தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணையத்தில் படிக்க.

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

தமிழ் கதைகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

தமிழ் வரலாற்று கதைகள், நீதிக்கதைகள், அறிவியல் போன்றவற்றை இணைய

வெள்ளி, 6 ஜூன், 2014

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 20

அத்தியாயம் இருபது
சக்கரவர்த்தி சந்நிதியில் 
மாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று. மாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம் தெரிவித்த போது உண்மையாகவே அவன் எதிர்பார்த்த பலன் கிட்டிற்று. அதாவது வள்ளியின் கோபமெல்லாம் மாரப்பன்மேல் திரும்பிற்று. "ஓகோ! சக்கரவர்த்தியின் மகளை இவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அதற்கு நீ தூது போகவேண்டுமோ? என்னிடம் மட்டும் அந்த மாதிரி அவன் சொல்லியிருந்தால், தலையிலே ஒரு சட்டி நெருப்பைக் கொட்டியிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டு சும்மா வந்தாய்!" என்றாள். "சும்மாவா வந்தேன்? உனக்கு என்ன தெரியும்? எப்பேர்ப்பட்ட கோபம் அப்போது எனக்கு வந்தது தெரியுமா வள்ளி! அவன் வாளைக் கொண்டே அவன் தலையை வெட்டிப் போடப் பார்த்தேன்; புங்கமரம் நடுவிலே நின்று தடுத்து விட்டது!" என்றான். "ஆமாம், நீ வாய்வெட்டுத்தான் வெட்டுவாய்! வாள் வெட்டுக்கு உன் கையிலே சக்தி இருக்கிறதா!" என்றாள் வள்ளி. பொன்னன் "இங்கே வா! நான் சொல்லுகிறது நிஜமா, இல்லையா? என்று காட்டுகிறேன்" என்று சொல்லி அவள் கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு போனான். புங்க மரத்தில் கத்தி வெட்டு ஆழமாய்ப் பதிந்திருந்ததைக் காட்டினான். அதைப் பார்த்ததும் வள்ளி முகம் மலர்ந்தது. "இந்த வெட்டை மரத்தில் ஏன் போட்டாய்? பாவம் பச்சை மரம்! அவன் மேலேயே போடுகிறதுதானே" என்றாள். "இருக்கட்டும்; ஒரு காலம் வரும். அப்போது போடாமலா போகிறேன்!" என்றான் பொன்னன். பிறகு, இருவரும் மேலே என்ன செய்வதென்று வெகு நேரம் யோசித்தார்கள். மாரப்ப பூபதி எவ்வளவு துர்நடத்தை யுள்ளவன் என்பதைச் சக்கரவர்த்திக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் எவ்விதம் தெரிவிப்பது? "நீதான் அன்றைக்குச் சக்கரவர்த்திக்குக் கும்பிடு போட்டுக் காலில் விழுந்தாயே! அவரை உறையூரில் போய்ப் பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிடேன்" என்றாள் வள்ளி. "நான் கலகத்தில் சம்பந்தப்பட்டவன் என்று உறையூரில் எல்லாருக்கும் தெரியுமே! உறையூருக்குள் என்னைப் போகவிடவே மாட்டார்கள். அதிலும் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டு மன்று சொன்னால் சந்தேகப்பட்டுக் காராக்கிரகத்தில் பிடித்துப் போட்டு விடுவார்கள்" என்று பொன்னன் சொன்னான். "அப்படியானால் நான் போய்விட்டு வரட்டுமா?" என்றாள் வள்ளி. "நீ எப்படிச் சக்கரவர்த்தியைப் பார்ப்பாய்? உன்னை யார் விடுவார்கள்?" இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குடிசையின் வாசலில் குதிரைகள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. "யார் இப்போது குதிரைமேல் வந்திருக்க முடியும்?" என யோசித்துக் கொண்டே வள்ளியும் பொன்னனும் வெளியில் வந்தார்கள். பல்லவ வீரர்கள் ஐந்தாறு பேர் வந்திருப்பதைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது. வந்த வீரர்களின் தலைவன், "ஓடக்காரா! உன்னைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை, மரியாதையாய் உடனே புறப்பட்டு வருகிறாயா? விலங்கு பூட்டச் சொல்லட் டுமா?" என்றான். பொன்னன் கலவரமடைந்த முகத்துடன் வள்ளியைப் பார்த்தான். வள்ளி துணிச்சலுடன் வீரர் தலைவனை நோக்கி,"சோழ நாட்டில் மரியாதைக்கு எப்போதும் குறைச்சல் இல்லை ஐயா! நீங்கள் பிறந்த ஊரில் தான் மரியாதைக்குப் பஞ்சம் போலிருக்கிறது!" என்றாள். "ஓகோ! நீதான் வாயாடி வள்ளியா? உன்னையுந்தான் கொண்டுவரச் சொன்னார், சக்கரவர்த்தி!" "ஆகா! வருகிறேன். உங்கள் சக்கரவர்த்தியை எனக்குந் தான் பார்க்க வேண்டும். பார்த்து "உறையூரிலிருந்து காஞ்சிக்குப் போகும்போது கொஞ்சம் மரியாதை வாங்கிக் கொண்டு போங்கள்!" என்றும் சொல்ல வேண்டும் என்றாள். சக்கரவர்த்தியின் விஜயத்தை முன்னிட்டு உறையூர் வீதிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த போது பொன்னனுக்கும் வள்ளிக்கும் ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. முன் தடவை உறையூர் இவ்வளவு அலங்காரத்துடன் காட்சியளித்தது, பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்பிய சமயத்தில்தான். ஆகா அதையெல்லாம் சோழநாட்டு ஜனங்கள் அடியோடு மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது! பார்த்திப மகாராஜாவின் மரணத்துக்குக் காரணமான நரசிம்ம சக்கரவர்த்தியின் விஜயத்துக்காக இப்படி யெல்லாம் நகரலங்காரம் செய்திருக்கிறார்களே! இது என்ன அவமானம்? சோழ நாட்டுக்கு என்ன கதி நேர்ந்துவிட்டது? அருள்மொழி ராணி இப்போது உறையூருக்கு வந்து இந்தக் கோலாகலங்களையெல்லாம் பார்த்தால் மனம் சகிப்பாரா? இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் வள்ளியும் சக்கரவர்த்திக்கென்று புதிதாக அமைக்கப்பட்டிருந்த அரண்மனையை அடைந்தார்கள். அந்த அரண்மனையில் பெருமிதமும், அதில் காணப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளும் அவர்களைப் பிரமிக்கச் செய்தன; அவர்களின் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தின. சோழ மன்னன் அமர்ந்து ஆட்சி செலுத்த வேண்டிய இடத்தில் வெளியூரான் வந்தல்லவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறான்? அரண்மனைக்குள் அவர்கள் ஒரு அறையில் கொண்டு வந்து நிறுத்தப் பட்டார்கள். அதற்கு அடுத்த அறையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. கம்பீரமான ஒரு ஆண் குரல் அதிகமாகக் கேட்டது. ஒரு இளம் பெண்ணின் இனிய குரலும், சிரிப்பின் ஒலியும் இடையிடையே கேட்டன. ஈனஸ்வரத்தில் இன்னொரு ஆடவன் குரலும் கேட்டது. அது மாரப்ப பூபதியின் குரல் மாதிரி இருக்கவே பொன்னன் திடுக்கிட்டான். சக்கரவர்த்திக்கு விரோதமான சதியாலோசனையில் கலந்து கொண்டதன் பொருட்டு விசாரிப்பதற்காகத்தான் சக்கரவர்த்தி தங்களை அழைத்து வரச் செய்திருக்க வேண்டும் என்று, பொன்னனும் வள்ளியும் கிளம்பும்போது ஊகித்தார்கள். விசாரணையின்போது தைரியமாக மறுமொழி சொல்லி, சக்கரவர்த்திக்குப் பொன்னன் கும்பிட்ட அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். மாரப்ப பூபதியின் ஈனக் குரலிலிருந்து தாங்கள் ஊகித்தது சரிதான் என்று அவர்களுக்குப்பட்டது. அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள். அவள் சொல்லி முடிப்பதற்குள், உள்ளேயிருந்து கம்பீரமான குரல் "எங்கே? அந்த ஓடக்காரனைக் கொண்டு வா" என்று கட்டளையிட்டது. பொன்னனையும் வள்ளியையும் அடுத்த அறைக்குள் கொண்டு போனார்கள். அங்கே நவரத்தின கச்சிதமான சிங்காதனத்தில் சக்கரவர்த்தி கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருப்பதையும் அவருக்கு அருகில் குந்தவி தேவி சாய்ந்து கொண்டு நிற்பதையும், எதிரே மாரப்பன் குனிந்த தலையுடனும் நடுங்கிய உடம்புடனும் எண்சாணுடம்பும் ஒரு சாணாய்க்குறுகி நிற்பதையும், வள்ளியும் பொன்னனும் போகும் போதே பார்த்துக் கொண்டார்கள். சக்கரவர்த்தியின் எதிரில் போய் நின்ற பிறகு அவர்களால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. சக்கரவர்த்தியின் முகத்தில் பொங்கிய தேஜஸானது அப்படிக் கண்களைக் கூசச் செய்து அவர்களுக்கு அடக்க ஒடுக்கத்தை அளித்தது. மாமல்ல சக்கரவர்த்தி இடி முழக்கம் போன்ற குரலில் சொன்னார்: "ஓகோ! இவன்தானா? தோணித் துறையில் அன்றைக்குப் பார்த்தோமே? வெகு சாதுவைப்போல் வேஷம் போட்டு நடித்தான்! நல்லது, நல்லது! படகு தள்ளுகிறவன் கூடப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகச் சதி செய்வதென்று ஏற்பட்டுவிட்டால், அப்புறம் கேட்பானேன்? அழகுதான்!" இவ்விதம் சக்கரவர்த்தி சொன்னபோது, பொன்னனும் வள்ளியும் அடியோடு தைரியத்தை இழந்துவிட்டார்கள். அவர்களுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. தோணித்துறையில் இனிய வார்த்தை பேசிய சக்கரவர்த்திக்கும், இங்கே நெருப்புப் பொறி பறக்கும்படி பேசும் சக்கரவர்த்திக்கும் காணப்பட்ட வித்தியாசம் அவர்களைத் திகைக்கச் செய்தது. சக்கரவர்த்தி மேலும் சொன்னார்: "இருக்கட்டும், உங்களைப் பின்னால் விசாரித்துக் கொள்ளுகிறேன். ஓடக்காரா! நான் இப்போது கேட்பதற்கு மறுமொழி சொல்லு. ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாய்? நிமிர்ந்து என்னைப் பார்த்து, உண்மையைச் சொல்லு. நமது சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி விக்கிரம இளவரசரை முக்கியமாகத் தூண்டிவிட்டது யார்....?" பொன்னன் பளிச்சென்று நிமிர்ந்து பார்த்து "பிரபோ! இதோ உங்கள் முன்னால் நிற்கிறாரே, இந்த மாரப்ப பூபதிதான்!" என்றான்.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 19

