்டுபிடித்து நடப்பதற்கு அவசியமான வெளிச்சத்தை விண்மீன்கள் அளித்தன. மற்றபடி பாதையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்திருந்தபடியால் ஒரே அந்தகாரமயமாயிருந்தது. அந்தக் கனாந்தகாரத்தில் அந்த வனாந்தரப் பிரதேசத்தில் எண்ணில் அடங்காத மின்மினிகள் பிரகாசித்துக் கொண்டிருந்த காட்சியானது வனதேவதைகள் தங்களுடைய மாயாஜால சக்தியினால் தீபாலங்காரம் செய்தது போலத் தோன்றியது. நேரம் ஆக ஆக, விக்கிரமனுடைய தீரம் மிகுந்த உள்ளத்தில் கூடச் சிறிது பதைபதைப்பு உண்டாகத் தொடங்கியது. காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும். இந்தக் காட்டுப் பாதை இப்படியே எவ்வளவு தூரம் வரை போகும். இரவில் எங்கே தங்கலாம் என்னும் விஷயங்களை அந்த ஊமைக் குள்ளனிடம் விக்கிரமன் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான். ஆனால் இருள் காரணமாகக் குள்ளனுடன் சமிக்ஞை மூலம் சம்பாஷணை நடத்துவது எளிதாக இல்லை. இருட்டி சுமார் ஒரு ஜாமப் பொழுது ஆகியிருக்கும். விக்கிரமன் அப்பால் போக இஷ்டப்படவில்லை. இருண்ட அந்த வனப்பிரதேசத்தில் தன்னைத் திடீரென்று தாக்கும் பொருட்டு அபாயங்கள் பல மறைந்து காத்திருப்பதாக அவனுடைய இருதய அந்தரங்கத்தில் ஏதோ ஒரு குரல் சொல்லிக் கொண்டே இருந்தது. திரும்பி இராஜபாட்டைக்கே போய்விடலாமா என்ற எண்ணம் உண்டாயிற்று. போகப் போக இந்த எண்ணம் ரொம்பவும் வலுப்பட்டது. மேலே நடக்க அவனுடைய கால்கள் மறுத்தன. குள்ளனுடைய தோளைத் தட்டி நிறுத்தித் தானும் நின்றான். அவன் நின்ற அதே சமயத்தில் எங்கேயோ வெகுதூரத்தில் 'டக் டக்' 'டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. குள்ளன் அதைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு உண்டான ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. இவன் செவிடனாய் இருந்தால் அவ்வளவு லேசான சத்தம் எப்படி இவனுக்குக் கேட்டது? உடனே விக்கிரமன் தன் அரையில் மேலங்கியினால் மறைக்கப்பட்டுக் கட்டித் தொங்கிய உடைவாளைப் பளிச்சென்று கையில் எடுத்தான். அந்தக் காரிருளில், நெய் தடவித் தீட்டப்பட்டிருந்த கத்தியானது பளபளவென்று மின்னிற்று. விக்கிரமன் குள்ளனுடைய தலையிலிருந்த பரட்டை மயிரை ஒரு கையினால் பற்றிக் கத்தியை ஓங்கி, அடேய்! உண்மையைச் சொல்லு! நீ நிஜமாகச் செவிடன்தானா? உனக்குக் காது கேட்பதில்லையா? உண்மையைச் சொல்லாவிட்டால் இங்கேயே இந்த க்ஷணமே இந்த வாளுக்குப் பலியாவாய்?" என்றான். குள்ளன் உரத்த குரலில் சிரித்தான். 'கக் கக், கக் கக்' என்ற ஒலியை எழுப்பிய அந்தச் சிரிப்பின் பயங்கரமானது, விக்கிரமனுடைய உடம்பின் இரத்தத்தை உறைந்து போகும் படி செய்தது. இதனால் விக்கிரமன் ஒரு கணம் திகைத்து நின்றபோது, குள்ளன் அவனுடைய பிடியிலிருந்து திமிறிக் கொண்டு விடுபட்டு, ஒரு பத்தடி தூரம் பாய்ந்து சென்றான். அங்கு நின்றபடி இரண்டு கைகளையும் வாயினருகில் குவித்துக் கொண்டு மிகக் கோரமான நீடித்த சத்தத்தை உண்டாக்கினான். மனிதக் குரலுமில்லாமல், மிருகங்களின் குரலுமில்லாமல், கேட்பதற்குச் சகிக்க முடியாத அருவருப்பை உண்டாக்குவதாயிருந்த அந்தச் சத்தத்தைத் தூர இருந்து கேட்பவர்கள், 'பேய் பிசாசுகள் ஊளையிடுகின்றன' என்று எண்ணிப் பீதி அடைந்தார்களானால், அதில் ஆச்சரியம் அடைவதற்கு இடம் இராது. அந்தச் சத்தத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய உடம்பு ஒரு நடுக்கம் நடுங்கிற்று. ஆனாலும் உடனே அவன் சமாளித்துக் கொண்டு, அந்த க்ஷணமே அக்குள்ளனை வெட்டிக் கொன்று விடுவது என்ற தீர்மானத்துடன் பாய்ந்து சென்றான். அதே சமயத்தில் பாதையில் ஒரு பக்கத்திலிருந்து மரங்களின் மறைவிலிருந்து நாலு பேர் பாய்ந்து ஓடிவந்தார்கள். அவர்களுடைய கைகளில் கத்திகளைக் கண்டதும் விக்கிரமனுக்கு நெஞ்சில் பழையபடி துணிவும் தைரியமும் பிறந்தன. இருட்டினாலும், தனிமையினாலும், குள்ளனுடைய பயங்கரக் கூவலினாலும், மனிதர் உலகுக்குப் புறம்பான பேய் உலகத்துக்கு வந்திருக்கிறோமோ என்று எண்ணி மனதில் திகில் அடைந்திருந்த விக்கிரமனுக்கு கத்திகளைக்கண்டவுடன், இது மனித உலகத்தைச் சேர்ந்த காரியந்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டது. எனவே, பீதியும் போய்விட்டது. உடனே தன் வாளை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தான். வந்த நால்வரும் விக்கிரமனை ஏக காலத்தில் தாக்கத் தொடங்கினார்கள். விக்கிரமன் சக்ராகாரமாகச் சுழன்று அவர்களுடன் போரிட்டான். அவனுடைய கத்தியின் முதல் வீச்சிலேயே ஒருவன் படுகாயம் பட்டுக் கீழே விழுந்தான். இன்னொருவனுடைய கத்தி அடிபட்டுத் தூரப் போய் விழுந்தபோது குள்ளன் மேலே விழுந்தது. அவன் 'வீல்' என்று கத்திக் கொண்டு தரையில் சாய்ந்தான். கத்திச் சண்டையில் விக்கிரமன் சாதாரண மனிதனல்ல என்று தெரிந்து கொண்ட மற்ற இருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் அவனுடைய கத்தி வீச்சுக்குள் வராமல் தூர நின்றே சண்டையிட்டார்கள். அவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்ததிலிருந்து யாரையோ அவர்கள் எதிர்பார்த்தது போலத் தோன்றியது. அதற்குத் தகுந்தாற்போல் குதிரைக் காலடிச் சத்தம் அதிவிரைவாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் குதிரை வந்துவிட்டது. குதிரையின் மேல் ஓங்கிய கத்தியுடன் ஒரு வீரன் உட்கார்ந்திருப்பது நட்சத்திர வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது. விக்கிரமனுடன் போரிட்டவர்களில் ஒருவன் "எஜமானே! சீக்கிரம்!" என்று கத்தினான். 