அத்தியாயம் பத்தொன்பது
மாரப்பனின் மனோரதம் 
மாரப்ப பூபதி பொன்னனின் குடிசைக் கதவைத் திறந்தபோது, வள்ளி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்:- "மானம் போன பிறகு உயிரை வைத்துக் கொண்டு இருந்து என்ன பிரயோஜனம்? நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும் துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்ட மாரப்பனுக்கும் என்ன வித்தியாசம்?" இதைக் கேட்டதும் அவனுடைய முகம் கோபத்தினால் சிவந்தது. வாசற்படியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். பிறகு என்ன தோன்றிற்றோ என்னவோ, அவனுடைய முகத்தில் ஒருவிதமான மலர்ச்சி உண்டாயிற்று. புன்னகையுடன் "என்ன வள்ளி! என் தலையையும் சேர்த்து உருட்டுகிறாய்? என்ன சமாசாரம்? என்னோடு பொன்னனையும் சேர்க்கும் படியாக அவன் அப்படி என்ன பாதகம் செய்துவிட்டான்?" என்றான். அடுப்பு வேலையைப் பார்த்தபடி பொன்னன்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டு தலை நிமிராமல் முதலில் பேசிய வள்ளி வேற்றுக் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பார்த்தாள். மாரப்பன் என்று அறிந்ததும், அவளுக்குக் கொஞ்சம் திகைப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு "உங்கள் தலையை உருட்டுவதற்கு என்னால் முடியுமா, ஐயா? அதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோ?" என்றாள். இதில் பிற்பகுதியை மெல்லிய குரலில் சொன்னபடியால் மாரப்பன் காதில் நன்றாக விழவில்லை. "என்ன சொன்னாய் வள்ளி?" என்றான். இதற்குள் பொன்னன் வெளியிலிருந்து வரவே, மாரப்பன் அவனைப் பார்த்து, "பொன்னா! உன்னோடு ஒரு சமாச்சாரம் பேச வேண்டும், வா" என்று கூறி அவனை வெளியில் அழைத்துப் போனான். இருவரும் நதிக் கரைக்குச் சென்று மரத்தடியில் உட்கார்ந்தார்கள். "பொன்னா! நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். அதற்காக என்றைக்காவது ஒரு நாள் நான் உனக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்" என்றான் மாரப்பன். "நானா ஐயா? உங்களுக்கு அப்படியொன்றும் செய்ததாகத் தெரியவில்லையே?" "உனக்குத் தெரியாமலே செய்திருக்கிறாய், பொன்னா!" "ஐயையோ! அப்படியானால், அதை வள்ளியிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள். அவள் என்னை இலேசில் விட மாட்டாள்!" என்றான் பொன்னன். மாரப்பன் சிரித்துக் கொண்டே, "அதுதான் பொன்னா! அதுதான்! வள்ளியை நீ கல்யாணம் செய்து கொண்டாயே, அதுதான் நீ எனக்குச் செய்த பெரிய உபகாரம். ஒரு காலத்தில் அவளை நான் கல்யாணம் செய்து கொள்ளலாமென்ற சபலம் இருந்தது. அப்படி நடந்திருந்தால், என்னை என்ன பாடு படுத்தியிருப்பாளோ?" "ஆமாம் எஜமான் ஆமாம்! தங்களுடைய சாதுக் குணத்துக்கும் வள்ளியின் சண்டைக் குணத்துக்கும் ஒத்துக் கொள்ளாதுதான். சண்டை என்று கேட்டாலே தங்களுக்குச் சுரம் வந்துவிடும் என்பதுதான் உலகமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே!" என்றான் பொன்னன். "என்ன சொன்னாய்?" என்று மாரப்பன் கத்தியை உருவினான். "ஓகோ! கத்தியைக் கூட கொண்டு வந்திருக்கிறீர்களா? நிஜக் கத்திதானே? கொஞ்சம் இருங்கள் வள்ளியைக் கூப்பிடுகிறேன். உங்கள் உறையில் உள்ள கத்தி நிஜக் கத்தியல்ல - மரக் கத்தி என்று அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்!" என்று கூறிவிட்டுப் பொன்னன் எழுந்திருந்தான். மாரப்பன் கத்தியைப் பக்கத்தில் தரையில் வைத்து விட்டு, "வேண்டாம், பொன்னா! உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண் பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார்! விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம் பெருமுயற்சி செய்தோமே? அது பலித்ததா? நமது ஆலோசனைகளில் அருள்மொழி ராணியைச் சேர்த்துக் கொண்டதால் தானே, காரியம் கெட்டுப் போயிற்று?" என்றான். "அப்படியா? மகாராணி என்ன செய்தார்கள் காரியத்தைக் கெடுப்பதற்கு? அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பி விட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா? பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவு விரோதம்?" "இல்லை, பொன்னா! ராணி யாரோ ஒரு சிவனடியாரை நம்பி, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அந்த வேஷதாரியை நம்ப வேண்டாமென்று நான் எவ்வளவோ சொன்னேன். கேட்டால்தானே! உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றன்! எல்லாவற்றையும் போய்ச் சொல்லிவிட்டான்!" இதைக் கேட்டதும் பொன்னனுக்கு ஏற்கெனவே அந்தச் சிவனடியார் மேல் ஏற்பட்டிருந்த சந்தேகம் கொஞ்சம் பலப்பட்டது. ஒருவேளை அவருடைய வேலையாகவே இருந்தாலும் இருக்கலாம். நாம் அனாவசியமாய் மாரப்ப பூபதியைச் சந்தேகித்தோமே? என்று சிறிது வெட்கமடைந்தான். "சிவனடியாராயிருந்தாலும் சரி, என்றைக்காவது ஒரு நாள் உண்மை தெரியப் போகிறது, அப்போது துரோகம் செய்தவனை...." என்று பொன்னன் பல்லை நரநரவென்று கடித்த வண்ணம், மாரப்பனுக்குப் பக்கத்தில் தரையில் கிடந்த கத்தியைச் சட்டென்று எடுத்து ஒரு சுழற்றிச் சுழற்றி அருகேயிருந்த ஒரு புங்கமரத்தில் ஒரு போடு போட்டான். வைரம் பாய்ந்த அந்த அடி மரத்தில் கத்தி மிக ஆழமாய்ப் பதிந்தது! மாரப்பனுடைய உடம்பு பாதாதி கேசம் ஒரு கணநேரம் வெடவெட வென்று நடுங்கிற்று. எனினும் பொன்னன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டான். "பழைய கதையை இனிமேல் மறந்துவிடு, பொன்னா! இளவரசர் என்னவோ இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. நம்முடைய காரியத்தை நாம் பார்க்க வேண்டியது தான்." "நம்முடைய காரியம் என்ன இருக்கிறது இனிமேல் எல்லாந்தான் போய்விட்டதே!" எல்லாம் போய்விடவில்லை. நானும் நீயும் இருக்கிற வரையில் எல்லாம் போய்விடாது. ஆனால் யுக்தியை மாற்றிக் கொள்ள வேண்டும். சண்டையினால் முடியாத காரியத்தைச் சமாதானத்தினால் முடித்துக் கொள்ள வேண்டும். நீ கெட்டிக்காரன் பொன்னா! நான் எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப் பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீ மாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளை திரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம் திரும்பி வராதல்லவா?" ஆரம்பத்தில் மாரப்பனின் பேச்சு பொன்னனுக்கு வேப்பங்காயாக இருந்தது. விக்கிரமனுக்கு இராஜ்யத்தை திருப்பிக் கொடுப்பது பற்றி பிரஸ்தாபித்ததும், பழைய சேனாதிபதி, சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ? என்று பொன்னனுக்கு யோசனை உண்டாயிற்று. "நான் என்ன ஒத்தாசை செய்ய முடியும்?" என்று அவன் கேட்டான். "பிரமாதமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சக்கரவர்த்தியின் மகள் குந்தவிதேவி, அருள்மொழி ராணியைப் பார்க்க வரப்போவதாகப் பிரஸ்தாபம். நீ தானே படகு விடுவாய்? சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான் தெரியுமே. பொன்னா! வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா? எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்கு ஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார்!" என்றான். குந்தவிதேவியை விக்கிரமன் மணந்துகொள்ள வேண்டுமென்னும் அருள்மொழி ராணியின் பழைய விருப்பம் பொன்னனுக்கு ஞாபகம் இருந்தது. எனவே, மாரப்பன் மேற்கண்டவாறு பேசியதும், பொன்னனுக்கு அவனிடமிருந்த வெறுப்பெல்லாம் திரும்பி வந்துவிட்டது; உள்ளுக்குள் கோபம் பொங்கிற்று. ஆயினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "அதற்கென்ன? சமயம் நேர்ந்தால் கட்டாயம் உங்களைப் பற்றிக் குந்தவிதேவியிடம் பேசுகிறேன்" என்றான். "நீ செய்யும் உதவியை மறக்கமாட்டேன். பொன்னா! சக்கரவர்த்தி என்னைக் கூப்பிட்டிருக்கிறார். நாளைக்குப் பார்க்கப் போகிறேன். சேனாதிபதி வேலையை இப்போது எனக்குக் கொடுக்கப் போகிறார். பிறகு சோழ இராஜ்யமே என் கைக்குள் வருவதற்கு அதிக நாளாகாது. அப்போது உன்னைக் கவனித்துக் கொள்வேன்" என்று சொல்லிக் கொண்டே மாரப்பன் குதிரை மீதேறி அதைக் தட்டி விட்டான்.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 18

அத்தியாயம் பதினெட்டு
பொன்னனின் அவமானம் 
சென்ற மூன்று தினங்களாகப் பொன்னன் குடிசைக்குள்ளே இடியும் மழையும் புயலும் பூகம்பமுமாக இருந்தது. "நான் செய்தது தப்பு என்று தான் ஆயிரந் தடவை சொல்லி விட்டேனே! மறுபடியும் மறுபடியும் என் மானத்தை வாங்குகிறாயே!" என்றான் பொன்னன். "தப்பு, தப்பு, தப்பு என்று இப்போது அடித்துக் கொள்கிறாயே, என்ன பிரயோஜனம்? இந்தப் புத்தி அப்போது எங்கே போச்சு?" என்று வள்ளி கேட்டாள். "இப்போது என்ன குடி முழுகிப் போய்விட்டதென்று ஓட ஓட விரட்டுகிறாய், வள்ளி! அந்தச் சக்கரவர்த்தி எங்கே போய்விட்டார்! என் வேல் தான் எங்கே போச்சு?" "வேல் வேறயா, வேல்? கெட்ட கேட்டுக்குப் பட்டுக் குஞ்சந்தான், ஓடம் தள்ளுவதற்கும் கும்பிடுவதற்குந்தான் கடவுள் உனக்குக் கையைக் கொடுத்திருக்கிறார்! கும்பிடுகிற கையினால் எங்கேயாவது வேலைப் பிடிக்க முடியுமா?" இரண்டு உடலும் ஓர் உயிருமாயிருந்த தம்பதிகளுக்குள் இப்படிப்பட்ட ஓயாத வாய்ச் சண்டை நடப்பதற்குக் காரணமாயிருந்த சம்பவம் இதுதான்:- இரண்டு நாளைக்கு முன் இந்தக் காவேரிக்கரைச் சாலை வழியாக நரசிம்ம சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அவர்களுடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது, தோணித் துறைக்கு அருகில் சக்கரவர்த்தி சிறிது நின்றார். தோணித்துறையையும், காவேரியின் மத்தியிலிருந்த தீவையும், அந்தத் தீவில் பச்சை மரங்களுக்கிடையே காணப்பட்ட வசந்த மாளிகையின் பொற் கலசத்தையும் குந்தவிக்குச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அச்சமயம் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த பொன்னன், வள்ளி இவர்கள் மேல் சக்கரவர்த்தியின் பார்வை விழுந்தது. பொன்னனை அருகில் வரும்படி அவர் சமிக்ஞை செய்யவும், பொன்னன் ஓடோ டியும் சென்று, கைகூப்பித் தண்டம் சமர்ப்பித்து, பயபக்தியுடன் கையைக் கட்டிக் கொண்டு அவர் முன்னால் நின்றான். சக்கரவர்த்தியைப் பழிக்குப்பழி வாங்கப் போவதாகவும், அவருடைய மார்பில் தன் வேலைச் செலுத்தப் போவதாகவும் அவன் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அச்சமயம் அடியோடு மறந்து போய் விட்டது. சக்கரவர்த்தியின் கம்பீரத் தோற்றமும் அவருடைய முகத்தில் குடி கொண்டிருந்த தேஜசும் அவனை அவ்விதம் வசீகரித்துப் பணியச் செய்தன. "இந்தத் தோணித் துறையில் படகு ஓட்டுகின்றவன் நீதானே, அப்பா!" என்று சக்கரவர்த்தி கேட்கவும், பொன்னனுக்குத் தலைகால் தெரியாமற் போய் விட்டது. "ஆமாம், மகா....சக்ர...பிரபு!" என்று குழறினான். "அதோ தெரிகிறதே, அந்த வசந்த மாளிகையில் தானே அருள்மொழி ராணி இருக்கிறார்!" "ஆமாம்" "இதோ பார்! நமது குழந்தை குந்தவி தேவி, ராணியைப் பார்ப்பதற்காகச் சீக்கிரத்தில் இங்கே வரக்கூடும். ஜாக்கிரதையாக ஓடம் செலுத்திக் கொண்டு போய் அந்தக் கரையில் விட வேண்டும், தெரியுமா?" "புத்தி, சுவாமி!" என்றான் பொன்னன். பிறகு சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிச் சென்றார்கள். இதையெல்லாம் வள்ளி குடிசை வாசலில் நின்றபடி அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். பொன்னன் திரும்பி வந்தபோது, வள்ளியின் முகத்தில் 'எள்ளும் கொள்ளும்' வெடித்தது. முழு விவரமும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர் வள்ளி பலமாய்ச் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். சக்கரவர்த்திக்குப் பணிந்து மறுமொழி சொன்ன காரணத்தினால் விக்கிரம மகாராஜாவுக்குப் பொன்னன் துரோகம் செய்துவிட்டதாக வள்ளி குற்றம் சாட்டினாள். "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் துரோகி!" என்று நிந்தித்தாள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரம் மூன்று தினங்களாக இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது. வள்ளியின் சொல்லம்புகளைப் பொறுக்க முடியாதவனாய், அன்று மத்தியானம் உச்சிவேளையில் பொன்னன் நதிக்கரையோரம் சென்றான். அங்கே நீரோட்டத்தின் மீது தழைத்து கவிந்திருந்த ஒரு புங்க மரத்தினடியில் அதன் வேரின் மேல் உட்கார்ந்து, தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படித் துடைத்துக் கொள்வது, வள்ளியிடம் மறுபடியும் எப்படி நல்ல பெயர் வாங்குவது? - என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது கார்த்திகை மாதக் கடைசி, ஒரு மாதம் சேர்ந்தாற்போல் அடைமழை பெய்து விட்டிருந்தது. கழனிகளில் நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது. பச்சை மரங்களின் இலைகள், புழுதி தூசியெல்லாம் கழுவப்பட்டு நல்ல மரகத வர்ணத்துடன் பிரகாசித்தன. குளுகுளுவென்று குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. இப்படி வெளி உலகமெல்லாம் குளிர்ந்திருந்ததாயினும், பொன்னனுடைய உள்ளம் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. பத்து வருஷத்துக்கு முன்னால் இந்தக் கார்த்திகை மாதம் எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! பார்த்திப மகாராஜாவும் ராணியும் இளவரசரும் இங்கே அடிக்கடி வருவதும் போவதுமாயிருப்பார்கள். அரண்மனைப் படகுக்கு அடிக்கடி வேலை ஏற்படும். தோணித்துறை அப்போது எவ்வளவு கலகலப்பாயிருந்தது! குதிரைகளும், யானைகளும், தந்தப் பல்லக்குகளும் இந்த மாந்தோப்பில், வந்து காத்துக் கொண்டு கிடக்குமே! அந்தக் காலம் போய்விட்டது. இப்போது ஈ, காக்கை இங்கே வருவது கிடையாது. இந்தத் தோணித்துறைக்கு வந்த கேடுதான் என்ன? பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் இறந்து போனார். இளவரசர் எங்கேயோ கண் காணாத தீவில் தவித்துக் கொண்டிருக்கிறார். அருள்மொழி ராணியோ ஓயாமல் கண்ணீரும் கம்பலையுமாயிருக்கிறார். வசந்த மாளிகைக்குப் போவார் இல்லை; ஓடத்துக்கும் அதிகம் வேலை இல்லை. அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி மட்டும் துரோகம் செய்யாமலிருந்தால், இப்போது விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பார் அல்லவா? பல்லவ சக்கரவர்த்தி இங்கே ஏன் வரப்போகிறார்? வள்ளியிடம் தான் ஏச்சுக் கேட்கும்படியாக ஏன் நேரிட்டிருக்கப் போகிறது? இப்படிப் பொன்னன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, குதிரை வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சாலை ஓரத்தில் பொன்னனுடைய குடிசைக்கருகில் மாரப்ப பூபதி குதிரை மேலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான்.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 17

அத்தியாயம் பதினேழு
குந்தவியின் சபதம் 
காஞ்சி நகர் அரண்மனையின் உப்பரிகை நிலா மாடத்தில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணபட்சத்து முன்னிரவு, வானத்தில் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. காஞ்சி நகரின் பற்பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களிலிருந்து பேரிகைச் சப்தம், ஆலாட்ச மணி ஓசை, யாழின் இன்னிசையுடன் கலந்து பாடும் பக்தர்களின் குரலொலி - எல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன. அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்து செண்பகம், பன்னீர், பாரிஜாதம் ஆகிய மலர்களின் சுகந்தம் குளிர்காற்றுடன் கலந்து இலேசாக வந்து கொண்டிருந்தது. "குழந்தாய்! ஏன் இப்படி ஒரு மாதிரியிருக்கிறாய்? உடம்பு நன்றாகயில்லையா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "எனக்கு உடம்பு ஒன்றுமில்லை அப்பா, மனந்தான் நன்றாயில்லை!" "மனம் இருக்கிறதே அம்மா! ரொம்பப் பொல்லாதது 'மத்தக த்தைப் போன்றது' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் புத்தி என்கிற அங்குசத்தால் அடக்கி ஆளவேண்டும்...." "அப்பா!" "ஏன் குழந்தாய்!" "நான் சமண முனிவரைப் பார்த்துவிட்டு வந்தது தங்களுக்கு எப்படித் தெரிந்தது?" "என் மகள் என்ன செய்கிறாள் என்பது எனக்குத் தெரியாமல் போனால் இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தை நான் எப்படி அம்மா, கட்டி ஆள முடியும்?" "அப்பா! நான் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ சார்ந்துவிடப் போகிறேன்." "ஏன் அம்மா, அப்படி? நமது சைவ வைஷ்ணவ சமயங்கள் என்ன அவ்வளவு துர்ப்பாக்கியத்தைச் செய்து விட்டன?" "வாழ்க்கையில் எனக்கு வெறுப்பு உண்டாகிவிட்டது. இந்த உலகத்தில் ஏன் பிறந்தோமென்று இருக்கிறது!" "அடடா! அவ்வளவுக்கு வந்து விட்டதா? அப்பர் பெருமானைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாயே? அவர் மனிதப் பிறவியின் மகிமையைப்பற்றி உனக்கு ஒன்றும் சொல்லவில்லையா? தில்லை அம்பலத்தில் ஆனந்த நடனமிடும் பெருமானைத் தரிசிப்பதற்காகவே...." "நிறுத்துங்கள் அப்பா! வயதாக ஆக அந்தப் பெரியவர் ஒரே பக்திப் பைத்தியமாகி விட்டார். ஆனந்தமாம்! நடனமாம்! இந்த அழகான உலகத்தைப் படைத்த கடவுளுக்கு ஆனந்தம் வேறு, நடனம் வேறு வேண்டிக் கிடந்ததாக்கும்?" இதைக் கேட்ட சக்கரவர்த்தி கலகலவென்று சிரித்தார். குந்தவி வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். "நான் ஏன் சிரித்தேன் என்று தெரியுமா, குந்தவி?" "அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒரு வேளை பைத்தியம், கியித்தியம்...." "இல்லை குழந்தாய்! இல்லை; பைத்தியம் எனக்குப் பிடிக்கவில்லை! நான் சிரித்த காரணம் வேறு; உன் மாதிரியே எனக்கும் ஒரு காலத்தில் இந்த உலகம் பிடிக்காமலிருந்தது. வாழ்க்கை வேப்பங்காயாகி விட்டது! அதன் காரணம் என்ன தெரியுமா?" "நான் உங்களுக்குப் பெண்ணாய்ப் பிறந்தது தானோ என்னவோ?" சக்கரவர்த்தி புன்சிரிப்புடன், "இல்லை அம்மா, இல்லை! நீ பிறந்த பிறகு எனக்கு மறுபடியும் உலகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னாலேதான் சில காலம் எனக்கு உலக வாழ்க்கையின்மேல் ரொம்பவும் வெறுப்பாயிருந்தது. அதற்குக் காரணம்.... என் தந்தையின் மீது எனக்கு ரொம்பக் கோபமாயிருந்ததுதான்! என்றார். குந்தவியின் முகத்தில் அவளை அறியாமலே புன்னகை தோன்றியது. இதைப் பார்த்த நரசிம்மவர்மர், "உனக்கு இப்போது வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகியிருப்பதற்கு அதுதானே காரணம்? என்மேல் உனக்கு இப்போது சொல்லமுடியாத கோபம் இல்லையா?" என்றார். குந்தவி கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டாள். தலை குனிந்தபடி, "அப்பா! உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம்? உங்களுடைய தர்ம ராஜ்யத்தில் இப்படிப்பட்ட அநீதி நடந்துவிட்டதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது" என்றாள். "இதுதானா பிரமாதம், குந்தவி? இதற்கு ஏன் இவ்வளவு கவலை? அநியாயத்தைச் செய்வதற்கு எனக்குச் சக்தி உண்டு என்றால் அதை நிவர்த்திப்பதற்கும் சக்தி உண்டல்லவா? உண்மையில் அநீதி நடந்து விட்டதாக எனக்குத் தெரிந்தால் உடனே அதற்குப் பரிகாரம் செய்து விட்டு மறுகாரியம் பார்க்கிறேன்" என்றார் சக்கரவர்த்தி. "நிஜந்தானே, அப்பா! சோழ ராஜகுமாரனுடைய செயலுக்கு அவன் பொறுப்பாளி இல்லையென்று தெரிந்தால் தண்டனையை மாற்றிவிடுவீர்கள் அல்லவா?" "நிச்சயமாய் அம்மா!" அப்போது குந்தவி தன் மனத்திற்குள் "அந்த வேஷதாரிச் சிவனடியாரை எப்படியாவது கண்டுபிடித்து, அவருடைய தாடியைப்பற்றி இழுத்துக் கொண்டு வந்து சக்கரவர்த்தியின் முன்னிலையில் நிறுத்தாவிட்டால் என் பெயர் குந்தவி அல்ல!" என்று சபதம் செய்து கொண்டாள்." குந்தவி! என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? இன்னும் இரண்டு நாளில் நான் உறையூர்க்குப் போகப் போகிறேன். நீயும் வருவாயல்லவா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "வருகிறேன் அப்பா! அங்கே எனக்கும் ஒரு காரியம் இருக்கிறது; அதற்கு நீங்கள் குறுக்கே ஒன்றும் சொல்லக் கூடாது." "என்ன காரியம் என்று எனக்குச் சொல்லலாமோ, அதுவும் இரகசியமோ?" "இரகசியம் ஒன்றுமில்லை, அப்பா! அருள்மொழி ராணியை நான் பார்க்கப் போகிறேன்." "சரிதான்; ஆனால் அருள்மொழி ராணி உன்னைப் பார்க்கச் சம்மதிக்க வேண்டுமே!" "அவர் என்னைப் பார்ப்பதற்கு என்ன தடை? எதற்காக மறுக்கிறார்?" "அவளுடைய பிள்ளையைத் தேசப் பிரஷ்டம் செய்தவன் மகள் ஆயிற்றே நீ? உன்மேல் கோபம் இல்லாமல் இருக்குமா?" "என்மேல் எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்? ரொம்ப அழகு தான்! நானா இவருடைய பிள்ளைக்குத் துர்ப்போதனை செய்து சக்கரவர்த்திக்கு விரோதமாய்க் கலகம் செய்யும்படி தூண்டினேன்? என் மேல் கோபித்துக் கொண்டு என்ன பிரயோஜனம்?" என்றாள் குந்தவி. இதைக் கேட்ட சக்கரவர்த்தி தம் மனத்திற்குள், "பெண்ணாய்ப் பிறந்தவர்களிடம் தர்க்க ரீதியை எதிர்பார்ப்பதிலேயேயும் பிரயோஜனமில்லைதான்!" என்று எண்ணிக் கொண்டார்.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 16