'குதிரையின் மேல் வருகிறவன் இவர்களுடைய எஜமானன் போலும்! நம்முடைய முடிவு நெருங்கிவிட்டது' என்று எண்ணினான் விக்கிரமன். ஏற்கனவே அவன் சண்டையில் களைப்புற்று வந்தான் எனினும் இ ந்த இரண்டு பேரையும் எப்படியாவது சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் குதிரையின் மேல் புதிதாக வந்த மூன்றாவது மனிதனோடும் எப்படிச் சண்டையிட்டுச் சமாளிக்க முடியும்? விக்கிரமனது உள்ளத்தில் "அன்னையைப் பார்க்காமல் போகிறோமே!" என்ற எண்ணம் உதித்தது. பல்லக்கிலிருந்த கனிவு ததும்பிய கண்களுடன் தன்னைப் பார்த்துப் பேசிய பெண்ணின் நினைவும் வந்தது. உடனே, பட்டத்து யானை மேல் வந்த சக்கரவர்த்தியின் முகம் அவன் மனக்கண்ணின் முன் தோன்றியது. "நரசிம்ம மகா சக்கரவர்த்தியின் ஆட்சியா இவ்வளவு லட்சணமாயிருக்கிறது! பல்லவ சாம்ராஜ்யத்தில் வழிப்பறியும் கொள்ளையுமா?" என்று நினைத்தான். "இப்படிப்பட்ட சக்கரவர்த்தியா நமது சோழ நாட்டை ஆளுகிறார்?" என்ற எண்ணத்தினால் உண்டான ஆத்திரத்துடன் கத்தியை ஓங்கி வீசினான். இருவரில் ஒருவன் வீழ்ந்தான். அதே சமயத்தில் குதிரை மீது வந்த வீரன் தன்னுடைய கத்தியை இன்னொருவன் மீது செலுத்த அவனும் மாண்டு வீழ்ந்தான். விக்கிரமனுக்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. அவ்வீரன் தன்மீது வீசவேண்டிய வாளைத்தான் தவறுதலாய் அவன்மீது செலுத்திவிட்டானோ என்று நினைப்பதற்கு இல்லை. ஏனெனில் தான் மேலங்கி அணிந்திருந்தபடியாலும் அவர்கள் வெறும் உடம்பினராயிருந்த படியாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடியதாயிருந்தது. அப்படியானால் இந்த வீரன் யார்! இவர்களால் எதிர்பார்க்கப்பட்டவன் இல்லையா? அச்சமயம் குதிரை மேலிருந்து கீழே குதித்த அவ்வீரன், "ஐயா! நீர் யார்? இந்த இருட்டில் தனி வழியே வந்த காரணம் என்ன?" என்று வினவினான்.

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 3

அத்தியாயம் மூன்று
மாரப்பன் புன்னகை

விக்கிரமன் செண்பகத்தீவில் இருந்த காலத்தில் தாய் நாட்டையும், தாய்நாட்டில் உள்ளவர்களைப் பற்றியும் அடிக்கடி சிந்தனை செய்வான். அருள்மொழி, சிவனடியார், பொன்னன், வள்ளி, காஞ்சி நகர்ப் பெண் ஆகியவர்கள் அவனுடைய உள்ளத்தில் இடைவிடாமல் தோன்றுவார்கள். அவர்களுக்கிடையில் மாரப்ப பூபதியும் சில சமயம் அவனுடைய நினைவுக்கு வருவான். அப்போது விக்கிரமனுடைய உள்ளமும் உடலும் அருவருப்பினாலும் அவமானத்தினாலும் சுருங்கிப்போகும். சித்தப்பா தன்னை வஞ்சித்து நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாரென்று சிராப்பள்ளி மலையில் அவன் புலிக்கொடியை உயர்த்த முயன்ற அன்றைத் தினமே வெளியாகிவிட்டது. அந்த முயற்சிக்கு மாரப்ப பூபதி பூரண உதவி செய்வதாய் வாக்களித்திருந்ததற்கு மாறாக அவர் அச்சமயம் அருகில் வராமலே இருந்துவிட்டது மாத்திரமில்லை - அவரே முன்னதாகப் பல்லவ சேனாதிபதிக்குத் தகவல் தெரிவித்தவர் என்பதும் அவனைச் சிறைப்படுத்திக் காஞ்சிக்குக் கொண்டு போன வீரர்களின் பேச்சிலிருந்து தெரிந்துவிட்டது. ஆகையால், மாரப்ப பூபதியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் விக்கிரமனுடைய உள்ளம் கசந்ததோடு, நாவும் கசந்தது. சோழ வம்சத்தில் இப்படிப்பட்ட மனிதர் ஒருவரும் பிறந்ததை எண்ணி எண்ணி அவன் மனம் குன்றினான். இவ்வாறு அவனுடைய அருவருப்புக்கும் அவமான உணர்ச்சிக்கும் காரணமாயிருந்த மாரப்ப பூபதி, இப்போது சற்றும் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று எதிரில் நின்றதும், விக்கிரமனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? இரத்தின வியாபாரியின் முகத்தில் தோன்றிய திகைப்பை மாரப்ப பூபதி கவனித்தவனாய், "ஏனையா இப்படி மிரளுகிறீர்? ஏதோ திருடனைப் பற்றிப் பேச்சு நடந்ததே? ஒருவேளை நான் தான் திருடன் என்று நினைத்துக் கொண்டீரோ?" என்று சொல்லி மீண்டும் ஏளனச் சிரிப்பு சிரித்தான். இதற்குள் விக்கிரமன், ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான். "இந்த நாட்டுத் திருடர்கள் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஐயா! நான் இந்த