அத்தியாயம் பதினாறு
செண்பகத் தீவு 
விக்கிரமன் கரையை நெருங்க நெருங்க, கடல் அலைகளின் ஓசையையும் அடக்கிக்கொண்டு பலவித வாத்தியங்களின் ஒலி முழங்குவதைக் கேட்டான். சங்கு, தாரை, எக்காளம், பேரிகை ஆகியவை ஏக காலத்தில் முழங்கி வான முகடு வரையில் பரவி எதிரொலி செய்தன. இவ்வளவு சத்தங்களுக்கிடையில் மாந்தர்களின் குரலில் கிளம்பிய கோஷம் ஒன்று விக்கிரமனுக்கு மயிர்க்கூச்சல் உண்டாக்கிற்று. "வீரவேல்! வெற்றிவேல்!" என்னும் கோஷம்தான் அது. அந்தத் தீவில் வாழும் மனிதர்கள் என்ன ஜாதி, யாரோ, எப்படிப்பட்டவர்களோ என்ன பாஷை பேசுபவர்களோ, ஒருவேளை நரமாமிச பட்சணிகளாய்க்கூட இருக்கலாமல்லவா? - என்று இவ்விதமெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த விக்கிரமனுக்கு அங்கு எழுந்த "வீரவேல், வெற்றிவேல்!" என்னும் சோழ நாட்டின் வீரத் தமிழ் முழக்கமானது அளவிலாத வியப்பையும் மகிழ்ச்சியையும் ஊட்டிற்று. "இது என்ன அதிசயத் தீவு? இங்கே சோழ நாட்டுத் தமிழரின் முழக்கம் கேட்கும் காரணம் என்ன? எதற்காக இவ்வளவு ஜனக்கூட்டம் இங்கே கூடியிருக்கிறது?" - இம்மாதிரி எண்ணங்கள் முன்னைக் காட்டிலும் அதி விரைவாக விக்கிரமனுடைய உள்ளத்தை அலைத்தன. அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. திடீரென்று உடம்பில் வெலவெலப்பு உண்டாயிற்று. மரக்கட்டை பிடியினின்று நழுவிற்று. தலை சுழலத் தொடங்கியது. கண் பார்வை குன்றியது. அதே சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான அலை வந்து விக்கிரமன்மீது பலமாக மோதியது. விக்கிரமனுக்கு அந்த நிமிஷத்தில் கடலிலுள்ள நீர் அவ்வளவும் புரண்டு வந்து தன்மீது மோதுவதாகத் தோன்றிற்று. ஒரு கணம் மூச்சுத் திணறிற்று. "நமது வாழ்நாள் முடிந்து விட்டது" என்று நினைத்தான் விக்கிரமன். பார்த்திப மகாராஜாவுக்கு அவன் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அன்னை அருள்மொழித் தேவியின் கருணை முகமும், சிவனடியாரின் கம்பீரத் தோற்றமும், கடைசியாக விரிந்து படர்ந்த கண்களுடன் கூடிய அந்தப் பெண்ணின் மதிவதனமும் ஒன்றன்பின் ஒன்றாகவும் மின்னலைக் காட்டிலும் விரைவாகவும் தோன்றி மறைந்தன. பிறகு அவனுடைய அறிவை ஒரு மகா அந்தகாரம் வந்து மூடிவிட்டது. விக்கிரமனுக்கு மறுபடியும் பிரக்ஞை வந்தபோது தான் மணல் தரையில் கிடப்பதாக அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. கண்கள் மூடியபடி இருந்தன. கடல் அலைகளின் 'ஓ' என்ற ஓசை காதில் கேட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் யாரோ திருநீறு இடுவது போல் தோன்றியது. மெதுவாகக் கண்ணை விழித்துப் பார்த்தான். சுற்றிலும் ஜனக் கூட்டம் நெருங்கி நிற்பது தெரிந்தது. ஒரு நொடிப் போதில் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அவன் கரையை நெருங்கியபோது அந்த ஜனக் கூட்டத்திலிருந்து கிளம்பிய வாத்திய முழக்கங்களும் வாழ்த்தொலிகளும் இப்போது கேட்கவில்லை. இதற்கு மாறாக அசாதாரணமான நிசப்தம் குடி கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். கொஞ்ச தூரத்தில் எங்கேயோ மாஞ்சோலையில் குயில் ஒன்று 'குக்கூ' 'குக்கூ' என்று கூவிற்று. அந்தக் குயிலின் இனிய குரல் அங்கே குடிகொண்டிருந்த நிசப்தத்தை அதிகமாய் எடுத்துக் காட்டிற்று. கரையை நெருங்கியபோது தனக்கு நேர்ந்த விபத்தின் காரணமாகவே அங்கே கூடியிருந்த ஜனங்கள் அவ்வளவு கவலையுடன் நிசப்தமாயிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டான். ஒரு பெரும் பிரயத்தனம் செய்து உடம்பை உதறிக்கொண்டு ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். அவ்வளவுதான், அந்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு மகத்தான ஆனந்த கோஷம் கிளம்பிற்று. வாத்திய முழக்கங்களுடன்கூட, மனிதர்களின் கண்டங்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகள் போட்டியிட்டு ஆகாயத்தை அளாவின. இவ்வளவு சத்தங்களுக்கும் மத்தியில் விக்கிரமனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற ஒரு பெரிய மனிதர், "விலகுங்கள்! விலகுங்கள்! கஜராஜனுக்கு வழிவிடுங்கள்!" என்று கூவினார். கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த மனிதரை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆமாம்; மாமல்லபுரத்தில் நடந்த கலைத் திருநாளின்போது நரசிம்ம சக்கரவர்த்தியின் சமூகத்தில் செண்பகத் தீவு வாசிகளின் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த தூதர் தான் இவர்! "விலகுங்கள்" என்ற அவருடைய குரலைக் கேட்டுச் சுற்றிலும் நின்ற ஜனங்கள் விரைவாக விலகிக் கொண்டார்கள். சற்றுத் தூரத்தில் பட்டத்து யானையைப்போல் அலங்கரித்த ஒரு யானை நின்றது. அதை யானைப்பாகன் நடத்திக் கொண்டு விக்கிரமன் நின்ற இடத்தை நோக்கி வந்தான். பட்டணப் பிரவேசத்துக்காக அலங்கரிக்கப்பட்டது போலக் காணப்பட்ட அந்த கஜராஜனுடைய தூக்கிய துதிக்கையில் ஓர் அழகான புஷ்பஹாரம் இருந்தது. விக்கிரமன் மந்திர சக்தியினால் கட்டுண்டவனைப் போல் யானையைப் பார்த்த படி கையைக் கட்டிக் கொண்டு அசையாமல் நின்றான். யானை மிகவும் சமீபத்தில் நெருங்கி வந்தபோது விக்கிரமனுடைய சிரம் அவனை அறியாமலே சிறிது வணங்கியது. யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்த மாலையை அவனுடைய கழுத்தில் சூட்டிற்று. அப்போது அந்த ஜனக்கூட்டத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் முழக்கத்தையும் வர்ணித்தல் அசாத்தியமான காரியம். "வீரவேல்!" "வெற்றிவேல்!" என்னும் கோஷங்களுடன், "விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!" "செண்பக நாட்டு மன்னர்பிரான் வாழ்க!" என்னும் கோஷங்களையும் கேட்டு, விக்கிரமனுடைய உள்ளம் பெருங்கிளர்ச்சியடைந்தது. மகா ஆச்சரியம் விளைவித்த இந்தச் சம்பவங்களைப் பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவனுக்குத் துடிப்பாயிருந்தது. ஆனால் அருகில் நின்றவர்களிடம் பேசுவதற்குக் கூட அச்சமயம் அவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. ஏகஆரவாரங்களுக்கிடையில், விக்கிரமனை அந்த யானையின்மீது அமைந்திருந்த அம்பாரியில் ஏற்றினார்கள். யானை கடற்கரையிலிருந்து உள்நாட்டை நோக்கிக் கம்பீரமாக நடந்து செல்ல, ஜனக்கூட்டமும் ஆரவாரத்துடன் அதைப் பின் தொடர்ந்து சென்றது. அம்பாரியின் மீது வீற்றிருந்த விக்கிரமனோ, "இல்லை; இதெல்லாம் நிச்சயமாக உண்மை இல்லை; கனவுதான் காண்கிறோம்; அல்லது இந்திரஜாலம், மகேந்திரஜாலம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதாவது இருக்க வேண்டும்" என்று அடிக்கடி எண்ணிக் கொண்டான். சுற்று முற்றும் அவன் கண்ணில் பட்ட தென்னந் தோப்புகள், மாஞ்சோலைகள், கழனிகள், கால்வாய்கள் எல்லாம் அவனுக்குச் சோழ நாட்டுக் காட்சிகளாகவே புலப்பட்டன. சிறிது நேரம் போன பிறகு ஒரு கிராமம் தென்பட்டதும் அதுவும் தமிழ்நாட்டுக் கிராமமாகவே தோன்றியது. ஊருக்குப் புறத்திலிருந்த கிராம தேவதையின் கோவிலும் அப்படியே தமிழர் கோவிலாகக் காட்சி தந்தது. இன்னும் சிறிது தூரம் போனதும் ஒரு பட்டணம் காணப்பட்டது. அதன் வீடுகள், வீதிகள், சதுக்கங்கள் எல்லாம் உறையூரின் மாதிரிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவ்வளவு பெரிய பட்டணமில்லை. அவ்வளவு ஜன நெருக்கமும் கிடையாது. அத்தனை மாட மாளிகைகள், கூட கோபுரங்களும் இல்லை. அப்பட்டணத்தின் வீதிகளில் அவரவர் வீட்டு வாசல்களில் நின்ற ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள் எல்லாரும் சிறந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து மலர்ந்த முகத்துடன் நின்றார்கள். அவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டு மக்களாகவே காணப்பட்டார்கள். அளவிலாத ஆர்வம் பொங்கிய கண்களுடன் அவர்கள் விக்கிரமனைப் பார்த்துப் பலவித வாழ்த்துகளினால் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். விக்கிரமனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் உதித்தது. ஒருவேளை இதெல்லாம் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் கபட நாடகமாயிருக்குமோ? தன்னைப் பற்றி வந்த கப்பல் பல நாள் பிரயாணம் செய்வதாகப் பாசாங்கு செய்து விட்டுக் கடைசியில் சோழநாட்டின் கடற்கரையிலேயே தன்னை இறக்கிவிட்டிருக் குமோ? இந்த ஆரவார ஊர்வலமெல்லாம் தன்னை ஏமாற்றிப் பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்வதற்கு ஒரு சூழ்ச்சியோ! இவ்விதமாக எண்ணியபோது விக்கிரமனுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. இதற்குள் யானையானது அந்தப் பட்டணத்துக்குள்ளேயே பெரிய மாளிகையாகத் தோன்றிய ஒரு கட்டடத்துக்கு வெளியே வந்து நின்றது. விக்கிரமனை யானை மீதிருந்து கீழே இறக்கினார்கள். ஜனக் கூட்டமெல்லாம் வெளியில் நிற்க, முன்னமே நமது கவனத்துக்குள்ளான பெரியவர் மட்டும் விக்கிரமனை அழைத்துக் கொண்டு மாளிகைக்குள் சென்றார். "மகாராஜா! இதுதான் இந்தச் செண்பக நாட்டின் மன்னர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த அரண்மனை, தாங்களும் இந்த அரண்மனையில் வசிக்க வேண்டுமென்று இந்நாட்டுப் பிரஜைகளின் விண்ணப்பம்" என்றார் அப்பெரியவர். "இந்நாட்டின் பெயர் என்னவென்று நீங்கள் சொன்னீர்?" "செண்பக நாடு மகாராஜா!" "இந்தப் பட்டணத்தின் பெயர் என்னவோ?" "செண்பக நாட்டின் தலைநகரம் இது. இதன் பெயர் குமாரபுரி." "குமாரபுரிதானே? மாயாபுரி அல்லவே?" "இல்லை, அரசே! குமாரபுரிதான்." "நீர் யார் என்று கொஞ்சம் சொன்னால் நன்றாயிருக்கும்." "அடியேன் பெயர் சித்தார்த்தன். காலஞ்சென்ற விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு நான் முதல் மந்திரி தங்களுக்கு விருப்பம் இருந்தால்..." "என்ன சொன்னீர், மந்திரி என்றீரா? மந்திரவாதி என்றீரா?" "மந்திரிதான், மகாராஜா!" "ஒருவேளை மந்திரவாதியோ என்று நினைத்தேன். ஆமாம் நீர் மந்திரவாதியில்லாவிட்டால் நான் யார் என்பதும், என்னை இன்று காலை இந்தத் தீவுக்கருகில் கொண்டு வந்து இறக்கி விடுவார்களென்பதும் எப்படித் தெரிந்தது?" "அது பெரிய கதை, மகாராஜா! சாவகாசமாக எல்லாம் சொல்கிறேன், இப்போதைக்கு..." "இப்போதைக்கு இது உண்மையாகவே அரண்மனை தானா, அல்லது சிறைச்சாலையா என்று மட்டும் சொன்னால் போதும்." "என்ன வார்த்தை சொன்னீர்கள்? சிறைச்சாலையா? இந்த நாட்டில் சிறைச்சாலை என்பதே கிடையாது! சிறைச்சாலை, இராஜத்துரோகம், மரணத் தண்டனை என்பதெல்லாம் பரத கண்டத்திலே தான், மகாராஜா!" "அப்படியா? பரத கண்டத்துக்கும் இந்த நாட்டுக்கும் அவ்வளவு தூரமோ?" "சாதாரணமாய்ப் பன்னிரண்டு நாள் கடல் பிரயாணம் புயல், மழை முதலியவை குறுக்கிட்டால் இன்னும் அதிக நாளாகும்." "உண்மைதானே சொல்கிறீர்?" "அடியேன் உண்மையைத் தவிர வேறு பேசுவதில்லை." "அப்படியானால் தமிழகத்திலிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்திலுள்ள நீங்கள், தமிழ் மொழி பேசுகிறீர்களே, எப்படி?" "மகாராஜா! இந்தச் செண்பகத் தீவிலே மட்டுமல்ல இன்னும் கிழக்கே தூரத்திலுள்ள தீவுகளிலும் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள், தமிழ்மொழி பேசுகிறார்கள். தங்களுடைய மூதாதை கரிகாலச் சோழரின் காலத்தில் சோழ நாட்டுத் தமிழர்கள் வளம் மிக்க இந்தத் தீவுகளில் வந்து குடியேறினார்கள். கரிகாலச் சோழரின் குமாரர் தான் இந்தப் பட்டணத்தை ஸ்தாபித்தார். அதனாலேயே குமாரபுரி என்று அதற்குப் பெயர் ஏற்பட்டது. அந்த நாளில் சோழ சேனாதிபதி ஒருவர் சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் பேரில் இந்நாட்டை ஆட்சி புரியலானார். அவருடைய சந்ததியார் பத்து வருஷத்துக்கு முன்பு வரையில் இந்நாட்டின் அரசர்களாயிருந்து செங்கோல் செலுத்தி வந்தார்கள். அந்த வம்சத்தின் கடைசி அரசரான விஷ்ணுவர்த்தனர் சந்ததியில்லாமல் காலமானார். பிறகு இந்த நாடு இன்று வரையில் அரசர் இல்லாத நாடாயிருந்து வந்தது. அடிக்கடி பக்கத்துத் தீவுகளில் உள்ளவர்கள் வந்து இந்நாட்டின் பட்டணங்களையும் கிராமங்களையும் சூறையாட ஆரம்பித்தார்கள்.... வெவ்வேறு பாஷை பேசுவோரும், அநாகரிகங்களும், தட்டை மூஞ்சிக்காரருமான பற்பல சாதியார் இந்தத் தீவை சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு அரசர் இல்லாக் குடிகளாகிய எங்களால் முடியவில்லை. இப்படிப்பட்ட சமயத்தில் முருகக் கடவுளே அனுப்பி வைத்தது போல், சோழர் குலக்கொழுந்தான தாங்கள் எங்களைத் தேடி வந்திருக்கிறீர்கள் எங்களுடைய பாக்கியந்தான்." கரிகாலச் சோழனைப் பற்றி அந்தப் பெரியவர் பிரஸ்தாபித்தவுடனே விக்கிரமன் மிகவும் சிரத்தையுடன் கேட்கத் தொடங்கினான். அவனுக்கிருந்த சந்தேகம், அவநம்பிக்கை எல்லாம் போய்விட்டது. சித்தார்த்தரின் குரல், முகத்தோற்றம் ஆகியவற்றிலிருந்து, அவர் சொல்லுவதெல்லாம் சத்தியம் என்னும் நம்பிக்கையும் விக்கிரமனுக்கு உண்டாயிற்று. 'நமது தந்தை பார்த்திப மகாராஜா எந்தக் கரிகால் வளவனைப் பற்றி அடிக்கடி பெருமையுடன் பேசி வந்தாரோ அந்த சோழர் குல முதல்வன் காலத்திலே தமிழர்கள் வந்து குடியேறிய நாடு இது. என்ன ஆச்சரியமான விதிவசத்தினாலோ அப்படிப்பட்ட நாட்டுக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்' என்பதை நினைத்தபோது விக்கிரமனுக்கு மயிர்க்கூச்செறிந்தது, கண்ணில் நீர் துளித்தது. "ஐயா! உம்மை நான் பரிபூரணமாக நம்புகிறேன். எல்லா விஷயங்களையும் விவரமாக அப்புறம் கேட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன். என்னை நீங்கள் உங்களுடைய அரசனாய்க் கொள்வதாயிருந்தால், இன்னொரு ராஜாவுக்கோ சக்கரவர்த்திக்கோ கப்பம் செலுத்த முடியாது. சுதந்திர நாட்டுக்குத்தான் நான் அரசனாயிருப்பேன். இல்லாவிட்டால் உயிரை விடுவேன். நீங்களும் இந்நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருக்க வேண்டும். எதிரிகள் துஷ்டர்களாயிருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும், யாராயிருந்தாலும் பணிந்து போகிறது என்ற பேச்சே உதவாது. இதற்குச் சம்மதமாயிருந்தால் சொல்லுங்கள்" என்றான் விக்கிரமன். மகாராஜா, தங்களுடைய தந்தை பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் அடைந்த வீர மரணத்தின் புகழ் எங்கள் காதுக்கும் எட்டியிருக்கிறது. எங்களுடைய உடம்பில் ஓடுவதும் சோழ நாட்டின் வீர இரத்தந்தான். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறார்கள். வீரத்தலைவன் ஒருவன் தான் எங்களுக்கு வேண்டியிருந்தது. தாங்கள் வந்துவிட்டீர்கள் இனி என்ன குறை?" அச்சமயம் கோயில் சேமக்கலத்தின் ஓசை கேட்டது. சித்தார்த்தர், "மகாராஜா! தாங்கள் ஸ்நான பானங்களை முடித்துக் கொண்டு சிறிது இளைப்பாறுங்கள். சாயங்காலம் முருகவேள் ஆலயத்துக்குப் போய்த் தரிசனம் செய்ய வேண்டும். கூடிய சீக்கிரத்தில் முடிசூட்டு விழா நடத்துவது பற்றியும் யோசனை செய்யவேண்டும்" என்றார்.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 15

அத்தியாயம் பதினைந்து
கடற் பிரயாணம் 
இளவரசன் விக்கிரமனை ஏற்றிக் கொண்டு கிளம்பிய கப்பல் சீக்கிரத்திலேயே வேகம் அடைந்து கிழக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரக் காட்சிகளையும், கோவில் கோபுரங்களையும், மரங்களின் உச்சிகளும் மறைந்துவிட்டன. கரை ஓரத்தில் வெண்மையான நுரைகளுட னும் இரைச்சல்களுடனும் எழுந்து விழுந்து கொண்டிருந்த சிற்றலைகள் இப்போது காணப்படவில்லை. கடல் நீர் தூய நீல நிறமாயிருந்தது. அந்த நீல நிறப் பரப்பிலே பெரும் பள்ளங்களும் மேடுகளும் பெரு மூச்சு விட்டுக் கொண்டு மேலே எழும்பியும் கீழே விழுந்தும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. அதே சமயத்தில் துயரம் நிறைந்த 'ஹோ' என்ற இடைவிடாத புலம்பல் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. இவ்விதம் விக்கிரமன் வெளியே கண்ட காட்சியானது அவனுடைய உள்ளத்தின் நிலைமையைப் பிரதிபலிப்பதாயிருந்தது. கடலின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் எல்லையற்ற மோன அமைதியைப் போல் அவனுடைய இருதயத்தின் அடிவாரத்திலும் விவரிக்கவொண்ணாத பரிபூர்ண சாந்தி நிலவிற்று. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தின் மேற்பரப்பில் என்னவெல்லாமோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்து கொந்தளிப்பை உண்டாக்கின. பார்த்திப மகாராஜா சோழ நாட்டின் மேன்மையைக் குறித்துத் தாம் கண்ட கனவுகளைப் பற்றிச் சொன்னதெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன. கடற்பிரயாணம் செய்ய வேண்டுமென்று இளம்பிராயத்திலிருந்து அவனுடைய மனத்தில் குடி கொண்டிருந்த ஆசையும் நினைவுக்கு வந்தது. அந்த ஆசைதான், அடடா என்ன வினோதமான முறையில் இன்று நிறைவேறுகிறது? புலிக்கொடி கம்பீரமாகப் பறக்கும் பெரிய பெரிய கப்பல்களில் சோழநாட்டு வீரர் படைகளுடன் பிரயாணம் செய்து கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களிலெல்லாம் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்ற மனோரதத்துக்கும், இன்று பல்லவர்களின் சிங்கக் கொடி பறக்கும் கப்பலில் கையும் காலும் சங்கிலியால் கட்டுண்டு தேசப் பிரஷ்டனாய்ப் பிரயாணம் செய்வதற்கும் எவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு தூரம்! இப்படி விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருந்த போதே கப்பலின் தலைவன் சில ஆட்களுடன் அங்கு வந்து விக்கிரமனைப் பிணித்திருந்த சங்கிலிகளை எடுக்கச் செய்தான். "இது ஏன்?" என்று விக்கிரமன் வினவ, "சக்கரவர்த்தியின் ஆணை?" என்றான் கப்பல் தலைவன். "என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?" என்று விக்கிரமன் கேட்டதற்கு, "இங்கிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்தில் நடுக்கடலிலே ஒரு தீவு இருக்கிறது. அதன் அருகே தங்களை இறக்கி விட்டுவிட வேண்டுமென்று கட்டளை!" என்று மறுமொழி வந்தது, "அங்கே வசிப்பவர்கள் யார்?" என்று விக்கிரமன் மேலும் கேட்டான். "அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தீவுக்குப் போய்ச் சேரும் வரையில், இந்தப் கப்பலுக்குள்ளே தாங்கள் சுயேச்சையாக எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் தப்பிச் செல்வதற்கு மட்டும் பிரயத்தனம் செய்யக் கூடாது. செய்தால் மறுபடியும் தலையிடும்படி நேரும்" என்றான் கப்பல் தலைவன். விக்கிரமன் கப்பலுக்குள்ளே அங்குமிங்கும் சிறிது நேரம் அலைந்தான். மாலுமிகளுடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்ததில் ஒன்றும் பிரயோஜனம் ஏற்படவில்லை. அவர்கள் எல்லாரும் விக்கிரமன் சம்பந்தப்பட்டவரை ஊமைகளாகவேயிருந்தனர். பின்னர், கப்பல் மேல் தளத்தின் ஓரமாக அவன் வந்து, வானையும் கடலையும் நோக்கிய வண்ணம் முன்போலவே சிந்தனையில் ஆழ்ந்தான். அன்னை அருள்மொழியின் நினைவுதான் எல்லாவற்றிற்கும் முன்னால் நின்றது. அவர் இச்சமயம் என்ன செய்து கொண்டிருப்பார்? என்ன எண்ணிக் கொண்டிருப்பார்? தன்னுடைய முயற்சி நிஷ்பலனாய்ப் போனது பற்றி ஏமாற்றமடைந்திருப்பாரா? பல்லவ சக்கரவர்த்தியின் முன்னிலையிலே தான் சிறிதும் பணிந்து போகாமல் பேசிய வீர வார்த்தைகளைக் கேட்டுப் பெருமையடைந்திருப்பாரா? தன்னுடைய பிரிவைக் குறித்து வருத்தப்படுவாரா? எப்படியும் அவருக்கு ஆறுதல் கூறச் சிவனடியார் போயிருப்பாரல்லவா? உடனே, சிவனடியாரின் ஞாபகம் வந்தது. கப்பல் கரையை விட்டுக் கிளம்பிய தருணத்தில் அந்தப் பெரியவர் எங்கிருந்தோ வந்து குதித்துத் தமது திருக்கரத்தை நீட்டி ஆசீர்வாதம் செய்தாரே? அவருக்குத்தான் நம்மிடத்தில் எவ்வளவு அன்பு! சிவனடியாரைப் பற்றி நினைக்கும்போதே மற்றோர் உருவம் விக்கிரமனுடைய மனக்கண் முன் தோன்றியது. அது ஒரு பெண்ணின் உருவம். முதல் நாள் காஞ்சிபுரத்து வீதியில் பார்த்த அந்தப் பெண் மறுநாள் மாமல்லபுரத்துக் கடற்கரைக்கு எப்படி வந்தாள்? அவள் யாராயிருக்கும்? ஆகா அவளுடைய கண்கள்தான் எவ்வளவு நீண்டு படர்ந்திருந்தன? அந்தக் கண்களிலே கண்ணீர் துளித்து நின்ற காரணம் என்ன? தன்னிடத்தில் உள்ள இரக்கத்தினாலா? முன்பின் தெரியாத அந்தப் பெண்ணுக்குத் தன்மேல் இரக்கம் உண்டாவானேன்? இல்லாவிட்டால் தன்னை எதற்காக அவ்வளவு கனிவுடன் பார்க்க வேண்டும்? இப்படி வெகு நேரம் அவளைப் பற்றியே எண்ணி கொண்டிருந்த விக்கிரமன், சூரியன் மறைந்து நாலுபுறமும் இருள் சூழ்ந்ததைக்கூடக் கவனிக்கவில்லை. தற்செயலாகக் கீழே கடலை நோக்கியபோது விண்மீன்கள் தண்ணீரில் பிரதிபலிப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அத்தனை நேரமும் முன்பின் தெரியாத அந்தப் பெண்ணைப் பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்ததை நினைத்துச் சிறிது வெட்கமடைந்தான். பிறகு பொன்னனையும், வள்ளியையும் பற்றி எண்ணினான். அவர்களுக்குத் தன் பேரில் எவ்வளவு பிரியம்? இந்த நேரமெல்லாம் அவர்கள் தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது ஒரு வேளை வள்ளியின் பாட்டனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன தைரியம்? சோழநாட்டு ஆண்மக்களெல்லாம் அவனைப் போன்ற வீரர்களாயிருக்கக் கூடாதா? இருட்டி ஒரு ஜாமம் ஆனபோது, நீலக் கடலைச் செம்பொற் கடலாகச் செய்துகொண்டு கீழ்வானத்தில் சந்திரன் உதயமானான். பூரண சந்திரனில்லை; முக்கால் சந்திரன் தான். பார்ப்பதற்கு ஒரு பெரிய பொற்கிண்ணம் கடலிலிருந்து வெளிக்கிளம்புவது போலிருந்தது. முன்னம் பாற்கடலைக் கடைந்தபோது இந்தச் சந்திரனாகிய பொற்கிண்ணத்திலேதான் அமுதம் வந்ததோ, என்னவோ? இன்றும் அப்பொற் கிண்ணத்திலிருந்த நிலவாகிய அமுதம் பொங்கிப் புவனமெல்லாம் பரவியதாகத் தோன்றியது. இந்த மோகனக் காட்சியை விக்கிரமன் பார்த்தான். கடலிலிருந்து எழும்பிய சந்திர பிம்பத்துடனேகூட அவனுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தப் பெண்ணின் முகமும் மறுபடி எழுந்தது. இந்த உதயசந்திரனுடைய பொன்னிறந்தான் அவளுடைய முகத்தின் நிறமும்! "ஆகா! அது என்ன அழகான முகம்!" என்ற எண்ணம் அப்போது விக்கிரமனுக்கு முதன் முதலாகத் தோன்றியது. அந்தப் பொன் முகத்தின் அழகை அதைக் கவிந்திருந்த கருங்கூந்தல் எவ்வளவு நன்றாய் எடுத்துக் காட்டிற்று! ஆம்; நிகரில்லாத சௌந்தரியம் வாய்ந்தவள் அந்தப் பெண். சித்திரத்திலும் சிலையிலும் கூட அத்தகைய திவ்ய சௌந்தரியத்தைக் காண்பது அரிதுதான். அவள் யாராயிருக்கும்? பன்னிரண்டு தினங்கள் சென்றன. அடிக்கடி குந்தவியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த விக்கிரமனுக்கு இந்தப் பன்னிரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. பதின்மூன்றாம் நாள் பொழுது விடிந்தபோது சூரியோதயமான திசையில் விக்கிரமன் கண்ட காட்சி அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்தது. ஏனெனில் வழக்கம் போல் சூரியன் சமுத்திரத்திலிருந்து கிளம்பி ஜோதிப் பிழம்பாய் மேலே வருவதற்குப் பதிலாக, பச்சை மரங்களுக்குப் பின்னால் உதயமாகி மேலே ஒளிக்கிரணங்களைப் பரப்பினான். இந்த அபூர்வக் காட்சியைப் பார்த்துக் கொண்டு விக்கிரமன் நிற்கும்போதே கப்பல் தலைவன் அவனை நெருங்கி, 'இளவரசே! அதோ தெரிகிறதே, அந்தத் தீவின் அருகில்தான் தங்களை விட்டுவிடும்படி எங்களுக்குக் கட்டளை. தங்களுக்கு நீந்தத் தெரியுமல்லவா?" என்றான். "கரைக்கு எவ்வளவு தூரத்தில் விடுவீர்கள்?" "ரொம்ப தூரத்தில் விடமாட்டோ ம் ஒத்தாசைக்கு ஒரு மரக்கட்டை போடுவோம்" "நான் இறங்க மாட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்?" "மரக்கட்டையில் கட்டி மிதக்க விட்டு விடும்படி கட்டளை, தங்களுடைய விருப்பம் என்ன?" "நானே இறங்கி விடுகிறேன்" என்றான் விக்கிரமன். அவ்வாறே கப்பல் இன்னும் சிறிது கரையை நெருங்கியதும், விக்கிரமனைக் கடலில் இறக்கிவிட்டு ஒரு மரக்கட்டையையும் போட்டார்கள். விக்கிரமன் அதைப் பிடித்துக் கொண்டு அதிக நேரம் நீந்தியும், சிறிது நேரம் அதன் மேல் உட்கார்ந்து மிதந்தும், கரையை நோக்கிச் சென்றான். கரையை நெருங்க, நெருங்க தூரத்தில் கப்பலிலிருந்து பார்த்தபோது எறும்புக் கூட்டம் மாதிரி காணப்பட்டது உண்மையில் மனிதர்கள் கூட்டமே என்று தெரிய வந்தது. அந்த மனிதர்கள் யார்? எதற்காகக் கடற்கரையில் வந்து கூடியிருக்கிறார்கள்? அவர்கள் என்ன பாஷை பேசுவார்கள்? சக்கரவர்த்தி தன்னை இந்தத் தீவில் விட்டு வரச் சொன்னதின் நோக்கம் என்ன? இப்படிப் பற்பல எண்ணங்கள் விக்கிரமனுடைய மனத்தில் அலை அலையாக எழுந்தன.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 14

அத்தியாயம் பதினான்கு
"வயதான தோஷந்தான்!"
 