நாட்டான் அல்ல. ஆனால் நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப்புரட்டே கிடையாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகையால் நீர் திருடராயிருக்க முடியாது" என்றான். "அசலூர்க்காரனாயிருந்தாலும் அகம்பாவத்தில் மட்டும் குறைச்சல் இல்லை. நீர் எந்தத் தேசம், ஐயா? உமது பெயர் என்ன? எதற்காக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறீர்?" என்று பூபதி கேட்டான். "உமக்குத் தெரிந்தேயாக வேண்டுமானால் சொல்கிறேன். என் பெயர் தேவசேனன்; இரத்தின வியாபாரம் செய்ய வந்திருக்கிறேன்." "ஓகோ! இரத்தின வியாபாரம் செய்வதற்கா வந்திருக்கிறீர்? அப்படியா சமாசாரம்? இரத்தின வியாபாரி ஒவ்வொரு கல் தச்சனாகக் கூப்பிட்டு எதற்காக இரகசியம் பேச வேண்டும்? பல்லவ நாட்டிலிருந்து சிற்பிகளைக் கலைத்து அழைத்துப் போகிறவர்களுக்கு நரசிம்ம சக்கரவர்த்தி என்ன தண்டனை விதிப்பார் தெரியுமா?" "எனக்குத் தெரியாது! ஐயா! நான்தான் அயல் நாட்டான் என்றேனே? இவ்வளவு விசாரணை புரியும் நீர் யார் என்று எனக்குத் தெரியவில்லையே?" மாரப்ப பூபதி கடகடவென்று சிரித்தான். "நான் யார் என்று தெரியவில்லையா? நல்லது; வெண்ணாற்றங்கரைப் போர்க்களத்தில் உயிரைவிட்ட பார்த்திப மகாராஜாவுக்கு உடன்பிறந்த சகோதரன் நான்! தற்சமயம் சோழ நாட்டின் பிரதம சேனாதிபதி!" இப்படிச் சொல்லியபோது இரத்தின வியாபாரியின் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று மாரப்பன் உற்றுப் பார்த்தான். ஒன்றும் தெரியாமல் போகவே "என்னுடைய கீர்த்தி உம்முடைய காதுக்கு எட்டியிராவிட்டாலும் வீராதி வீரரும் சூராதி சூரருமான பார்த்திப மகாராஜாவின் புகழ் கண்டிப்பாக எட்டியிருக்க வேண்டுமே? அந்தப் பெயரைக் கூட நீர் கேட்டதில்லையா? அப்படி எந்தக் கண்காணாத தேசத்து மனுஷர் ஐயா நீர்?" என்று கேட்டான். இரத்தின வியாபாரி சற்று யோசிப்பவன்போல் காணப்பட்டான். பிறகு அவன் மாரப்பனை ஏறிட்டுப் பார்த்து, "ஆமாம். பார்த்திப மகாராஜாவின் புகழை நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய புதல்வர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் செண்பகத் தீவுக்கு அரசர், நான் அவருடைய பிரஜை. ஆகையால் பார்த்திப மகாராஜாவைப் பற்றிக் கெடுதலாகவோ பரிகாசமாகவோ எதுவும் என் காது கேட்கச் சொல்ல வேண்டாம்!" என்றான். மாரப்பனுடைய முகத்தில் இப்போது சிறிது திகைப்புக் காணப்பட்டது. ஆயினும் அவன் உடனே சமாளித்துக் கொண்டு கூறினான்! "ஓஹோ! அவ்வளவு ராஜபக்தியுள்ள பிரஜையா நீர்? உம்முடைய முகத்தில் விழித்தாலே புண்ணியம், ஐயா! அதனால்தான் உம்மை விட்டுப் போகவே மனம் வரமாட்டேன் என்கிறது. ஆமாம், உமது பெயர் என்னவென்று சொன்னீர்?" "தேவசேனன்." "தேவசேனன் - ஆகா! என்ன திவ்யமான பெயர்! - இவ்வுலகில் பெயர், புகழ் எல்லாம் பொய் என்று சொல்வது எவ்வளவு பிசகு? உம்முடைய பெயருக்காகவே உம்மிடம் இரத்தினம் வாங்கலாம். இருக்கட்டும்; கோமகள் குந்தவி தேவி இரத்தினம் வாங்குவதற்குத்தானே உம்மை அரண்மனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்?" "கோமகள் குந்தவி தேவியா? யாரைச் சொல்கிறீர்?" என்று இரத்தின வியாபாரி உண்மையான வியப்புடனே கேட்டான். "இப்போது பல்லக்கில் போனாளே. அந்தத் தேவியைத்தான்!" "அவள் குந்தவி தேவியின் தோழி மாதவி அல்லவா?" "ஓஹோ! உன்னிடம் அப்படி ஒரு பொய் சொல்லி வைத்தாளாக்கும். அப்பாவுக்கு ஏற்ற பெண்தான். நீ இந்தத் தேசத்து மனுஷன் அல்லவென்று நிச்சயமாய்த் தெரிகிறது. அல்லது இந்தத் தேசத்தைவிட்டு வெளியேற்றப் பட்டவனாயிருக்க வேண்டும்...." இந்த இடத்தில் மாரப்பபூபதி தனக்குதானே பேசிக் கொண்டான். பிறகு திடீரென்று தேவசேனனை உற்றுப் பார்த்து, "ஆமாம்; உங்கள் தேசத்து ராஜா விக்கிரமன் என்று சொன்னீரே? அவனுடைய தாயார் அருள்மொழி ராணிக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி அவனுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். இந்தக் கேள்வியினால் மாரப்பபூபதி என்ன எதிர்பார்த்தானோ, அது சித்தியாகிவிட்டது. இத்தனை நேரமும் மாறாமல் பதுமை போலிருந்த இரத்தின வியாபாரியின் முகம் மாறிவிட்டது. அளவிலாத பீதியுடனும் ஆத்திரத்துடனும், "என்ன? அருள்மொழி ராணிக்கு என்ன?" என்று அவன் அலறிக் கொண்டு கேட்டான். மாரப்பன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அதே சமயத்தில், அவர்களுக்குப் பின்னால் வெகு சமீபத்தில் ஒரு பெரும் கோலாகல கோஷம் எழுந்தது. "வாதாபியை அழித்து வாகை சூடிய நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க!" "ஐய விஜயீ பவ!" என்று ஏககாலத்தில் அநேகம் குரல்களிலிருந்து வாழ்த்தொலிகள் கிளம்பி ஆரவாரித்தன. "சக்கரவர்த்தி வருகிறார், சக்கரவர்த்தி வருகிறார்" என்று பலர் பேசுவது காதில் விழுந்தது.