அந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை செய்து, பக்திச்சுடர் விளக்கு ஏற்றி, ஞான ஒளியைப் பரப்பி வந்தார்கள். அமுதொழுகும் தமிழில் கவிதா ரஸமும் இசை இன்பமும் ததும்பும் தெய்வீகப் பாடல்களை இயற்றி வந்தார்கள். அந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சைவப் பெரியார்களுக்குள்ளே திருநாவுக்கரசர் இணையற்ற மகிமையுடன் விளங்கினார். மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்திலேயே பிரசித்தி அடைந்து, தமிழகத்தின் போற்றுதலுக்கு உரியவராகிவிட்ட அப்பர் சுவாமிகள் விக்கிரமன் நாடு கடத்தப்பட்டபோது, முதிர்ந்த மூப்பின் காரணமாக அதிகமாய் நடமாடவும் இயலாத தள்ளாமையை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத பிராயத்திலும் அவர் ஸ்தல யாத்திரை சென்றிருந்து சமீபத்தில் திரும்பி வந்திருக்கும் செய்தியைக் குந்தவிதேவி அறிந்தாள். அப்பெரியாரைத் தரிசிப்பதற்காகக் காஞ்சியில் பிரசித்தி பெற்று விளங்கிய சைவ மடாலயத்துக்கு ஒருநாள் அவள் சென்றாள். முதிர்ந்து கனிந்த சைவப் பழமாக விளங்கிய அப்பர் சுவாமிகள், சக்கரவர்த்தியின் திருமகளை அன்புடன் வரவேற்று ஆசி கூறினார். அவரைப் பார்த்துக் குந்தவி, "சுவாமி! இவ்வளவு தள்ளாத நிலைமையில் எதற்காகத் தாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும்? தாங்கள் தரிசிக்காத ஸ்தலமும் இருக்கிறதா? எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்டாள். அதற்கு அப்பர், "குழந்தாய்! தில்லைப்பதி வரையிலே தான் போயிருந்தேன். பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானை எத்தனை தடவை தரிசித்தால்தான் என்ன? இன்னுமொருமுறை கண்ணாரக் கண்டு இன்புற வேண்டுமென்ற ஆசை உண்டாகத்தான் செய்கிறது. ஆகா! அந்த ஆனந்த நடனத்தின் அற்புதத்தை தான் என்னவென்று வர்ணிப்பேன்! அந்தப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி எடுக்கலாமே!" என்று கூறிவிட்டு, பாதி மூடிய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, பின்வரும் பாசுரத்தைப் பாடினார்:- "குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!" பாட்டு முடிந்த பின்னர் அப்பர் சுவாமிகள் சற்று நேரம் மெய்ம்மறந்து பரவச நிலையில் இருந்தார். முன்பெல்லாம் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குந்தவி பக்தி பரவசமடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கியிருப்பாள். ஆனால் இன்றைக்கு அவள் மனம் அவ்வாறு பக்தியில் ஈடுபடவில்லை. அப்பர் ஒருவாறு சுய உணர்வு அடைந்தபோது குந்தவி அவரை நோக்கி "சுவாமி, சோழ நாட்டில் யாரோ ஒரு சிவனடியார் புதிதாகத் தோன்றி ராஜரீகக் காரியங்களிலெல்லாம் தலையிடுகிறாராமே, தங்களுக்கு அவரைத் தெரியுமா?" என்று வினவினாள். அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகவே கேட்ட அப்பெரியார், "என்ன குழந்தாய்! சோழ நாட்டில் தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக் கேட்கிறாயா? ஆகா அவரைப் பார்க்கத்தானே, அம்மா நான் முக்கியமாக யாத்திரை கிளம்பினேன்? நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே என்னைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள் சந்தித்தோம். ஆகா! அந்தப் பிள்ளைக்கு 'ஞானசம்பந்தன்' என்ற பெயர் எவ்வளவு பொருத்தம்! பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான் இவ்வளவு சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று? என்ன அருள் வாக்கு! அவர் தாய்ப் பால் குடித்து வளர்ந்த பிள்ளை இல்லை, அம்மா! ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை! - இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளே இப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா?" என்றெல்லாம் அப்பர் பெருமான் வர்ணித்துக் கொண்டே போனார். குந்தவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கடைசியில் குறுக்கிட்டு, "சுவாமி! நான் ஒருவரைப் பற்றிக் கேட்கிறேன். தாங்கள் இன்னொருவரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். நான் சொல்லும் சிவனடியார், முகத்தில் மீசை முளைக்காதவரல்ல; ஜடா மகுடதாரி; புலித்தோல் போர்த்தவர்" என்றாள். "குழந்தாய்! நீ யாரைப் பற்றிக் கேட்கிறாயோ எனக்குத் தெரியாது! ஜடாமகுடத்துடன் புலித்தோல் தரித்த சிவனடியார்கள் எத்தனை யோ பேர் இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறு ஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு!" என்றார் நாவுக்கரசர். "நான் சொல்லுகிற சிவனடியார் ராஜரீக விஷயங்களில் எல்லாம் தலையிடுவாராம். என்னுடைய தந்தைக்கு விரோதமாகக் கலகங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறாராம்..." "என்ன சொன்னாய், அம்மா! அதிசயமாயிருக்கிறதே! அப்படிப்பட்ட சிவனடியார் யாரையும் எனக்குத் தெரியாது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு கண்களைப் போல் காத்து வளர்த்து வருகிறவராயிற்றே உன் தந்தை! நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில் ஈடுபட வேண்டும்? அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்புவதா? வேடிக்கைதான்! அப்படி யாராவது இருந்தால், அவன் சைவனாகவோ, வைஷ்ணவனாகவோ இருக்க மாட்டான். பாஷாண்ட சமயத்தான் யாராவது செய்தால்தான் செய்யலாம்." "நான் போய் வருகிறேன் சுவாமி!" என்று குந்தவி அவருக்கு நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள். பல்லக்கில் ஏறி அரண்மனைக்குப் போகும் போது அவள் பின்வருமாறு எண்ணமிட்டாள்:- "முதுமை வந்து விட்டால் எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும் இப்படி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் வளவளவென்று பேசிக் கொண்டே போகிறார்! கேட்டதற்கு மறுமொழி உண்டா என்றால், அதுதான் கிடையாது! எல்லாம் வயதான தோஷந்தான்!"

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 13

அத்தியாயம் பதின்மூன்று
சிவனடியார் கேட்ட வரம் 
ராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக் கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் "நில்லுங்கள்" என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தார். உடனே மந்திர சக்தியால் எழுந்தது போல், அருள்மொழி கண்விழித்துச் சிவனடியாரைப் பார்த்தாள். "சுவாமி! எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?" என்று மெலிவான குரலில் கேட்டாள். "உனக்கு ஒன்றுமே நேரவில்லை அம்மா! உன் மகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு குறைவும் நேராது என்றும், நிச்சயம் திரும்பி வருவான் என்றும் சொன்னேன்" என்றார் சிவனடியார். அருள்மொழி சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, "இல்லை; ஏதோ ரொம்பவும் வேதனை தரும் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள்!" என்றாள். "சக்கரவர்த்தியின் மகளை உன் மகன் பார்க்க நேர்ந்தது என்று கூறினேன். அந்தச் செய்தி உனக்குச் சந்தோஷம் அளிக்குமென்று எண்ணினேன்..." "ஆமாம் நினைவு வருகிறது, ஆனால் அது சந்தோஷச் செய்தியா? சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, என்னுடைய பதியின் மரணம் எந்தக் கொடிய சத்துருவினால் ஏற்பட்டதோ, இன்று நான் இவ்விதம் ஆதரவற்ற அநாதையாயிருப்பதற்கு யார் காரணமோ அப்பேர்ப்பட்ட பகைவனுடைய மகளைப் பார்த்தா என் மகன் மயங்கி விட்டான்? விக்கிரமன் உண்மையில் என் வயிற்றில் பிறந்த பிள்ளைதானா....?" "கொஞ்சம் பொறு அருள்மொழி! அவசரப்பட்டுச் சாபங்கொடுக்காதே!" என்று சிவனடியார் சிறிது கலக்கத்துடன் கூறினார். அவர் மகா புத்திமானாயிருந்தும் அருள்மொழி இவ்வாறு பொங்குவாள் என்பதை எதிர்பார்க்கவில்லையென்று தோன்றியது. "இதோபார் அம்மா! உன்னுடைய தீராத கோபத்துக்கு ஆளான நரசிம்மவர்மனுடைய மகள் அந்தப் பெண் என்பது உன் மகனுக்குத் தெரியாது. அவர்கள் ஒருவரையொருவர் அருகில் நெருங்கியதும் இல்லை; ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. தூரத்திலிருந்தே ஒருவரையொருவர் பார்த்ததுதான்! அவர்களுக்குக் கலியாணமே நிச்சயமாகி விட்டது போல் நீ கலக்கமடைய வேண்டாம்!" என்றார் பெரியவர். "நல்ல வேளை; என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். எங்கே அதுவும் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் சூழ்ச்சியோ என்று நினைத்தேன். சுவாமி! விக்கிரமன் எங்கேயாவது கண்காணாத தேசத்தில் உயிர் வாழ்ந்திருக்கட்டும்; பசிக்கு உணவு இல்லாமலும் தாகத்துக்குத் தண்ணீர் இல்லாமலும், கஷ்டப்பட்டாலும் படட்டும்! ஆனால் அவன் திரும்பி வரவும் வேண்டாம்; எங்கள் பரம விரோதியினுடைய மகளின் மாய வலையில் விழவும் வேண்டாம்!" "உன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்றாகச் சோதித்துப் பார், அருள்மொழி! உன் மகன் சக்கரவர்த்தியின் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் விருப்பம் லவலேசமும் உனக்கு இல்லையா?" "அதெல்லாம் அந்தக் காலத்தில் சுவாமி! தங்களிடம் சொல்லுவதற்கு என்ன? வெண்ணாற்றங்கரைப் போருக்கு முன்னால் அந்த மாதிரி ஒரு பைத்தியக்கார ஆசை என் மனத்தில் சில சமயம் தோன்றியதுண்டு. 'அவ்விதம் ஏற்பட்டால் சோழ வம்சத்துக்கும் பல்லவ குலத்துக்கும் உள்ள பகை தீர்ந்துவிடுமே!' என்று நினைத்ததுண்டு. ஆனால், எப்போது என் பிராணநாதர் போர்க்களத்தில் உயிரை இழந்தாரோ, அந்த க்ஷணத்திலேயே அந்த ஆசையை வேருடன் களைந்து எறிந்துவிட்டேன். இவ்வளவு நடந்து விட்ட பிறகு என் மகன் சக்கரவர்த்தியின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதைவிட அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்!" "அருள்மொழி! நீ அந்தக் குழந்தை குந்தவியைப் பார்த்ததில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் வெறுப்பாகப் பேசுகிறாய்...." "தாங்கள் பார்த்திருக்கிறீர்களா, சுவாமி?" "பார்த்திருக்கிறேன்; நெருங்கிப் பழகியுமிருக்கிறேன். என்னிடம் குந்தவிக்கு ரொம்பவும் பக்தி விசுவாசமுண்டு. அம்மா! சிவஞான இன்பத்தின் சுவை கண்ட எனக்கு இந்தக் காலத்தில் வேறு எதன் மீதும் பற்றுக் கிடையாது. ஆனால் அந்தக் குழந்தையின் பாசம் மட்டும் போக மாட்டேன் என்கிறது. அவளோடு இரண்டு நாள் பழகிவிட்டால் நீயும் அவ்விதந்தான் அவளிடம் பாசம் வைப்பாய்..." "வேண்டாம்! எனக்கு ஒருவரையும் இனிமேல் பார்க்க வேண்டாம்; பழகவும் வேண்டாம்; இந்த உலகை விட்டுச் சென்று என் பதியை மீண்டும் அடையும் நாளை நான் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்...." "அருள்மொழி! ஒரு காலத்தில் என்னை நீ ஒரு வரம் கேட்டு வாங்கிக்கொண்டாய். அதன்படியே உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றினேன். உன் பதியின் மரணத்தறுவாயில் நான் அளித்த வாக்கையும் காப்பாற்றினேன். இதெல்லாம் உண்மையா, இல்லையா?" "ஆமாம் உண்மைதான்." "அதற்கெல்லாம் பிரதியாக இப்போது நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கப் போகிறேன். அதை நீ தட்டாமல் கொடுக்க வேண்டும்." "சிவசிவா!" என்று சொல்லிக்கொண்டு அருள்மொழி எழுந்து கைகூப்பி நின்றாள். "சுவாமி! இவ்விதம் என்னை அபசாரத்துக்கு உள்ளாக்கலாமா? அடியாளிடம் தாங்கள் வரம் கேட்பதா? எனக்குக் கட்டளையிட வேண்டியவர், தாங்கள்" என்றாள். "சரி கட்டளையிடுகிறேன், அதைத் தட்டாமல் நிறைவேற்ற வேண்டும்." "தங்களுடைய வார்த்தையை நான் தட்டுவேனா? ஒருநாளும் இல்லை. "அப்படியானால் சொல்லுகிறேன், கேள்! என்றைக்காவது ஒருநாள் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி உன்னிடம் வருவாள். அவள் தாயில்லாப் பெண், தாயின் அன்பு இன்றி அவளுடைய இருதயம் உலர்ந்து போயிருக்கிறது. அதனால் தான் அம்மா, எனக்குக்கூட அவள்மேல் அவ்வளவு பாசம். அந்தக் குழந்தை உன்னிடம் வரும்போது அவளை நீ நிராகரிக்காதே. அன்புடன் உன் மகளைப் போல் ஏற்றுக் கொள். உன் மனப்புண் ஆறுவதற்கும் அது அனுகூலமாயிருக்கும்!" என்றார் சிவனடியார். அவருடைய கனிவு ததும்பிய குரலும் வார்த்தைகளும் அருள்மொழியின் மனத்தை உருக்கிவிட்டன. "தங்கள் ஆணைப்படி நடக்க முயற்சி செய்கிறேன். சுவாமி! ஆனாலும் எங்கள் குலத்துக்கே ஜன்ம சத்துருவான ஒருவருடைய மகளிடம் நான் எப்படி அன்பு செலுத்துவது எப்படி....?" "தந்தை செய்த தீங்குக்காக மகளை வெறுப்பது என்ன நியாயம், அம்மா? மேலும் இன்னொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றும் விஷயத்தில் குந்தவிதான் எனக்கு மிகவும் ஒத்தாசையாயிருந்தாள். விக்கிரமனுக்கு மரண தண்டனை நேராமல் தடுப்பதற்கு அவள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாள் தெரியுமா? இதுநாள் வரையில் தந்தையின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசி அறியாதவள், விக்கிரமனுக்காகச் சக்கரவர்த்தியிடம் எவ்வளவோ சண்டை பிடித்தாள்...." "அப்படியா சுவாமி? அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டுமென்று எனக்கும் ஆசை உண்டாகிறது. ஆனால் அவள் எதற்காக இந்த அபாக்கியசாலியைத் தேடிக் கொண்டு வரப்போகிறாள்?" "இல்லை, அம்மா! இல்லை நீ அபாக்கியசாலி இல்லை. விக்கிரமனைப் போன்ற வீரப் புதல்வனைப் பெற்ற உன்னை அபாக்கியசாலி என்று சொல்ல முடியுமா? குந்தவியும் உன்னைத் தேடிக்கொண்டு வரத்தான் போகிறாள்; சீக்கிரத்திலேயே வருவாள்!" என்றார் சிவனடியார்.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 12