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 2

அத்தியாயம் இரண்டு
சந்திப்பு

மாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், சக்கரவர்த்தி கொஞ்ச காலமாகப் பல்லவ நாட்டிலேயே இல்லையென்றும், அவருடைய குமாரன் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு அவனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டு மாறுவேஷத்துடன் தேச யாத்திரை போயிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால், சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவி தேவியும் இவ்வருஷம் கலைவிழாவுக்கு விஜயம் செய்திருந்தபடியால், மாமல்லபுர வாசிகள் சிறிதளவும் உற்சாகம் குன்றாமல் விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். கலைவிழாவின் காட்சிகளையும், கற்பாறைகளில் செதுக்கிய அற்புதமான சித்திரங்களையும், ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விருந்து, நாட்டியம், கூத்து ஆகியவைகளையும் பார்த்து அனுபவித்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கிய நமது இரத்தின வியாபாரி குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் அபூர்வமான கிளர்ச்சி தோன்றியது; கண்களில் அளவில்லாத ஆர்வம் காணப்பட்டது. எவ்வளவுதான் பார்த்த பிறகும் கேட்ட பிறகுங்கூட அவனுடைய இருதய தாகம் தணிந்ததாகத் தெரியவில்லை. பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, அந்தத் தாகம் அடங்காமல் பெருகிக் கொண்டிருந்ததென்று தோன்றியது. அந்த அதிசயமான சிற்பக் காட்சிகளையும், உயிருள்ள ஓவியங்களையும் பார்க்கும்போது, ஊனையும் உள்ளத்தையும் உருக்கும் இசை அமுதத்தைப் பருகும் போதும் அவன் அடைந்த அனுபவம் ஆனந்தமா? அல்லது அசூயையா? அல்லது இரண்டும் கலந்த உணர்ச்சியா? இரத்தின வியாபாரிக்குப் பக்கத்தில் தலையிலும் தோளிலும் மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஒரு குள்ளன் போய்க் கொண்டிருந்தான். அவனுடன் இரத்தின வியாபாரி ஜாடை காட்டிப் பேசுவதைப் பார்த்தால் குள்ளனுக்குக் காது செவிடு என்று ஊகிக்கலாம். அவன் செவிடு மட்டுமல்ல - ஊமையாகக்கூட இருக்கலாமென்றும் தோன்றியது. தன்னுடைய நடவடிக்கைகளைப் பற்றி வேறு யாருக்கும் தெரியப்படுத்த முடியாமலிருக்கும் பொருட்டே நமது இரத்தின வியாபாரி அத்தகைய ஆளைப் பொறுக்கி எடுத்திருக்க வேண்டும். ஆமாம்; அந்த இளம் வர்த்தகங்களின் நடவடிக்கைகள், கவனித்துப் பார்ப்பவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணுவனவாய்த் தான் இருந்தன. அவன் ஆங்காங்கு சிற்பக் காட்சியோ, சித்திரக் காட்சியோ உள்ள இடத்தில் சிறிது நேரம் நிற்பான். சிற்பங்களையும் சித்திரங்களையும் பார்ப்பதோடல்லாமல் பக்கத்தில் நிற்கும் சிற்பிகளையும் கவனிப்பான். அவர்களில் யாராவது ஒருவன் தனித்து நிற்க நேர்ந்தால் அவனை நெருங்கி முதுகைத் தட்டி "உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்; கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வருகிறாயா?" என்று கேட்பான். இரத்தின வியாபாரியின் கம்பீரத் தோற்றத்தையும் களையான முகத்தையும் பார்த்த யாருக்குத்தான் அவன் பேச்சைத் தட்ட மனம் வரும்? அவன் சொற்படியே கொஞ்சம் தனியான இடத்துக்கு அவர்கள் வருவார்கள். அவர்களிடம் அவ்வர்த்தகன் கடல்களுக்கு அப்பால் தான் வசிக்கும் தேசத்தைப் பற்றியும், அந்த தேசத்தின் வளத்தையும் செல்வத்தைப் பற்றியும் பிரமாதமாக வர்ணிப்பான். கரிகாலச் சோழச் சக்கரவர்த்தியின் காலத்தில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் தான் அத்தேசத்தில் வசிக்கிறார்களென்றும், அவர்களுக்குத் தாய்நாட்டிலுள்ளவை போன்ற திருக்கோயில்களும் சிற்பங்களும் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையே கிடையாதென்றும் எடுத்துச் சொல்வான். "அந்தத் தேசத்துக்கு நீ வருகிறாயா? வந்தால் திரும்பி வரும்போது பெருஞ் செல்வனாகத் திரும்பி வரலாம். அந்த நாட்டில் தரித்திரம் என்பதே கிடையாது. தெருவெல்லாம் இரத்தினக் கற்கள் இறைந்து கிடக்கும்!" என்று சொல்லி, குள்ளன் தூக்கிக் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பிடி இரத்தினக் கற்களை எடுத்து அவர்களிடம் காட்டுவான். இரத்தின வியாபாரியின் பேச்சிலேயே அநேகமாக அந்தச் சிற்பி மயங்கிப் போயிருப்பான். கை நிறைய இரத்தினக் கற்களைக் காட்டியதும் அவன் மனத்தை நிச்சயப்படுத்திக் கொண்டு தன்னுடைய சம்மதத்தைத் தெரிவிப்பான். அப்படிச் சம்மதம் தெரிவிக்கும் ஒவ்வொருவரிடமும் பெரிய இரத்தினம் ஒன்றைப் பொறுக்கிக் கொடுத்து, "அடுத்த அமாவாசையன்று புலிக் கொடி உயர்த்திய கப்பல் ஒன்று இந்தத் துறைமுகத்துக்கு வரும். அந்தக் கப்பலுக்கு வந்து இந்த இரத்தினத்தைக் காட்டினால் கப்பலில் ஏற்றிக் கொள்வார்கள்" என்பான் நமது இளம் வர்த்தகன். கலைத் திருவிழா நடந்த மூன்று தினங்களிலும் ரத்தின வியாபாரி மேற்சொன்ன காரியத்திலேயே ஈடுபட்டிருந்தான். மூன்றாவது நாள் விஜயதசமியன்று அவன் வீதியோடு போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டான். (எதிர்பாராததா? அல்லது ஒரு வேளை எதிர்பார்த்தது தானா? நாம் அறியோம்.) ஆம்; அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நங்கை முன் போலவே பல்லக்கில் சென்ற காட்சிதான். மூன்று வருஷத்துக்கு முன்பு பார்த்ததற்கு இப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் சிறிது மாறுதல் தோன்றியது. அன்றைக்கு அவளுடைய முகம் சூரியன் அஸ்தமித்த பிறகு நீலக் கடலில் உதயமாகும் பூரண சந்திரனைப்போல் பசும்பொன் காந்தியுடன் பிரகாசித்தது. இன்றோ அதிகாலை நேரத்தில் மேற்குத் திசையில் அஸ்தமிக்கும் சந்திரனைப் போல் வெளிறிய பொன்னிறமாயிருந்தது. அப்போது முகத்தில் குடிகொண்டிருந்த குதூகலத்துக்குப் பதிலாக இப்போது சோர்வு காணப்பட்டது. விஷமம் நிறைந்திருந்த கண்களில் இப்போது துயரம் தோன்றியது. இந்த மாறுதல்களினாலே அந்த முகத்தின் சௌந்தரியம் மட்டும் அணுவளவும் குன்றவில்லை; அதிகமாயிருந்ததென்றும் சொல்லலாம். வீதியோடு போய்க் கொண்டிருந்த இரத்தின வியாபாரி தனக்குப் பின்னால் கூட்டத்தில் ஏதோ கலகலப்புச் சத்தம் உண்டாவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். காவலர் புடைசூழ ஒரு சிவிகை வருவதைக் கண்டான். அச்சிவிகையில் இருந்த பெண் தன் இருதய மாளிகையில் குடிகொண்டிருந்தவள்தான் என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொண்டான். அச்சமயத்தில் அவன் நெஞ்சு விம்மிற்று, கண்களில் நீர் தளும்பிற்று. இம்மாதிரி சந்தர்ப்பம் நேருங்கால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவன் யோசித்து வைத்திருந்ததெல்லாம் சமயத்துக்கு உதவவில்லை. வீதி ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டான். பல்லக்கின் பக்கம் பார்க்காமல் திரும்பி வேறு திசையை நோக்கினான். அவன் இருந்த இடத்தைச் சிவிகை தாண்டியபோது தன்னை இரண்டு விசாலமான கரிய கண்கள் கூர்ந்து நோக்குவதுபோல் அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. திரும்பிப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் அளவு மீறிப் பொங்கிற்று. பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வேறு திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல்லக்கு கொஞ்சதூரம் முன்னால் போன பிறகுதான் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பல்லக்கில் உட்கார்ந்திருந்த பெண் தன்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அடுத்த கணம் அவனுடைய கண்கள் மறுபடியும் கீழே நோக்கின. ஆனால் பல்லக்கு மேலே போகவில்லை; நின்றுவிட்டது. பல்லக்குடன் போய்க் கொண்டிருந்த வீரர்களில் ஒருவன் இரத்தின வியாபாரியை நோக்கி வந்தான். அருகில் வந்ததும், "அப்பா! தேவிக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டுமாம்; கொஞ்சம் வந்துவிட்டுப்போ!" என்றான். இரத்தின வியாபாரி அவனுடன் பல்லக்கை நோக்கிப் போனான். அந்தச் சில வினாடி நேரத்துக்குள் அவனுடைய உள்ளத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் கொந்தளித்தன. 'இந்தப் பெண் யாராயிருக்கும்? எதற்காக நம்மை அழைக்கிறாள்? நம்மை அடையாளங் கண்டு கொண்டாளோ? அப்படியானால் இத்தனை நாளும் நம்மை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்ததாக ஏற்படுகிறதே? இவள் உயர் குலத்துப் பெண் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை சக்கரவர்த்தியின் மகளாகவே இருக்குமோ? ஐயோ! அவ்விதம் இருந்துவிட்டால்...! இரத்தின வியாபாரி பல்லக்கை நெருங்கி வந்து அந்தப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அப்பப்பா! அவளுடைய பார்வைதான் எவ்வளவு கூரியது? பெண்களின் கண்களை வாளுக்கும் வேலுக்கும் இதனால்தான் ஒப்பிடுகிறார்கள் போலும்! ஆமாம்; குந்தவி அவனுடைய கண்களின் வழியாக அவனது இருதயத்தையே ஊடுருவி அதன் இரகசியத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறவளைப் போலேதான் பார்த்தாள். இவ்விதம் சற்று நேரம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "ஐயா! நீர் யார்? இந்த தேசத்து மனுஷர் இல்லை போலிருக்கிறதே?" என்றாள்! "ஆம். தேவி! நான் கடலுக்கப்பால் உள்ள செண்பகத்தீவில் வசிப்பவன் இரத்தின வியாபாரம் செய்வதற்காக இவ்விடம் வந்தேன். என் பெயர் தேவசேனன்" என்று மளமளவென்று பாடம் ஒப்புவிக்கிறவனைப்போல் மறுமொழி கூறினான் இரத்தின வியாபாரி. அவனுடைய படபடப்பு குந்தவி தேவிக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும். மறுபடியும் சிறிது நேரம் மௌனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "எந்த தீவு என்று சொன்னீர்?" என்றாள். "செண்பகத் தீவு - செண்பகத் தீவு - செண்பகத் தீவு - கேட்ட ஞாபகமாய் இருக்கிறதே! அந்தத் தீவை ஆளும் அரசன் யாரோ?" "செண்பகத் தீவின் பூர்வீக அரச வம்சம் நசித்துப் போயிற்று. சோழ நாட்டு இளவரசர் விக்கிரமர்தான் இப்போது எங்கள் அரசர்." இவ்விதம் சொன்னபோது குந்தவியின் முகத்தில் உண்டான பிரகாசத்தை இரத்தின வியாபாரி