அத்தியாயம் பன்னிரண்டு
ராணியின் துயரம் 
சிவனடியார் படகிலிருந்து இறங்கியதும் அருள்மொழி அவரை நமஸ்கரித்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் ததும்பிற்று. "சுவாமி! விக்கிரமன் எங்கே?" என்று சோகம் நிறைந்த குரலில் அவள் கதறி விம்மியபோது, சிவனடியாருக்கு மெய்சிலிர்த்தது. பொன்னன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மரங்களின் மீதிருந்த பறவை இனங்களும் அந்தச் சோகக் குரலைக் கேட்கச் சகிக்காதவை போல் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்து சென்றன. "அருள்மொழி! இது என்ன பைத்தியம்? உன்னுடைய பதி உனக்கு என்ன சொல்லிவிட்டுப் போனார்? நீ வீரத்தாயாக இருக்க வேண்டுமென்று அவர் சொன்ன கடைசி வார்த்தையை மறந்துவிட்டாயா? இப்படியும் தைரியத்தை இழக்கலாமா? வா, அரண்மனைக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம்" என்றார் சிவனடியார். மாஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருந்த அழகிய பாறை வழியாக எல்லாரும் வசந்த மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஒரு காலத்தில் எவ்வளவு குதூகலமும் கொண்டாட்டமுமாகயிருந்த வசந்த மாளிகை இப்போது பொலிவிழந்து சூனியமாகக் காணப்பட்டது. அரண்மனை ஊழியர்களின் முகங்களும் கலையின்றிச் சோகம் நிறைந்து தோன்றின. மாளிகை முன் மண்டபத்திலே புலித்தோல் விரித்திருந்த உயரமான பீடத்தில் சிவனடியார் அமர்ந்தார். அருள் மொழி கீழே வெறுந் தரையில் உட்கார்ந்தாள். "அம்மா! உன் மனத்தைக் கலங்க விடக் கூடாது" என்று சிவனடியார் ஆரம்பித்தபோது, அருள்மொழி அவரைத் தடுத்து துக்கம் பொங்கும் குரலில் கூறினாள்: "ஐயோ! மனத்தைக் கலங்கவிடக் கூடாது என்கிறீர்களே? மனத்தைத்தான் நான் கல்லாகச் செய்து கொண்டு விட்டேனே? என் தேகமல்லவா கலங்குகிறது? குழந்தையை நினைத்தால் வயிறு பகீரென்கிறதே! குடல் எல்லாம் நோகிறதே! நெஞ்சை இறுக்கிப் பிழிவது போல் இருக்கிறதே! நான் என்ன செய்வேன்? - சுவாமி! விக்கிரமனைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்தீர்களே, அந்த வாக்கை நிறைவேற்றினீர்களா?" "ஏன் நிறைவேற்றவில்லை அருள்மொழி நிறைவேற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனுடைய உயிரைக் காப்பாற்றித் தருகிறேன் என்று உனக்கு வாக்குக் கொடுத்தேன். அவனுடைய உயிரைக் காப்பாற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனை வீரமகனாகச் செய்வதாக அவனுடைய தந்தைக்கு வாக்களித்திருந்தேன். அதையும் நிறைவேற்றியே இருக்கிறேன். அம்மா! நீ மட்டும் அன்று காஞ்சியில் பல்லவ சக்கரவர்த்தியின் நீதி சபையில் இருந்திருந்தாயானால், உடல் பூரித்திருப்பாய்! பொய்யாமொழிப் பெருமான், "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்று சொன்னது உன் விஷயத்தில் மட்டும் பொய்யாகப் போகுமா? சக்கரவர்த்தி எவ்வளவோ நல்ல வார்த்தை சொன்னார் விக்கிரமனுக்கு. 'பல்லவ சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிக் கப்பங்கட்டிக் கொண்டு வருவதாயிருந்தால் உன்னுடைய துரோகத்தை மன்னித்து சோழ நாட்டுக்கும் பட்டங் கட்டுகிறேன்!' என்றார். விக்கிரமன் அணுவளவாவது மனம் சலிக்க வேண்டுமே? மலையைப்போல் அசையாமல் நின்றான். அதுமட்டுமா? சக்கரவர்த்தியையே தன்னுடன் சண்டைக்கு அழைத்தான். 'நீர் வீரன் என்பது உண்மையானால் என்னுடன் வாட்போர் செய்ய வாரும்; என்னை ஜெயித்து விட்டுப் பிறகு கப்பம் கேளும்' என்றான். அவனுடைய கண்களிலேதான் அப்போது எப்படித் தீப்பொறி பறந்தது? அருள்மொழி! அதைப் பார்க்க நான் கொடுத்து வைத்திருந்தேன்; நீதான் அந்தப் பாக்கியத்தைச் செய்யவில்லை!" ஆவலினால் விரிந்த கண்களில் கண்ணீர் ததும்ப மேற்கூறிய விவரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி கூறினாள்:- "நான் பாக்கியமற்றவள்தான் அதற்கும் சந்தேகமா? பதியைப் போர்க்களத்தில் பலி கொடுத்து விட்டு, இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். மகன் தேசப் பிரஷ்டனாகிக் கண் காணாத தேசத்துக்குப் போன பிறகும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறேன், சுவாமி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வரப்போகிறார் என்று சொல்லுகிறார்களே, அது உண்மையா? அப்படி வந்தால் அவர் காலில் விழுந்து 'என்னையும் விக்கிரமனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பி விடுங்கள்!" என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்...." "என்ன சொன்னாய், அருள்மொழி! அழகுதான்! உன் புருஷனுடைய ஜன்ம சத்ருவின் காலில் விழுந்தா கெஞ்சுவாய்! வீர சொர்க்கத்தில் இருக்கும் பார்த்திப ராஜா இதை அறிந்தால் சந்தோஷப்படுவாரா! யோசித்துப் பார்!" "ஆமாம், அவர் சந்தோஷப்படமாட்டார்; நானும் அவருடைய சத்ருவிடம் பிச்சைக் கேட்கப் போகமாட்டேன்! ஏதோ ஆத்திரப்பட்டுச் சொல்லி விட்டேன். ஆகா! அவர் தான் என்னவெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினார்? கன்னியாகுமரியிலிருந்து இமய பர்வதம் வரையில் புலிக்கொடி பறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாரே! அவருடைய பிள்ளைக்கு இந்தப் பெரிய தேசத்தில் இருக்கவும் இடமில்லாமல் போய்விட்டதே...." "பார்த்திப மகாராஜா வேறொரு மனக்கோட்டையும் கட்டவில்லையா அம்மா? சோழ ராஜ்யம் கடல்களுக்கு அப்பாலுள்ள தேசங்களிலும் பரவ வேண்டுமென்று அவர் ஆசைப்படவில்லையா? இரகசிய சித்திர மண்டபத்தில் அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்" "ஐயோ! அவருடைய ஆசை இம்மாதிரியா நிறைவேற வேண்டும்? விக்கிரமன் இன்று கடல்களுக்கப்பாலுள்ள இராஜ்யங்களைப் பிடிப்பதற்காகப் படையெடுத்தா போயிருக்கிறான்? எந்த காட்டுமிராண்டித் தீவில் கொண்டு போய் அவனை விட்டிருக்கிறார்களோ? காட்டிலும் மலையிலும் எப்படி அலைந்து கஷ்டப்படுகிறானோ? ஏன் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், சுவாமி?" "உன்னை நான் ஒரு நாளும் ஏமாற்ற மாட்டேன் அம்மா! உன்னை ஏமாற்றி எனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? உன் மகனுக்கு ஒரு குறையும் வராது என்பது என் நம்பிக்கை. விக்கிரமனுக்கு முன்னால் யாரும் தேசப் பிரஷ்டராகிக் காட்டுக்குப் போனதில்லையா? இராமன் போகவில்லையா? பஞ்சபாண்டவர்கள் போகவில்லையா? விக்கிரமன் கடல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள் எல்லாம் அவனுடைய வீர பராக்கிரமங்களை இன்னும் அதிகமாக வளர்க்கும். திரும்பித் தாய் நாட்டுக்கு அவன் வரும்போது...." "ஐயோ! அவன் வரவேண்டாம், சுவாமி. வரவேண்டாம். தாய்நாட்டில் காலடி வைத்தால் சிரசாக்கினை என்றுதான் சக்கரவர்த்தி விதித்திருக்கிறாரே? எங்கேயாவது கண்காணாத தேசத்திலாவது அவன் உயிரை வைத்துக் கொண்டிருக்கட்டும்; அதுவே போதும்!" என்றாள் அருள்மொழி. "ஆனால் அப்படி அவன் வராமல் இருக்க முடியாது, அருள்மொழி! என்றைக்காவது ஒரு நாள் அவன் வந்து தான் தீருவான். தாயின் பாசமும் தாய் நாட்டின் பாசமும் அவனைக் கவர்ந்து இழுக்கும். இந்த இரண்டு பாசங்களைக் காட்டிலும் வலிமை பொருந்திய இன்னொரு பாசமும் சேர்ந்திருக்கிறது. உனக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை...." என்று சொல்லிச் சிவனடியார் நிறுத்தினார். "என்ன சொல்லுகிறீர்கள், சுவாமி!" "ஆமாம்; தாயின் அன்பையும் தாய்நாட்டுப் பற்றையும் காட்டிலும் பெரியதொரு சக்தியும் அவனைத் திரும்பவும் இத்தேசத்துக்கு வரும்படி இழுக்கும். அது ஒரு இளம் பண்ணின் கருவிழிகளிலுள்ள காந்த சக்தி தான். அம்மா! நான் இன்று பற்றை அறுத்த துறவியானாலும் பூர்வாசிரமத்தில் ஸ்திரீ பிரேமையினால் ஏற்படும் இன்ப துன்பங்களை அறிந்தவன்...." "இது என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே? விக்கிரமனுக்கும் ஸ்திரீ பிரேமைக்கும் என்ன சம்பந்தம்?" என்று வியப்புடன் கேட்டாள் அருள்மொழி. சிவனடியார் புன்னகையுடன் கூறினார்:- "ஒவ்வொரு தாயும் மகனைப் பற்றி இப்படித்தான் வெகுகாலம் எண்ணிக் கொண்டிருக்கிறாள். கடைசியில் நேருக்கு நேர் உண்மையைக் காணும் போது திடுக்கிடுகிறாள். நீயாவது முன்னாலேயே தெரிந்துகொள், அம்மா! உன் மகன் விக்கிரமன் காஞ்சி நகரின் வீதியில் ஒரு கன்னியைச் சந்தித்தான். அவனைக் குறுக்கும் நெடுக்குமாய்ச் சங்கிலியால் பிணித்துக் குதிரைமீது கூட்டிக்கொண்டு போன போதுதான் அந்தச் சந்திப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலேயே அந்தப் பெண்ணும் தன்னுடைய உள்ளத்தை அவனுக்குப் பறிகொடுத்து விட்டாள். இது நான் கேட்டும் ஊகித்தும் அறிந்த விஷயம். ஆனால் நேரில் நானே ஒரு அதிசயத்தைப் பார்த்தேன். மாமல்லபுரத்துக் கடற்கரையில் விக்கிரமனை ஏற்றிச் சென்ற கப்பல் கிளம்பப் கரையோரமாய்ச் செல்ல ஆரம்பித்த சமயத்தில், அந்தப் பெண் காஞ்சியிலிருந்து ஓடோ டியும் வந்து சேர்ந்தாள்; மறுபடியும் அவர்களுடைய கண்கள் சந்தித்தன; உள்ளங்கள் பேசிக் கொண்டன; காதலும் கனிவும் ததும்பிய அந்தப் பெண்ணின் விசால நயனங்களை விக்கிரமனால் ஒருநாளும் மறக்க முடியாது. இரவிலும் பகலிலும் விழித்திருக்கும் நிலையிலும் தூக்கத்திலே கனவிலும் அந்தப் பெண்ணின் மதிவதனம் அவன் முன்னால் தோன்றிக் கொண்டுதானிருக்கும். எங்கே இருந்து எந்தத் தொழில் செய்தாலும், எத்தகைய இன்ப துன்பங்களை அனுபவித்தாலும் விக்கிரமன் அந்தப் பெண்ணை மறக்க மாட்டான். என்றைக்காவது ஒருநாள் அவளைப் பார்க்கும் ஆசையுடன் அவன் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தே தீருவான்." இத்தனை நேரமும் திகைத்து உட்கார்ந்து கொண்டிருந்த அருள்மொழி "ஐயோ! எனக்கு மிஞ்சியிருந்த செல்வமெல்லாம் என் பிள்ளையின் அன்பு ஒன்றுதான், அதற்கும் ஆபத்து வந்துவிட்டதா? அந்தப் பெண் யார் சுவாமி!" என்று தீனக்குரலில் கேட்டாள். "பல்லவச் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி" "ஆகா! என் பதியினுடைய பரம சத்ருவின் மகளா? சுவாமி! என்னமோ செய்கிறதே! தலையைச் சுற்றுகிறதே!" என்றாள் அருள்மொழி. அடுத்த கணம் தரையில் மூர்ச்சித்து விழுந்தாள்.