கவனிக்காமல் போகவில்லை. அந்தத் தேசப் பிரஷ்டனை இன்னும் இவள் நினைவு வைத்துக் கொண்டுதானிருக்கிறாள்! ஆனால் இவள் யார்? இவ்வளவு முககாந்தியும் சௌந்தரியமும் உள்ளவள் ஒருவேளை...? அத்தகைய சந்தேகமே இரத்தின வியாபாரிக்குத் திகில் உண்டாக்கிற்று. அப்போது குந்தவி, "நீர் இரத்தின வியாபாரி என்பதாகச் சொன்னீரல்லவா?" என்று கேட்டாள். "ஆம், அம்மா; இதோ இந்தக் குள்ளன் தலையில் உள்ள மூட்டைகளில் மேன்மையான இரத்தினங்கள் இருக்கின்றன. வேணுமானால் இப்போது எடுத்துக் காட்டுகிறேன்." "இப்போது வேண்டாம், வீதியில் கூட்டம் சேர்ந்து போகும். சாயங்காலம் அரண்மனைக்கு வாரும்" என்றாள் குந்தவி. அரண்மனை! இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த இளம் வர்த்தகனுடைய முகமானது அப்படி ஏன் சிணுங்குகிறது? அந்தச் சிணுக்கத்தைக் குந்தவி கவனித்தாளோ, என்னவோ தெரியாது. எதையோ மறந்து போய் நினைத்துக் கொண்டவள் போல், "ஆமாம்; சாயங்காலம் கட்டாயம் அரண்மனைக்கு வாரும். சக்கரவர்த்தியின் குமாரி குந்தவி தேவிக்கு இரத்தினம் என்றால் ரொம்பவும் ஆசை கட்டாயம் உம்மிடம் வாங்கிக் கொள்வாள். ஒருவேளை இந்த மூட்டையிலுள்ள இரத்தினங்கள் அவ்வளவையும் வாங்கிக் கொண்டாலும் வாங்கிக் கொள்ளலாம்" என்றாள். இரத்தின வியாபாரி பெருமூச்சு விட்டான். மனத்திலிருந்த பெரிய பாரம் ஏதோ ஒன்று நீங்கியவன் போலத் தோன்றினான். "அப்படி எல்லாவற்றையும் ஒரே இடத்தில் விற்றுவிட வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. இந்தத் தேசத்தில் இன்னும் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டிய இரத்தினங்களை நீங்கள் வாங்கிக் கொண்டால் போதும்" என்றான். "அதற்கும் நீர் அரண்மனைக்குத்தான் வந்தாக வேண்டும். கட்டாயம் வருகிறீரா?" "வருகிறேன்; ஆனால் அரண்மனைக் குள் வந்து யார் என்று கேட்கட்டும்." "குந்தவி தேவியின் தோழி மாதவி என்று கேட்டால் என்னிடம் அழைத்து வருவார்கள்." "தடை ஒன்றும் இராதே?" "ஒரு தடையும் இராது. இருக்கட்டும், இப்படி நீர் இரத்தின மூட்டைகளைப் பகிரங்கமாக எடுத்துக் கொண்டு சுற்றுகிறீரே! திருடர் பயம் இல்லையா உமக்கு?" "நன்றாகக் கேட்டீர்கள்! நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் ஆட்சியில் திருட்டுப் பயமும் உண்டா?" என்றான் இரத்தின வியாபாரி. குந்தவி புன்னகையுடன், "அப்படியா? எங்கள் சக்கரவர்த்தியின் புகழ் அப்படிக் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் பரவியிருக்கிறதா? சந்தோஷம். நீர் சாயங்காலம் அவசியம் அரண்மனைக்கு வருகிறீர் அல்லவா?" என்று கேட்டாள். "கட்டாயம் வருகிறேன்" என்றான் வியாபாரி. பிறகு, குந்தவியின் கட்டளையின் பேரில் பல்லக்கு மேலே சென்றது. இரத்தின வியாபாரி நின்ற இடத்திலேயே நின்று பல்லக்கு ஜனக்கூட்டத்தில் மறையும் வரையில் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். "என்ன அப்பா? எத்தனை நேரம் ஒரே பக்கம் பார்ப்பாய்? கண்விழி பிதுங்கப் போகிறது" என்று ஒரு கடூரமான குரலைக் கேட்டு அந்த இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெருப்பை மிதித்தவன் போல் துள்ளித் திரும்பிப் பார்த்தான். ஒரு கருநிறக் குதிரைமேல் சாக்ஷாத் மாரப்ப பூபதி அமர்ந்து தன்னை ஏளனப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

பார்த்திபன் கனவு பாகம் - 3 அத்தியாயம் - 1

அத்தியாயம் ஒன்று
இரத்தின வியாபாரி 
அமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் வெள்ளைப் பாய் விரித்த கப்பல் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரியன் உதயமாகும் நேரம். அவனுடைய தேஜோ மயமான வரவை எதிர்பார்த்துக் கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள். கப்பலில் இருந்தவர்களிடையே பரபரப்பு அதிகமாய்க் காணப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகக் காணப்பட்டார்கள். எல்லாரும் அவரவர்களுடைய மூட்டைகளை எடுத்து வைத்து, கப்பலிலிருந்து இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந் தார்கள். சிலர் கப்பல் மேல் தளத்தின் ஓரமாக வந்து, மேற்குத் திசையை ஆவலுடன் நோக்கினார்கள். இப்படி மேற்குத் திக்கை நோக்கி நின்றவர்களில் வாலிப வர்த்தகன் ஒருவன் காணப்பட்டான். பிராயம் இருபது, இருபத்தொன்று இருக்கலாம். அவனுடைய உடையிலிருந்தும் அவன் பக்கத்தில் கிடந்த மூட்டையிலிருந்தும் தான் அவனை வியாபாரி என்று சொல்லலாமே தவிர, மற்றபடி தோற்றத்தை மட்டும் கவனித்தால் அவன் இராஜ குலத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்படியிருந்தது. அவன் வியாபாரியாயிருக்கும் பட்சத்தில், சாதாரண வியாபாரியாயிருக்க முடியாது; பெருஞ் செல்வனான இரத்தின வியாபாரியாகத் தான் இருக்க வேண்டும். கப்பலி லிருந்த மற்றவர்கள் அடிக்கடி அந்த இளம் வர்த்தகன் நிற்கும் இடத்தை நோக்கினார்கள். அப்போது அவர்களுடைய கண்களில் பயபக்தி காணப்பட்டது; சிறிது கவலையும் தோன்றியது. அந்த வாலிப வர்த்தகனோ மற்றவர்களை யெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. கண்கொட்டாமல் மேற்குத் திக்கையே நோக்கிக் கொண்டு நின்றான். அவனுடைய முகத்திலேதான் எத்தனை ஆவல்? எவ்வளவு கிளர்ச்சி? அவ்வளவு ஆவலுக்கும் கிளர்ச்சிக்கும் என்னதான் காரணமாயிருக்கும்? நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன்? ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ? "ஆமாம்; அதுதான் உண்மை யாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும்! சற்று நேரம் அப்படியே அசைவின்றி நிற்கிறான் அந்த வாலிப வியாபாரி. ஆரம்பத்தில் வெறும் வரம்பாக மட்டும் தோன்றிய காட்சியானது வரவர மரங்கள், குன்றுகள், கோவில் கோபுரங்களாக மாறிவரும்போது, அவனுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்குவதை முகம் காட்டுகிறது. இதற்கிடையில் கிழக்கே சூரியனும் ஜகஜ்ஜோதியாக உதயமாகித் தன் வன யாத்திரையைத் தொடங்கினான். கரையையே பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று திரும்பி நோக்கினான். கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலோர் அச்சமயம் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்களாதலால், அவன் சமிக்ஞை செய்ததும் உடனே நெருங்கி அவனருகில் வந்து பயபக்தியுடன் நின்றார்கள். "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா?" என்று வாலிபன் கேட்டான். "இருக்கிறது மகா...!" என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டான். "பார்த்தீர்களா? இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம்?" என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான். "மன்னிக்க வேண்டும், சுவாமி!" "என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா?" "நிறைவேற்றுவோம். சுவாமி!" "தாய் நாட்டில் இருக்கும்போது என்னை நீங்கள் சந்திக்க முயலவே கூடாது, தெரியுமா?" "தெரியும் சுவாமி!" "ஒருவேளை தற்செயலாய்ச் சந்தித்தால் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது." "சித்தப்படி நடக்கிறோம்." "அடுத்த அமாவாசையன்று எல்லாரும் இந்தத் துறைமுகத்திற்கு வந்துவிடவேண்டும்." "வந்துவிடுகிறோம்!" "அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்?" "இரத்தின வியாபாரி தேவசேனர் என்று விசாரிக்கிறோம்." "இதிலெல்லாம் கொஞ்சங்கூடத் தவறக்கூடாது." "இல்லை, சுவாமி!" மேற்படி வாலிப இரத்தின வியாபாரி உண்மையில் யார் என்பதை நேயர்கள் இதற்குள்ளாக ஊகித்துக் கொண்டிருக்கலாம். ஆம்; பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வனும், தற்போது செண்பகத் தீவின் அரசனுமான விக்கிரமன் தான் அவன். சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருஷத்தில் விக்கிரமனுடைய ஆட்சியில் செண்பகத் தீவு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து பேரும் புகழும் அடைந்து வந்தது. விக்கிரமனுடைய வரவுக்குப் பிறகு ஒரே தடவை செண்பகத் தீவின் மீது பகைவர் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகு செண்பகத் தீவின் மீது படையெடுக்க யாரும் துணியவில்லை. அதற்கு மாறாக, விக்கிரமனுடைய தலைமையில் செண்பகத் தீவின் படை வீரர்கள் வேறு தீவுகளின் மேல் படையெடுத்துச் சென்று அந்தத் தீவுகளிலெல்லாம் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினார்கள். விக்கிரமனுடைய வீரப் பிரதாபங்களையும், மேதா விலாசத்தையும், மற்ற உயர் குணங்களையும் பற்றிய கீர்த்தியானது தூர தூரத்திலேயுள்ள தீவாந்திரங்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. பல தீவுகளிலுள்ள ஜனங்கள் நல்லாட்சியையும், பாதுகாப்பையும், விரும்பித் தாங்களே விக்கிரமனுடைய ஆட்சிக்குள் வந்து கொண்டிருந்தார்கள். இந்த மூன்று வருஷ காலத்தில் விக்கிரமன் தன்னுடைய தாயாரையாவது, தாய்நாட்டையாவது மறந்து விடவில்லை. மற்றும், பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரின் வீதியில் அவன் கண்ட இளநங்கையின் சந்திர வதனத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. செண்பகத்தீவின் பிரஜைகள் தங்களுடைய பாக்கிய வசத்தினால் கிடைத்த புதிய அரசனின் வம்சம் நீடூழி விளங்க வேண்டுமென்னும் ஆசையுடன், விக்கிரமனுடைய விவாகத்தைக் குறித்துச் சிலமுறை விக்ஞாபனம் செய்து கொண்டார்கள். மகாராஜா விடை கொடுத்தால், தாய்நாட்டுக்குச் சென்று சிறந்த அரசர் குலத்துப் பெண்ணை மணம் பேசி வருவதாகவும் சொன்னார்கள். அப்போதெல்லாம் விக்கிரமன் அவர்களுடைய விக்ஞாபனத்தை மறுதளித்து, விவாகத்தைப் பற்றிப் தன்னுடைய பரிபூரண வெறுப்பையும் தெரிவித்தான். இதற்கு அடிப்படையான காரணம், அந்தக் காஞ்சி நகர்ப் பெண்ணினுடைய கருவிழிகள் ஞாபகந்தானோ, என்னவோ, யாருக்குத் தெரியும்? நாளாக ஆக, விக்கிரமன் செண்பகத் தீவில் தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் துணையின்றித் தனித்திருப்பதை அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. 'நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் இருந்தால்?' - என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத வேதனையையளித்தது. அந்த வேதனை தரும் எண்ணத்தை அவனால் மறக்க முடியாமலிருந்ததோடு, அந்த வேதனையின் நடுவிலேயே ஒருவித இன்பமும் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னை அறியாமல் அடிக்கடி அவன் பெருமூச்சு விட்டான். சில சமயம் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும்போது, அவனுடைய இருதயமானது விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் உணர்ச்சி உண்டாகும். வேதனையுடன் இன்பமும் கலந்து உண்டாக்கிய இந்த ஞாபகத்தை அவன் ஓரளவு மறப்பதற்கு உதவியான ஒரு சம்பவம் இரண்டு மாதத்திற்கு முன்பு நேர்ந்தது. ஒருநாள் இரவு விக்கிரமனுடைய கனவில் அருள்மொழி ராணி தோன்றினாள். மகாராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல், தூயவெள்ளைக் கலையுடுத்தி விபூதி ருத்திராட்சமணிந்து அவள் சிவபக்தியில் கனிந்த சிவவிரதையாகக் காட்சி தந்தாள்! முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி "குழந்தாய் எனக்கு விடை கொடு!" என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து "அம்மா! இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன்? அதற்குள் போக விடை கேட்கிறாயே? எங்கே போகப் போகிறாய்?" என்றான். அருள்மொழி ராணி அதற்கு விடை கூறாமல், "அப்பா குழந்தாய்! நான் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டேன். அதை நீ நிறைவேற்றித் தரவேண்டும். முக்கியமாக அதன் பொருட்டே உன்னைப் பார்க்க வந்தேன்" என்றாள். "என்ன வாக்குறுதி, அம்மா? யாருக்குக் கொடுத்தாய்?" "சக்கரவர்த்தியின் மகள் குந்தவியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்!" விக்கிரமன் திடுக்கிட்டு, "இது என்ன அம்மா சொல்கிறாய்? சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய்?" என்று கேட்டான். "சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய்! இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்." இவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். "நல்ல வேளை! இதெல்லாம் கனவாய்ப் போயிற்றே!" என்று சந்தோஷப்பட்டான். கனவில் கண்டதெல்லாம் வெறும் சித்தப்பிரமை என்பதில் ஐயமில்லை. பழைய பேச்சுகளும் நினைவுகளும் குழம்பி இப்படிக் கனவாகத் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் இத்தனையும் நடந்த பிறகு, "சக்கரவர்த்தி மகளைக் கல்யாணம் செய்துகொள்" என்று தாய் தனக்குக் கட்டளையிடுவாளா? இதைப் பற்றிச் சிவனடியாருக்கு அவள் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும்? ஆனாலும் இந்தக் கனவுதான் விக்கிரமன் காஞ்சி நகர்ப் பெண்ணின் நினைவை ஒருவாறு மறப்பதற்கு உதவி செய்தது. கனவு கண்டது முதல், அவனுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மிகுந்தது. அவள் எங்கே இருக்கிறாளோ? தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ? அன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் - இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி பிரதானிகளிடமும் மற்றுமுள்ள முக்கிய பிரஜைகளிடமும் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவர்கள் எவ்வளவோ ஆட்சேபித்தும் விக்கிரமனுடைய உறுதியை மாற்ற முடியவில்லை. "ஒருவேளை திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு மகாராணியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவேன்" என்று விக்கிரமன் விளையாட்டாகச் சொன்னது அவர்களுக்கு ஒருவாறு திருப்தி அளித்தது. ஆகவே, தாய் நாட்டுக்குப் போகச் சகல வசதிகளுடன் வர்த்தகக் கப்பல் ஒன்று சித்தமாயிற்று. அந்தக் கப்பலில் இரத்தின வியாபாரியாக வேஷம் பூண்டு விக்கிரமன் பிரயாணமானான். வர்த்தக வேஷம் தரித்த மெய்க்காவலர் சிலரும், செண்பகத் தீவின் நிஜ வியாபாரிகள் சிலரும் அவனுடன் கப்பலில் புறப்பட்டார்கள். தாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைகளைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, "ஐயோ! இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே?" என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவா? இதுவன்றி, இன்னொரு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்டுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும்? சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே! இதையெல்லாந் தவிர, ஒருவேளை விக்கிரமன் மாமல்லபுரத்தில் இறங்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். காஞ்சிநகர் வீதியிலும், பின்னர் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அவன் பார்த்த இளநங்கையை மீண்டும் ஒருகால் பார்க்கக் கூடுமோ என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் கிடந்திருக்கக்கூடும். இது விக்கிரமனுக்குக் கூடத் தெரியாமலும் இருக்கலாம். மனித உள்ளத்தின் அந்தரங்க மர்மம் அனைத்தையும் அறிந்து விட்டதாக யார் தான் சொல்ல முடியும்?