பார்த்திபன் கனவு பாகம் - 2 அத்தியாயம் - 11

அத்தியாயம் பதினொன்று
பொன்னனின் சந்தேகம்
பொன்னி ஆற்றின் வெள்ளத்தின் மீது மற்றொரு நாள் பாலசூரியனின் பொற் கிரணங்கள் படிய, நதி பிரவாகமானது தங்கம் உருகி வெள்ளமாய்ப் பெருகுவது போலக் காட்சி தந்தது. அந்த பிரவாகத்தைக் குறுக்கே கிழித்துக் கொண்டும், வைரம், வைடூரியம் முதலிய நவரத்தினங்களை வாரித் தெளித்துக் கொண்டும், பொன்னனுடைய படகு தோணித் துறையிலிருந்து கிளம்பி வசந்த மாளிகையை நோக்கிச் செல்லலாயிற்று. படகில் ஜடா மகுடதாரியான சிவனடியார் வீற்றிருந்தார். கரையில் பொன்னனுடைய மனைவி நின்று, படகு போகும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நதியில் படகு போய்க் கொண்டிருந்தபோது, பொன்னனுக்கும் சிவனடியாருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது. "பொன்னா! கடைசியில் இளவரசருடன் எவ்வளவு பேர்தான் ஓர்ந்தார்கள்?" என்று சிவனடியார் கேட்டார். "அந்த அவமானத்தை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி! ஆகா! அந்தக் கடைசி நேரத்தில் மகாராணிக்குச் செய்தி சொல்லும்படி மட்டும் இளவரசர் எனக்குக் கட்டளையிடாமற் போயிருந்தால்...." "என்ன செய்து விட்டிருப்பாய், பொன்னா? பல்லவ சைன்யத்தை நீ ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ?" "ஆமாம், ஆமாம் நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய வேண்டியதுதான். நானும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த உயிரை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறனேல்லவா? ஆனால், சுவாமி! என்னத்துக்காக நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? மகாராணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடம்பைச் சுமக்கிறேன்..." "மகாராணியின் வார்த்தைக்காக மட்டுந்தானா பொன்னா? நன்றாக யோசித்துப் பார், வள்ளிக்காகக் கொஞ்சங்கூட இல்லையா? "வள்ளி அப்படிப்பட்டவள் இல்லை, சுவாமி! எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறவள் அவள் இல்லை. வீரபத்திர ஆச்சாரியின் பேத்தி அல்லவா வள்ளி? ஆகா! அந்தக் கிழவனின் வீரத்தைத்தான் என்னவென்று சொல்வேன்?" "வீரபத்திர ஆச்சாரி இதில் எப்படி வந்து சேர்ந்தான் பொன்னா?" "கிழவனார் சண்டை போடும் உத்தேசத்துடனேயே வரவில்லை என்ன நடக்கிறதென்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் இளவரசர் அநாதைபோல் நிற்பதைப் பார்த்ததும் அவருக்கு ஆவேசம் வந்துவிட்டது. இளவரசருடைய கட்சியில் நின்று போரிடுவதற்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில் வந்து சேர்ந்தவர்கள் என்னைத் தவிர ஐந்தே பேர்தான். அவர்கள் கிராமங்களிலிருந்து வந்த குடியானவர்கள் திடீரென்று நாலாபுறத்திலிருந்தும் வீரகோஷத்துடன் வந்த பல்லவ வீரர்களைப் பார்த்ததும், அந்தக் குடியானவர்கள் கையிலிருந்த கத்திகளைக் கீழே போட்டுவிட்டுத் திகைத்துப் போய் நின்றார்கள். இதையெல்லாம் பார்த்தார் வீரபத்திர ஆச்சாரி. ஒரு பெரிய கர்ஜனை செய்து கொண்டு கண்மூடித் திறக்கும் நேரத்தில் இளவரசர் நின்ற இடத்துக்கு வந்துவிட்டார். கீழே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுத்துச் சுழற்றத் தொடங்கினார். 'வீரவேல்! வெற்றி வேல்! விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!' என்று அவர் போட்ட சத்தம் நெடுந்தூரத்திற்கு எதிரொலி செய்தது. அடுத்த கணத்தில் பல்லவ வீரர்கள் வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆகா! அப்போது நடந்த ஆச்சரியத்தை நான் என்னவென்று சொல்வேன், சுவாமி? கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா? வாளை வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். தொப்புத் தொப்பென்று பல்லவ வீரர்கள் மண்மேல் சாய்ந்தார்கள். ஏழெட்டு வீரர்களை யமலோகத்துக்கு அனுப்பி விட்டுக் கடைசியாக அவரும் விழுந்து விட்டார். இதையெல்லாம் தூரத்தில் நின்று தளபதி அச்சுதவர்மர் பார்த்துக் கொண்டிருந்தாராம். கிழவனாரின் வீரத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போய் விட்டாராம். அதனாலேதான் அந்தத் தீரக் கிழவருடைய உடலைச் சகல மரியாதைகளுடன் எடுத்துப் போய்த் தகனம் செய்யும்படியாகக் கட்டளையிட்டாராம்." "அதில் ஆச்சரியம் என்ன பொன்னா! வள்ளியின் பாட்டனுடைய வீர மரணத்தைக் கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த எனக்குக்கூட உடம்பு சிலிர்க்கிறது. ஒரு தேசமானது எவ்வளவுதான் எல்லா விதங்களிலும் தாழ்வு அடைந்திருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு வீரபுருஷனுக்குப் பிறப்பளித்திருக்கும்போது, அந்தத் தேசத்துக்கு இன்னும் ஜீவசக்தி இருக்கிறது என்று சொல்வதில் தடை என்ன? சோழநாடு நிச்சயம் மேன்மையடையப் போகிறது என்று நம்பிக்கை எனக்கு இப்போது உண்டாகிறது" என்றார் சிவனடியார். சற்றுப் பொறுத்து, "அப்புறம் என்ன நடந்தது?" என்று கேட்டார். "அப்புறம் என்ன? இளவரசரும் நானும் கிழவருடைய ஆச்சரியமான பராக்கிரமச் செயலைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றுவிட்டோ ம். அவர் விழுந்ததும் நாங்கள் இருவரும் ஏக காலத்தில் 'ஆகா' என்று கதறிக் கொண்டு அவர் விழுந்த திசையை நோக்கி ஓடினோம். உடனே, இளவரசரை அநேக பல்லவ வீரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நான் வெறி கொண்டவனைப் போல் என் கையிலிருந்த வாளை வீசிப் போரிட ஆரம்பித்தேன். அப்போது, "நிறுத்து பொன்னா!" என்று இளவரசரின் குரல் கேட்டது. குரல் கேட்ட பக்கம் பார்த்தேன். இளவரசரைச் சங்கிலியால் பிணித்திருந்தார்கள். அவர் 'இனிமேல் சண்டையிடுவதில் பிரயோஜனமில்லை பொன்னா! எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். மகாராணியிடம் போய் நடந்ததைச் சொல்ல வேண்டும். மேற்கொண்டு என்ன நடந்தபோதிலும், என் தந்தையின் பெயருக்கு அவமானம் வரும்படியான காரியம் மட்டும் செய்யமாட்டேன் என்று நான் சபதம் செய்ததாய்த் தெரியப்படுத்த வேண்டும்" என்றார். எனக்குப் பிரமாதமான ஆத்திரம் வந்தது. 'மகாராஜா! உங்களைப் பகைவர்களிடம் விட்டுவிட்டு நான் போகவா?' என்று கத்திக் கொண்டு என் வாளை வீசினேன். பின்பிறமிருந்து என் மண்டையில் பலமான அடி விழுந்தது. உடனே நினைவு தவறிவிட்டது. அப்புறம் காராக்கிரகத்திலேதான் கண்ணை விழித்தேன்." "ஓகோ! காராக்கிரகத்தில் வேறு இருந்தாயா? அப்புறம் எப்படி விடுதலை கிடைத்தது?" "மறுநாளே விடுதலை செய்துவிட்டார்கள். இளவரசரைத் தவிர மற்றவர் களையெல்லாம் மன்னித்து விட்டுவிடும்படி மாமல்ல சக்கரவர்த்தியிடமிருந்து கட்டளை வந்ததாம்" என்றான் பொன்னன். "சக்கரவர்த்தி எவ்வளவு நல்லவர் பார்த்தாயா பொன்னா? உங்கள் இளவரசர் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டும்? அதனால் தானே அவரைச் சக்கரவர்த்தி தேசப்பிரஷ்டம் செய்ய நேர்ந்தது" என்றார் சிவனடியார். "ஆமாம்; நரசிம்ம சக்கரவர்த்தி ரொம்ப நல்லவர்தான்; பார்த்திப மகாராஜாவும், விக்கிரம இளவரசரும் பொல்லாதவர்கள்!" என்றான் பொன்னன். பிறகு, "நான் சக்கரவர்த்தியைப் பார்த்ததேயில்லை. பார்க்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாயிருக்கிறது. உறையூர்க்கு எப்போதாவது வருவாரா, சுவாமி?" என்றான். "ஆமாம்; சீக்கிரத்திலேயே வரப்போகிறார் என்று தான் பிரஸ்தாபம். ஏது பொன்னா! சக்கரவர்த்தியிடம் திடீரென்று உனக்கு அபார பக்தி உண்டாகிவிட்டது போல் தெரிகிறதே! சண்டையில் செத்துப் போகவில்லையென்று கவலைப்பட்டாயே! இப்போது பார்த்தாயா? உயிரோடு இருந்ததனால் தானே உனக்குச் சக்கரவர்த்தியைப் பற்றிய உண்மை தெரிந்து அவரிடம் பக்தி உண்டாயிருக்கிறது!" "ஆமாம்; சக்கரவர்த்தியிடம் எனக்கு ரொம்ப பக்தி உண்டாகியிருக்கிறது. எனக்கு மட்டுமில்லை; இதோ என்னுடைய வேலுக்கும் பக்தி உண்டாகியிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே பொன்னன் படகில் அடியில் கிடந்த வேலை ஒரு கையால் எடுத்தான். "இந்த வேலுக்குச் சக்கரவர்த்தியிடம் சொல்ல முடியாத பக்தி; அவருடைய மார்பை எப்போது தழுவப் போகிறோம் என்று தவம் கிடக்கிறது" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரின் மார்புக்கு நேரே வேலை நீட்டினான். சிவனடியார் முகத்தில் அப்போது புன்சிரிப்புத் தவழ்ந்தது. "பொன்னா! நான்தான் சக்கரவர்த்தி என்று எண்ணிவிட்டாயா, என்ன?" என்றார். பொன்னன் வேலைக் கீழே போட்டான். "சுவாமி! சக்கரவர்த்தி எவ்வளவுதான் நல்லவராயிருக்கட்டும்; மகா வீரராயிருக்கட்டும்; தெய்வாம்சம் உடையவராகவே இருக்கட்டும் அவர் எனக்குப் பரம சத்துரு! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவரை நான் நேருக்கு நேர் காண்பேன் அப்போது...." என்று பொன்னன் பல்லை நெற நெறவென்று கடித்தான். சிவனடியார் பேச்சை மாற்ற விரும்பியவராய்" ஏன் பொன்னா! அன்றைய தினம் மாரப்ப பூபதி உங்களுக்கு அருகில் வரவேயில்லையா?" என்று கேட்டார். "அந்தச் சண்டாளன் பேச்சை ஏன் எடுக்கிறீர்கள்? அவன் இளவரசரையும் தூண்டி விட்டுவிட்டு, அச்சுதவர்மரிடம் போய்ச் சகல விவரங்களையும் தெரிவித்து விட்டான். அப்படிப்பட்ட துரோகி அன்றைக்கு ஏன் கிட்ட வரப்போகிறான்? ஆனால் சுவாமி! அவனுடைய வஞ்சகப் பேச்சில் நாங்கள் எல்லாருமே ஏமாந்துவிட்டோ ம். வள்ளி ஒருத்தி மட்டும், "பூபதி பொல்லாத வஞ்சகன்; அவனை நம்பக் கூடாது" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதுதான் கடைசியில் சரியாப் போச்சு" என்றான் பொன்னன். "வள்ளி ரொம்பவும் புத்திசாலி. பொன்னா! சந்தேகமேயில்லை, அவள் ஒரு பெரிய தளதிபதியின் மனைவியாகயிருக்கத் தகுந்தவள்..." "என்ன சொன்னீர்கள், சுவாமி!" "வள்ளி ஒரு பெரிய சேனாதிபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்றேன்." "நீங்கள் சொன்ன இதே வார்த்தையை இதற்கு முன்னாலும் ஒருவன் சொன்னதுண்டு." "யார் அது?" "மாரப்ப பூபதிதான்; அவன் சோழ சேனாதிபதியாயிருந்த காலத்தில் அப்படிச் சொன்னான்." "ஓகோ!" "எனக்கு ஒவ்வொரு சமயம் என்ன தோன்றுகிறது தெரியுமா? தாங்கள் கோபித்துக் கொள்ளாமலிருந்தால் சொல்லுகிறேன்." "தாராளமாய்ச் சொல்லு; பொன்னா! நான் சந்நியாசி; ஐம்புலன்களையும் அடக்கிக் காமக் குரோதங்களை வென்றவன்." "நீங்கள் கூட மாரப்ப பூபதியின் ஆளோ, அவனுடைய தூண்டுதலினால் தான் இப்படி வேஷம் போட்டுக் கொண்டு வஞ்சகம் செய்கிறீர்களோ - என்று தோன்றுகிறது." சிவனடியார் கலகலவென்று சிரித்துவிட்டு, "இதைப் பற்றி வள்ளியின் அபிப்ராயம் என்ன என்று அவளை எப்போதாவது கேட்டாயா?" என்றார். "வள்ளிக்கு உங்களிடம் ஒரே பக்தி. 'நயவஞ்சகனை நம்பி மோசம் போவாய், உத்தம புருஷரைச் சந்தேகிப்பாய்!' என்று என்னை ஏசுகிறாள். மாரப்ப பூபதி இப்படிப்பட்ட பாதகன் என்று தெரிந்த பிறகு அவளுடைய கை ஓங்கிவிட்டது. என்னைப் பரிகாசம் பண்ணிக் கொண்டேயிருக்கிறாள்." "நான்தான் சொன்னேனே பொன்னா, வள்ளி புத்திசாலி என்று அவள் புத்திமதியை எப்போதும் கேளு. வள்ளி தளபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்று நான் சொன்னது மாரப்ப பூபதி சொன்ன மாதிரி அல்ல; நீயும் தளபதியாகத் தகுந்தவன்தான்!" "ஆமாம் யார் கண்டது? விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனம் ஏறும்போது, ஒரு வேளை நான் தளபதியானாலும் ஆவேன்." "இரண்டும் நடக்கக் கூடியதுதான்." "ஆகா! இந்தப் பெரிய பாரத பூமியில் எங்கள் இளவரசருக்கு இருக்க இடமில்லையென்று கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டாரே, சக்கரவர்த்தி! அவருடைய நெஞ்சு எப்படிப்பட்ட கல் நெஞ்சு! அதைக் காட்டிலும் ஒரே அடியாக உயிரை வாங்கியிருந்தாலும் பாதகமில்லை...." "நீ சொல்வது தவறு பொன்னா! உயிர் உள்ளவரையில் எப்படியும் நம்பிக்கைக்கும் இடமுண்டு. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்முடைய மனோரதங்கள் நிறைவேறும். நீ வேணுமானால் மகாராணியைக் கேட்டுப் பார். மகன் இந்த மட்டும் உயிரோடு இருக்கிறானே என்று மகாராணிக்குச் சந்தோஷமாய்த்தானிருக்கும்....அதோ மகாராணி போலிருக்கிறதே!" என்று சிவனடியார் வியப்புடன் சொன்னார். அப்போது படகு வசந்த மாளிகைத் தீவின் கரைக்குச் சமீபமாக வந்து கொண்டிருந்தது. கரையில் அருள்மொழித் தேவியும் ஒரு தாதியும் வந்து தோணித் துறையின் அருகில் நின்றார்கள். அருள்மொழித் தேவி படகிலிருந்த சிவனடியாரை நோக்கிப் பயபக்தியுடன் கை கூப்பிக் கொண்டு நிற்பதைப் பொன்னன் பார்த்தான். உடனே சிவனடியாரை நோக்கி, "சுவாமி! ஏதோ நான் தெரியாத்தனமாக உளறிவிட்டேன்; அதையெல்லாம் மன்னிக்க வேண்டும்" என்று உண்மையான பச்சாதாபத்துடனும் பக்தியுடனும் கூறினான்.